அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கு: எலும்புக் கூட்டை வங்கிக்கு வரவழைத்த அதிகாரத் திமிர்!

3 Min Read

அதிகாரத்திமிர் சாமானியர்களை எந்த அளவு கொடுமைப்படுத்துகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஒடிசா மாநிலத்தில் அண்மையில் அரங்கேறியுள்ளது.

இது அதிகார வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற போக்கை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

2026, ஏப்ரல் 27 அன்று இந்தியாவின் ஒடிசா மாநிலம், கெந்துஜார் (Keonjhar) மாவட்டத்தில் அங்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜித்து முண்டா, தனது சகோதரி இறந்துவிட்டதை நிரூபிப்பதற்காக, புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூட்டை வங்கிக்குக் கொண்டு சென்றார்.

டயனாலி  கிராமத்தைச் சேர்ந்த ஜித்து முண்டா (50) அவரது கணவரை இழந்த அக்கா கல்ரா முண்டா (56) என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அவரது சகோதரியின் வங்கிக் கணக்கில் ரூ.19,000 இருந்துள்ளது.

அதனை எடுக்கச் சென்றபோது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் அவரது இறந்த சகோதரி நேரில் வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர், “தனது சகோதரி இறந்துவிட்டார். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவருக்கு பிள்ளைகள் இல்லை; நான்தான் அவரது தம்பி. அண்மையில் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போது அதில் பணம் உள்ளது தெரியவந்தது. ஆகவே அதை எடுக்க வந்தேன்” என்றார்.

தனது சகோதரியின் இறப்பு தொடர்பாக ஊர் முக்கியஸ்தர் கையால் எழுதிய இறப்புச் சான்றிதழ் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார்.  ஆனால், வங்கி அதிகாரி “சான்றிதழில் ஒடியா மொழியில் உள்ள கையெழுத்து புரியவில்லை. அதனை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மொழிபெயர்த்து நோட்டரி வாங்கிக் கொண்டு வரவும். இல்லை என்றால் உங்கள் அக்கா இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்கவும்” என்று கூறி, அவரை விரட்டி விட்டார்.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு பேருந்துக்குப் பணம் இல்லாததால் நடந்துவந்த, அவர் சான்றிதழை மொழி பெயர்க்க எங்கே செல்வார்?

நோட்டரி, சான்றிதழ் போன்றவை எதுவுமே அந்தப் பாமரருக்கு புரியாத ஒன்றாக இருந்தது.  எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால், அதிகாரிகள் காவலாளியை அழைத்து அவரை வெளியே அனுப்பச் சொல்லிவிட்டனர். மேலும், “உங்கள் அக்கா செத்துப்போனதை உறுதிசெய்து பணம் வாங்கிக்கொண்டு போ” என்று கூறிவிட்டனர்.

தனது சொல்லை அதிகாரிகள் நம்பாததால் ஜித்து முண்டா, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தனது சகோதரியின் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து,  எலும்புக்கூட்டை ஒரு பையில் அடைத்து வங்கிக்குச் சுமந்து வந்துள்ளார். தனது சகோதரி உயிருடன் இல்லை என்பதை நிரூபிக்க அவருக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

வங்கி அதிகாரிகள் வெறும் விதிகளையும், எந்திரத்தனமான நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றுகிறார்களே தவிர, ஒரு வாடிக்கையாளரின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் ‘அடிப்படை மனிதநேயத்தை’ மறந்து விடுகின்றனர். வங்கி விதிகள் என்பது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கும் உருவாக்கப்படுபவை. அந்த விதியை சாமானியருக்கு ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு வேறு ஒன்றாகவும் பார்க்கும் சில அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற போக்கு. மனிதனைத் தனது சகோதரியின் எலும்புக் கூட்டைத் தூக்கி வரும் நிலைக்குத் தள்ளுகிறது என்றால், அந்த அமைப்பில் எவ்வளவு மிகப்பெரிய கோளாறு உள்ளது என்பதைச் சிந்திக்க வேண்டும். அதிகாரிகளின் பிடிவாதம் ஒரு மனிதனின் கண்ணியத்தைச் சிதைத்துள்ளது.

கோடிகளில் கடன் வாங்கி ஏய்க்கும் செல்வந்தர் களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அதே வங்கி விதிகள், பத்தொன்பதாயிரம் ரூபாய்க்காக ஒரு பாமரனைச் சுடுகாடு வரை துரத்தியிருப்பது காலத்தின் கொடுமை. இது ஜித்து முண்டாவின் அறியாமை அல்ல; இந்திய அதிகார வர்க்கத்தின் மனசாட்சி மரணித்துவிட்டதற்கான அடையாளம்! இந்தச் சம்பவம் வெறும் சட்ட விழிப்புணர்வுக்கான பாடம் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தின் கோர முகத்தைப் புரிந்துகொண்டு மக்கள் பொங்கி எழ வேண்டிய – எச்சரிக்கை கொள்ள வேண்டிய நேரமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *