செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், ராஜா சர். முத்தய்யவேள் மற்றும் அவர்களது குடும்பத்தின் முக்கிய உறவுக்காரரும், சென்னை அடையாற்றிலும், ராஜா அண்ணாமலைபுறத்திலும் பல தொடக்கப் பள்ளி முதல் பல பள்ளிகளைத் தொடங்கி கல்வி அளித்து, இளந்தலைமுறைகளுக்கு கல்விக் கண் திறந்த டாக்டர் திருமதி மீனா முத்தய்யா அவர்கள் இன்று (2.5.2026) உதகையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும், வருத்தமும் அடைகின்றோம்.
மறைந்த டாக்டர் மீனா முத்தய்யா ஆச்சி அவர்கள், டாக்டர் ராஜா சர். முத்தய்யா செட்டியார் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் இணைவேந்தர்) அவரது மருமகள் ஆவார்.
டாக்டர் மீனா முத்தய்யா ஆச்சி அவர்கள் அதே வழியில் கல்வித்தொண்டும், சிறப்பான தொண்டறமும் புரிந்த தமிழ்நாட்டின் தலைசிறந்த – எடுத்துக்காட்டான பெண் மணிகளில் சிறந்த ஒருவர்.
தஞ்சை வல்லத்தில் சில ஆண்டுகளுக்குமுன் அவரது தொண்டறத்தைப் பாராட்டி, பெரியார் மணியம்மை (நிகர் நிலைப்) பல்கலைக் கழகத்தில் அவருக்கு ‘‘மதிப்புறு முனைவர்’’ (டாக்டர்) பட்டமளித்து அவரைப் பெருமைப்படுத்தினோம்.
அவரது சிறந்த பண்பாடும், நயத்தக்க நாகரிகமும் உளப்பூர்வ உபசரிப்பும் எடுத்துக்காட்டானவை.
அவரது இழப்பு அந்த செட்டி நாட்டரசர் குடும்பத்திற்கு மட்டுமான இழப்பன்று. தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்குமான ஒரு மாபெரும் இழப்பு என்றே கருத வேண்டும்.
அவரது மறைவு பேரிழப்பு ஆகும். துயருறும் அனைவருக்கும் ஆறுதலையும், அவரது குடும்பத்தாருக்கும், கல்விக் குழுவிற்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.5.2026
