கோடை வெயிலைச் சமாளிக்க வழிகள்!

கோடை…கோடை என்றவுடன் நம் சிந்தனையில் உதிப்பது சூரியன் மட்டுமில்லை, அதனுடன் சேர்ந்து விடுமுறை நாட்களும், சுற்றுலாத்தலங்களும் தான். ஆனால் இத்தகைய விடுமுறை நாட்களையும், சுற்றுலாத் தலங்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்காத நிலையில் உள்ளது இன்றைய கோடை வெப்பம். பூமியின் பருவ நிலையானது. தற்போதைய சூழலில் பெரிதும் மாற்றமடைந்து காணப்படுகிறது எனலாம். ஒவ்வொரு இடத்திலும் பருவநிலையானது சூழலுக்கு ஏற்ப மழை, வெயில், குளிர், காற்று, வறட்சி என தட்பவெப்பநிலை மாறுபடும். மனிதனின் சுயநலத்தால், பருவநிலையானது தங்களின் வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் அளவு இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டு காணப்படுகிறது. குடையின் உதவி கோடையிலும் தேவை என்கிற அளவிற்கு இருக்கின்றது இன்றைய வெப்பம். புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடின் போன்ற பசுமையில்லா வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுகடந்த தட்பவெப்பநிலையாகும்.

நீர்ச்சத்து குறைதல்

தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான். அதிகரித்த உலகம் வெப்பமயமாதலால்  உண்டாகும் விளைவுகளும் சற்று அதிகமாகவே உள்ளது. வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சினைகளில்  முக்கியமானது உடலின் நீர்சத்து குறைதல். நீர்ச்சத்து குறைந்து உடல் வறண்டு காணும். எனவே உடல் உறுப்புகள் தங்களின் வேலைகளை சரிவர செய்ய இயலாது. முக்கியமாக மூளை மற்றும் சிறுநீரகம். உடல் வறட்சியுற்று பித்தம் தன்னிலை மீறுவதால் மூளை செல்கள்  புத்துணர்ச்சி இல்லாமல் இறுக்கமாக காணப்படும். இதனால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து தோல்நோய்கள், சிறுநீர் தொற்றுகள், வறண்ட காற்றினை சுவாசிக்கும்போது நுரையீரல் ரீதியான ஆஸ்த்மா போன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து இதயம் சார்ந்த நோய்களும் வர வாய்புகள் அதிகம். சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற வகையிலான உணவுப் பழக்க முறைகளும், வாழ்வியல் மாற்றங்களையும் மற்றும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால் நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும். இவற்றில் பெரும்பாலானவை உணவு முறைகளே. இத்துடன் நமது வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்தால்போதும்.

மருத்துவம்

உடல்வெப்பநிலையை தவிர்க்க மோர் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும். மோரில் குடலியக்கத்தை அதிகரிக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களும், லாக்டிக் அமிலம் உள்ளதால் வெப்பதால் உண்டாகும் செரிமான கோளாறை சரிசெய்யும்.

வெள்ளரி, வெண்பூசணி ஜுஸ் சிறந்த நீர்பெருக்கியாக செயல்படும். இவற்றிலுள்ள பொட்டாசியம் அயனிகள் வெப்பத்தால் ஏற்படும் சோடியம் இழப்பை ஈடுக்கட்டும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது. உடனடியாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகளான தர்பூசணி, திராட்சை, பழங்களின் சாறுகளை பனிக்கட்டி சேர்க்காமல் அருந்தலாம். இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சினையைச் சமாளிக்கலாம். மேலும் நன்னாரி மற்றும் வெட்டிவேர் போன்ற மூலிகைகள் சிறந்த ஒரு குளிரூட்டிகளாகும்.

நன்னாரி

நம் முன்னோர் நன்னாரி வேரினை நீரில் ஊற வைத்துக் குடித்து உடல் சூட்டை குறைத்துக் கொண்டனர். நாளடைவில் நன்னாரி வேர் ஊறிய நீருடன் வெல்லப்பாகு சேர்த்துக் கொண்டதால் நன்னாரி சர்பத் ஆனது. இந்த செடியின் வேரை காய வைத்து பதப்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் நன்னாரி மணப்பாகு. நமக்கு தேவையான அளவு நன்னாரி குச்சிகளை இடிகல்லில் வைத்து தட்டிப் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் வடிகட்டி அதனுடன் போதுமான அளவு  எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்தால் நன்னாரி சர்பத் தயார். கோடைகாலத்தில் தாகத்தையும், உடல் சூட்டினையும் தணிக்கக்கூடியது. அது மட்டுமல்ல பித்தத்தையும் குறைக்கக்கூடியது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும். குறிப்பாக கோடைகாலங்களில் போதுமான அளவு நீர் அருந்தாததால் உடல் சூடு அதிகரித்து அடிவயிற்றில் வலியும், சொட்டு சொட்டாக மூத்திரம் வெளியேறும் நிலையும் ஏற்படும். அத்தகைய நேரங்களில்  நன்னாரி சர்பத் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் வெப்பத்தை போக்குவதுடன்  உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றும்.

மருத்துவம்

வெட்டிவேர்

நம் முன்னோர் மண்பானையில் வெட்டிவேரை சேர்த்து வைத்து பின் அதனை குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாக்க வெட்டிவேர் சேர்த்த நீரை அருந்தினார்கள். இன்றைய காலத்தில் நாம் குளிர்சாதனப் பெட்டிகளில் நீரை வைத்து குளிர்ச்சியூட்டி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அதனால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம். ஆனால், மண்பானையில் வெட்டிவேரை ஊற வைத்த நீரை அருந்தினால்  எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் வெட்டிவேர் ஊறிய நீர் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவக்கூடியது.

கோடை காலங்களில் ஏற்படும் கொப்பளங்கள், சூட்டினால் ஏற்படும் எரிச்சல், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல் போன்ற நோய்களை சரிசெய்ய வெட்டிவேர் உதவும். இரண்டு கைப்பிடி அளவு வெட்டிவேரை எடுத்து மண் பாத்திரத்தில் போட்டு ஏற்கனவே நன்றாக காய்ச்சிய நீர் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதை வடிகட்டி சப்ஜா விதை சேர்த்துக் குடித்தால் கோடைகால நோய்கள் சரியாகும்.

சப்ஜா விதை

சப்ஜா விதை என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது  கோடைகால குளிர்பானங்களே. இந்த விதைகளில் இயற்கையான குளிர்ச்சித் தன்மை நிறைந்துள்ளதால் எல்லா வகை குளிர்பானங்களிலும் சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிடும்போது உடல் வெப்பத்தை வெகுவாகக் குறைத்து உடலை இயற்கை யாக குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்றைக்கு பல தேநீர்க்கடைகளில் லெமன் தேநீரிலும்கூட சப்ஜா விதைகளை சேர்க்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து இன்றி யமையாததாக மாறிவிட்டது. அதனடிப்படையில் வெளிப்புற வேளைகளுக்காக பயணிக்கும் சமயங்களில் அதிகமான வெப்பகதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும்போது , மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் உடல் வெப்பத்தினை சமாளிக்க முடியாமல், வியர்வை வெளியேற்ற முடியாமல் மூளை அதிக உஷ்ணமுற்று வலிப்பு வர வாய்ப்புகள் உள்ளது. எனவே அதிகநேரம் வெயிலில் சுற்றிதிரியாமல் நீர் மற்றும் நெய்ப்புதன்மை உணவுகளை உண்பது சிறந்தது.

டைபாய்டு, காலரா

குளிர்காலங்களை ஒப்பிடும்போது வெயில்காலத்தில் உணவுப்பொருட்களில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகம். வெயில்காலத்தில் 30’-40’ வெப்பநிலை நுண்ணுயிர்கள் வளர ஏற்ப்புடையதாகும். எனவே புட் பாய்சனிங் எனப்படும் உணவு நஞ்சாதல் அதிகம் நிகழ்வதால் வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். டைபாய்டு, காலரா போன்ற பிரச்சினைகள் எளிதில் ஏற்படும். எனவே உணவினை சமைத்தவுடன் புசிப்பது நல்லது. வாரமொருமுறை எண்ணெய் குளியல் மேற்க்கொள்ளலாம். இதன்மூலம் உடலின் குருதியோட்டம் சீராகி வளர்ச்சிதை மாற்றங்கள் சரிவர இயங்கி, உடல் வெப்பம் அதிகரிக்காமல் முறையாக பராமரிக்கப்படும்.

வெப்பம் அதிகரிப்பால் உடலின் பித்தம் சீர்குலைந்து, சர்க்கரை மருத்துவப் பயனாளிகளுக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவர்கள் நாவல்பழம், வெள்ளரி , சொரக்காய், ஆவாரம் கஷாயம் எடுப்பது நல்ல பலன் தரும். குறை குருதி அழுத்த நோய் உள்ளவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. இவர்கள் மருதம்பட்டை, நித்தியகல்யாணி எடுப்பதன் மூலம் குருதி அழுத்தத்தை சீராக பராமரிக்கும். இதய மருத்துவப் பயனாளிகள், நெல்லி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ஜுஸாக அருந்தினால் உடல் உஷ்ணத்தை குறைத்து, குருதிக் குழாயில் அடைப்பில்லாமல் சீராக பராமரிக்கும்.

வெப்பத்தை தூண்டக்கூடிய உணவுகள், மற்றும் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய மன ஓட்டங்களான, பேராசை, பொறாமை, போட்டி, கர்வம், தலைக்கணம், அதிகாரம், அலட்சியம் இவை அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து சுயநலமின்றி இயற்கையை பாதுகாத்தாலே உலகம் செழிப்பாகி வெப்பமயமாதல் குறைந்து பெரும்பாலான உடல்உபாதைகள் தவிர்க்கப்பட்டு நலமுடன் வாழலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *