ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இந்தியக் குடியேற்றம்! இங்கிலாந்தை முந்திய இந்திய நாட்டினர்!

2 Min Read

கான்பெரா, மே 2- ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல் முறையாக, அந் நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் 9,71,020 பேர் வசிக்கின்றனர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 5.2 விழுக்காடாகும்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இங்கு இங்கிலாந்தை சேர்ந்தவர்கள்தான் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்தியர்கள் இதனை முறியடித்துள்ளனர். 2013இல் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த இங்கிலாந்து வம்சாவளியினரின் எண் ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து நாட்டவர்களைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் சீனா வைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் (7,32,000), நான்காவது இடத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களும் (6,38,000) உள்ளனர்.

இந்தியாவில் கூட தான் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எல்லாம் ஒரு பிரச்சினையா? என்று கேள்வி எழலாம். விஷயம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாகக் குடியேற்றம் இருந்து வருகிறது. 1990-களின் தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா பொருளாதார மந்தநிலையை சந்திக்காமல் இருப்பதற்கு குடியேற்றமே முக்கியக் காரணம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லைகள் மூடப்பட்டதால் மக்கள் தொகை தற்காலிகமாகச் சரிந்தது. இருப்பினும், அதன் பிறகு வெளிநாடுகளில் பிறந்த குடியிருப்பாளர்களின் பங்கு 2022இல் 29.5 சதவீதத்திலிருந்து, 2025இல் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆக இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் அதிக அளவில் பங்களித்து வருகிறார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு அரசியல் தளத்தில் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியா தனது வரலாற்றிலேயே மிக மோசமான வீட்டு வசதி தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. இதற்கு அதிகப்படியான குடியேற்றமே காரணம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதாவது உழைத்துக் கொடுத்தவர்களுக்கு, உட்கார்ந்து சாப்பிட இடமில்லை என்று குரல் எழுந்துள்ளது.

சில பழைமைவாத கட்சிகள், குறிப்பாக ‘ஒன் நேஷன்’ போன்ற கட்சிகளுக்கு உள்ளூர் மக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன், அயல்நாட்டவர் குடியேற்றத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இக்கட்சி வலுவடைந்தால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் நிலை சிக்கலுக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *