சென்னை, ஏப். 27- சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கம்
பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 31.33 அடியாக உள்ளது. அணைப்பகுதியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், தற்போது 2064 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர். அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆறு வழியாக வரும் நீர். நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் போன்றவற்றால் செம்பரம்பாக்கத்திற்கு நீர் கிடைக்கிறது
சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதமும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னையின் குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொடர்ந்து நீர் அனுப்பப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
