அரசு அதிகாரிமீது கழிவுநீரை ஊற்றிய வழக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கு சிறைத் தண்டனை!

2 Min Read

சிந்துதுர்க், ஏப்.29 மகாராட்டிரா மாநிலத்தில் அரசு அதிகாரியை அவமதித்து, அவர் மீது கழிவு நீரை ஊற்றிய வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிந்துதுர்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி, மும்பை – கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, கங்காவலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நிதேஷ் ராணே (தற்போது மீன்வளத்துறை அமைச்சர்), தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பிரகாஷ் ஷெடேக்கரை காட் ஆற்றின் மேம்பாலத்திற்கு வரவழைத்தார்.

அப்போது, பணியில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி ஆத்திரமடைந்த ராணே மற்றும் அவரது ஆதரவாளர்கள், பொறியாளர் பிரகாஷ் மீது சேறு கலந்தகழிவு நீரை ஊற்றி அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை வலுக்கட்டாயமாக சேற்றில் நடக்க வைத்து அவமானப்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

தீர்ப்பு

இந்தச் சம்பவம் தொடர்பாக கங்காவலி காவல்துறையினர் நிதேஷ் ராணே உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சிந்துதுர்க் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வி.என். தேஷ்முக் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தண்டனை: அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.50,000 தொகையை பாதிக்கப்பட்ட பொறியாளர் பிரகாஷுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இ்வ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 29 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி, “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தைக் கையில் எடுக்க எந்த உரிமையும் இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.

தற்போது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிதேஷ் ராணே மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அவரது சிறைத் தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது. ஒரு மாநில அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கும் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டிருப்பது மகாராட்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *