
குஜராத்தில் 34 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பெண் ஒருவர் பேயாக இன்னும் அந்தப் பகுதியில் உலா வருவதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய தற்செயல் நிகழ்வுகள் மற்றும் பழைய கட்டடங்களில் ஏற்படும் பயமுறுத்தும் அனுபவங்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
பழைய கட்டடங்களில் ‘பேய்கள்’ நடமாட்டமா? – அறிவியல் சொல்லும் உண்மை!
பழைய கட்டடங்களுக்குச் செல்லும்போது பலருக்கும் இனம் புரியாத பயம், பதற்றம் அல்லது யாரோ நம்மைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இதற்கு பேய்கள் பூதங்கள் எனப்படு பவையோ காரணமல்ல, இன்ப்ராசவுண்ட் (Infrasound) எனப்படும் ஒரு வகை ஒலிகளே காரணம் என்று கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏன் நமக்குப் பயம் ஏற்படுகிறது?
மனிதக் காதுகளால் 20 ெஹர்ட்சுக்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்க முடியாது. இவைதான் ‘இன்ப்ராசவுண்ட்’ எனப்படுகின்றன.
பழைய கட்டடங்களில் இருக்கும் துருப்பிடித்த குழாய்கள், பழுதடைந்த காற்றோட்ட வசதிகள் பழைய இயந்திரங்கள் மற்றும் காற்றின் வேகம் ஆகியவை இந்த மிகக் குறைந்த அதிர்வெண் ஒலிகளை உருவாக்குகின்றன.
உடல் ரீதியான பாதிப்பு
இந்த ஒலிகள் நம் காதுகளுக்குக் கேட்காவிட்டாலும், அவை மனித உடலுக்குள் ஊடுருவி ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கின்றன.
விளைவுகள் என்ன?
இந்த ஹார்மோன் மாற்றம் காரணமாகவே மனிதர்களுக்குக் காரணமே இல்லாமல் கடுமையான எரிச்சல், விவரிக்க முடியாத சோகம், உயிர்ப் பயம் அல்லது பதற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.
குஜராத் காதலி கதையாக இருந்தாலும் சரி, பாழடைந்த பங்களாவாக இருந்தாலும் சரி… அங்கே இருப்பது பேய்கள் அல்ல; நம் நரம்பு மண்டலத்தை மிரட்டும் கண்ணுக்குத் தெரியாத ‘அதிர்வெண்’ ஒலிகள் மட்டுமே!
சென்னை அசோக் நகரில் காவல் பயிற்சி கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு பழைய பங்களா கூட இதே போன்று ஒரு அச்சுறுத்தலுக்கு ஆளானது 30 ஆண்டுகளுக்கு முன்பு இதில் இருந்த அரசு உயரதிகாரி சொத்துத் தகராறு காரணமாக உறவினர்களால் குடும்பத்தோடு கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அப்போதில் இருந்தே இந்த பங்களா மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளது. உள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்கிறது என்று கூறி ‘அது பேய் அலையும் சத்தம்’ என்று எல்லாம் அப்பகுதியில் பேசி பரபரப்பாக்கினர்
இதில் என்ன கூத்து என்றால் அதன் அருகில் இருந்த போக்குவரத்து ‘காவல் பூத்தை’ அங்கிருந்து அகற்றி எதிரே கொண்டு சென்றுவிட்டார்கள்
அதாவது காவலர்கள் கூட இந்த பேய்பயத்திற்கு தப்பவில்லை.
தற்போது அந்த பங்களாவைச் சுற்றி பெரிய அளவில் தகரம் வைத்து மறைத்துவிட்டார்கள். பயம் இன்றும் இன்னும் விடவில்லை.
அறிவியலுக்கு மாற்றான இந்தப் பயங்கள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் கருத்து!
