வற்றா ஊற்று!
புரட்சிக்கவிஞர்
இவர்!
புராணப் புரட்டுகளை
புரட்டித் தள்ளிய
‘புல்டோசர்!’
புதுமைகளைத்
தேடித் தேடி
சேகரித்த
புத்தகத் தேன்கூடு!
மயிலம் துதி யமுது
பாடிய
இந்தப் புலவரை
புயற் காற்றாய்
புரட்டியது
மயிலாடுதுறையில்
மழையாய்க் கொட்டிய
தந்தை பெரியார்தம்
பகுத்தறிவுப் போர்
முழக்கம்!
இவர் மையெடுத்தால்
மலை கூட
மடுவாகும்
பாழாறும் கூட
பாலாறாகும்!
பாப்பாவுக்குப்
பாலாடை
வாழும் பார்ப்புக்கோ
கட்டப்படும் பாடை!
பாட்டெழுதும்
பாவலருக்கோ
பாடம் எடுக்கும்
பாவாடை (பா+ஆடை)
எங்கள் கவிஞன்
எனும் போதினிலே
தேன் வந்து பாயுது
திசுக் களிலே!
எதிர்காலப்
புரட்சிக் கோர்
ஏவு கணை!
தோப்புக் கனியாகும்
படிப்பவர்க்கு!
கூவும் குயிலுக்கும்
குயில் பாட்டு!
படம் எடுத்தாடும்
பார்ப்புக்கோ
பாய்ந்திடும் கீரி!
திராவிடம் தந்த
திகட்டாக் கவிஞன்!
திராவிடத் தோளுக்கு
துணிவூட்டும் துப்பாக்கி
வாழ்வான் வற்றா
நீரூற்றாய்
வாரீர் குளித்து
மகிழ்ந்திடவே!
கவிஞர்
கலி.பூங்குன்றன்

