கிடங்கூர், மே 3 கேரள மாநிலம் அங்கமாலி அருகே கிடங்கூர் மகாவிஷ்ணு கோயில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட வளர்ப்பு யானை திடீரென மதம்பிடித்து ஆவேசமாக நடந்து கொண்டதில், சரக்கு வாகனம் ஓட்டுநர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் மய்யநாட்டைச் சேர்ந்த “மய்யநாடு பார்த்தசாரதி” என்ற யானை, அருகிலுள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற பின்னர், கிடங்கூர் சிறீ மகாவிஷ்ணு கோயில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்டது.
யானையை குளிப்பாட்டி கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அது ஆவேசமாகி ஓடத் தொடங்கியது. இதனால் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. குறிப்பாக ஒரு நான்கு சக்கர வாகனங்கள் பல முறை கவிழ்க்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது.
மேலும், அங்கு இருந்த பொது மக்களை தாக்க முயன்ற நிலையில், அதை கட்டுப்படுத்த முயன்ற சரக்கு வாகன ஓட்டுநர் விஷ்ணு யானையால் மிதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் யானையின் தலைமைப் பாகன் பிரதீப் உட்பட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யானையால் பலியான ஓட்டுநரின் உடலுக்கு அருகில் நீண்ட நேரம் நின்றிருந்ததால், உடலை மீட்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையின் விரைவு மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு வந்து, கால்நடை மருத்துவர் மூலம் மயக்க மருந்து செலுத்தி யானையை அமைதிப்படுத்தினர். பின்னர் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கேரளாவில் கோயில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படும் போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், யானைகள் பயன்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு விதிகளை கேரள உயர்நீதிமன்றம் முன்பே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
