சென்னை, ஏப்.29 சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ படம் பார்த்த தவெக ஆதரவாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வாக்கு எண்ணும் மய்யத்தின் சிசிடிவி அறையில் தொழில் நுட்பத் தலைமை கண்காணிப்பாளராக ஒப்பந்த முறையில் யுவராஜ் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி லேப்டாப்பில் “ஜன நாயகன்” படத்தை பார்த்துக் கொண்டிருந்ததை நிழற்படமாக எடுத்துத் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு சமூக வலைதளங் களில் வைரலான நிலையில், காவல் துறையினர் யுவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொசு ஒழிப்பு, தண்ணீர் தேக்கம் தொடர்பான
புகார்மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை
உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஏப்.29 தமிழ்நாட்டில் கொசு ஒழிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 48 மணி நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நீர் தேக்கம்
சென்னையில் மழைநீர் வடிகால்வாய்கள், காலி மனைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரினால் கொசுக்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்தக் கோரி, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜி.விஜயராஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
விரிவான ஆய்வு
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகள் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, அடுத்த 4 வாரங்களுக்குள் கொசு உற்பத்தி மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் காண விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
துரித நடவடிக்கை
தேங்கியுள்ள நீரை அகற்றுவது, கழிவுநீரை அப்புறப்படுத்துவது மற்றும் கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளைத் தடையின்றி உறுதி செய்ய வேண்டும்.
கொசு ஒழிப்புப் பணிகளுக்கான கால அட்டவணையை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். தண்ணீர் தேக்கம் மற்றும் கொசுத் தொல்லை குறித்து புகார் அளிக்க இலவச உதவி எண்களை உருவாக்க வேண்டும். இந்த எண்கள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்களும் நிர்வாகத் தின் அறிவுரைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தொடர் விடுமுறை
‘மே’ தினம் மற்றும் வார இறுதி நாட்களுக்காக
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, ஏப்.29 தொடர் விடுமுறை, மே தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை வியாழக்கிழமை 475 பேருந்துகளும், 1, 2ம் தேதி 315 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 85 பேருந்துகளும், 1, 2ம் தேதி தலா 75 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து நாளை முதல் 2ம் தேதி வரை தலா 14 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
