வாசிங்டன், மே 6- கடல் என்றாலே மர்மம்தான். ஆனால், அந்த மர்மத்தை உடைத்து, சுனாமி அலைகளின் ரகசியத்தை விண்வெளியில் இருந்து துல்லி யமாக படம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது நாசாவின் SWOT செயற்கைக்கோள். ரஷ்யாவின் கம்சட்கா அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும், தொடர்ந்து உருவான சுனாமியும் அறிவியலாளர்களுக்கு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
சுனாமி அலை
பொதுவாகச் சுனாமி வரும்போது, அதன் வேகத்தையும் உயரத்தையும் அளவிடுவது கடினமான காரியம். இதற்கு முன் இருந்த செயற்கைக் கோள்கள் மூலம் கடலின் ஒருசிறு பகுதியை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால், SWOT (Surface Water and Ocean Topography) செயற்கைக்கோள், அகலமான கோணத்தில் ஒட்டுமொத்த கடல் பரப்பையும் ஸ்கேன் செய்து, சுனாமி அலைகள் நகர்வதை ஒரு சினிமா போலப் படம்பிடித்துள்ளது. கடந்த ஜூலை 29இல், குரில்-கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தின் போதுதான் இந்த அபூர்வக் காட்சிகள் பதிவாகின.
இத்தனை காலமும் சுனாமி அலைகள் என்பது ஒரு பெரும் சுவர் போலச் சிதறாமல் நேராகப் பயணிக்கும் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால், இந்த புதிய தரவுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்துள்ளன. சுனாமி அலைகள் ஒரே சீராகப் பயணிக்காமல், கடலில் நகரும்போது பல குட்டி குட்டி அலைகளாகப் பிரிந்து ஆற்றலைச் சிதறடிக்கின்றன (Wave Dispersion). இதன் மூலம், சுனாமி கரையைத் தொடும்போது நாம் எதிர்பார்த்ததை விட அதன் தாக்கம் மற்றும் நேரம் மாறக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 300 கி.மீ நீளத்திற்குப் பிளவை ஏற்படுத்தியதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், செயற்கைக்கோள், கடலுக்கடியில் உள்ள DART மிதவை உணர்விகள் கொடுத்த தகவல்களை வைத்துப் பார்த்தபோது, அந்த நிலநடுக்க பிளவு 400 கி.மீ தூரம் வரை நீண்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டது. இது நிலநடுக்கத்தின் தீவிரத்தை நாம் இன்னும் ஆழ மாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. 1952இல் இதே பகுதியில் ஏற்பட்ட பேரிடருக்குப் பிறகுதான் நவீனச் சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் உருவாயின. இப்போது கிடைத்துள்ள இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம், எச்சரிக்கை முறைகளில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. சுனாமி எந்த நேரத்தில் கரையைத் தொடும்? எவ்வளவு உயரத்தில் அலைகள் வரும்? போன்றவற்றை இனி மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். இந்தச் செயற்கைக்கோள் தரவுகளை நேரடி கண்காணிப்பில் பயன்படுத்துவதன் மூலம், கடலோர மக்களுக்குச் சரியான நேரத்தில் எச்சரிக்கை வழங்கி ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்த விஷயத்தை, புதிய தொழில்நுட்பம் பொய்யாக்கிப் புது உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. விண்வெளியில் இருந்து கடலை உற்று நோக்கும் இந்த முயற்சி, பேரிடர் மேலாண் மையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. இயற்கையின் சீற்றத்தை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், நவீன அறிவியலின் துணையோடு அதன் பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சிறந்த சான்று.
