‘காசாவில் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை
தகர்ப்பு’ – இஸ்ரேல் ராணுவம்
ஜெருசலேம், ஏப். 28- வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு பிரிகேட் மற்றும் ‘யஹலோம்’ (Yahalam) சிறப்புப் பொறியியல் பிரிவு இணைந்து கடந்த சில மாதங்களாக காசாவின் வடக்குப்பகுதி மற்றும் பெய்ட் ஹனூன் (Beit Hanoun) பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்தியநிலையில் இந்தச் சுரங்கப்பாதைகளைக் கண்டறிந்து அழித்தன.
அழிக்கப்பட்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசாவில் சுரங்கப்பாதைகள் அழிக்கப்படும் அதே வேளையில், மறுபுறம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
’மத்திய கிழக்கில் அமைதி திரும்ப
ரஷ்யா உதவும்’ – புதின் உறுதி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஏப். 28- மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதினை, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சந்தித்தார். அப்போது அதிபர் புதின் பேசியதாவது:
“மத்திய கிழக்கில் கூடிய விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய ரஷ்யா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளது. ஈரானின் புதிய தலைமை மற்றும் மக்களின் தைரியத்தின் மூலம் இந்த இக்கட்டான காலத்தை அந்த நாடு கடக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போது ரஷ்யாவின் தலையீடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு பன்னாட்டு அளவில் எழுந்துள்ளது.
தெற்கு சூடானில் விமான
விபத்து – 14 பேர் பலி
ஜுபா, ஏப். 28- கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுபாவுக்கு சிறிய ரக விமானம் ஒன்று நேற்று (27.4.2026) புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர் பயணித்தனர்.
தலைநகர் ஜுபா அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான உடன் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாட் நாட்டின் இரு சமூகத்தினரிடையே மோதல்
42 பேர் பலி; 10 பேர் காயம்

நிட்ஜமேனா, ஏப். 28- சாட் நாட்டின் எல்லைப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல்லையை ஒட்டியுள்ள சாட் நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்டகாலமாகவே, விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நீர் வளங்கள் மற்றும் நில வளங்களை பகிர்ந்து கொள்வதில் பதற்றம் நிலவி வருகிறது.
சமீபத்தில் அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே இயற்கை வளங்கள் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானில் நிலவி வரும் உள்நாட்டு போரின் காரணமாக கடந்த பல மாதங்களாக தப்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பகுதியாக, சாடின் கிழக்கு மாகாணங்கள் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
