தீக்காயங்களுக்குப் பிசியோதெரபி உயிரைக் காப்பதோடு, வாழ்க்கையையும் மீட்டெடுக்கும் மறுவாழ்வு சிகிச்சை!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மருத்துவம்

மருத்துவர் தி.செந்தில்குமார்
பிசியோதெரபி மருத்துவ நிபுணர், அரசு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி

தீ என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. ஆனால் அதே தீ கட்டுப்பாட்டை இழந்தால், மனித உடலையும், மனதையும், குடும்பத்தையும் கடுமையாகப் பாதிக்கும் பேராபத்தாக மாறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கானோர் தீக்காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். சமையலறை விபத்துகள், எரிவாயு உருளை வெடிப்பு, மின்சாரம் தாக்குதல், தொழிற்சாலை விபத்துகள், அமிலத் தாக்குதல், கொதிக்கும் நீர் அல்லது எண்ணெய் சிதறுதல் போன்ற பல காரணங்களால் தீக்காயங்கள் ஏற்படுகின்றன.

பலர் தீக்காயம் ஏற்பட்டவுடன் உயிரைக் காப்பாற்றும் சிகிச்சை மட்டுமே முக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் உயிர் பிழைத்த பிறகு அந்த நபர் மீண்டும் தன் கைகளையும், கால்களையும் இயல்பாகப் பயன்படுத்த முடியுமா? வேலைக்குச் செல்ல முடியுமா? தன் குடும்பத்தை மீண்டும் கவனிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கான பதிலை வழங்குவது பிசியோதெரபி ஆகும்.

தீக்காயம் என்றால் என்ன?

அதிக வெப்பம், தீ, மின்சாரம், இரசாயனப் பொருட்கள் அல்லது கதிர்வீச்சு காரணமாக தோல் மற்றும் அதன் கீழுள்ள திசுக்கள் சேதமடைவதே தீக்காயம் ஆகும். தோலின் ஆழத்தைப் பொறுத்து தீக்காயம் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் நிலை (First Degree Burn)

இது தோலின் மேலடுக்கு மட்டும் பாதிக்கப்படும் லேசான தீக்காயம். தோல் சிவந்து காணப்படும். வலி இருக்கும். சிறிய வீக்கம் இருக்கலாம். பொதுவாக சில நாட்களில் குணமாகிவிடும். இருப்பினும் சரியான பராமரிப்பு அவசியம்.

இரண்டாம் நிலை (Second Degree Burn)

இந்த நிலையில் தோலின் மேலடுக்கும், கீழடுக்கும் பாதிக்கப்படும். கொப்புளங்கள் (Blisters) தோன்றும். கடுமையான வலி இருக்கும். தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

மூன்றாம் நிலை (Third Degree Burn)

இந்த நிலையில் தோலின் அனைத்து அடுக்குகளும் அழிகின்றன. சில நேரங்களில் வலி குறைவாக இருக்கலாம். காரணம் நரம்பு முனைகள் சேதமடைந்திருக்கும். இந்த மருத்துவப் பயனாளிகளுக்கு தோல் மாற்று அறுவைச் சிகிச்சை (Skin Grafting) தேவைப்படலாம்.

நான்காம் நிலை (Fourth Degree Burn)இது மிகவும் ஆபத்தான தீக்காயமாகும். தோலைத் தாண்டி தசைகள், தசைநார்கள், எலும்புகள் வரை பாதிக்கப்படலாம். உயிருக்கு ஆபத்து அதிகம். உடனடி தீவிர மருத்துவ சிகிச்சையும், நீண்டகால மறுவாழ்வு சிகிச்சையும் அவசியம்.

தீக்காயம் ஏற்பட்டவுடன்
என்ன செய்ய வேண்டும்?

தீக்காயம் ஏற்பட்டவுடன் பதற்றமடையாமல் செயல்பட வேண்டும்.

தீயிலிருந்து பாதிக்கப்பட்டவரை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் சுத்தமான குளிர்ந்த ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

மோதிரம், கடிகாரம், இறுக்கமான ஆடைகள் இருந்தால் மெதுவாக அகற்ற வேண்டும்.

சுத்தமான துணியால் காயத்தை மூட வேண்டும்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

செய்யக்கூடாத தவறுகள்

நமது சமூகத்தில் இன்னும் பல தவறான பழக்கங்கள் உள்ளன.

தீக்காயத்தின் மீது பற்பசை தடவுதல்.

மஞ்சள், மை, எண்ணெய், வெண்ணெய், காபித்தூள் போன்றவற்றைப் பூசுதல்.

கொப்புளங்களை உடைத்தல்.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துதல்.

இவை அனைத்தும் தொற்று ஏற்படவும், காயம் மோசமடையவும் காரணமாகலாம்.

தீக்காயத்திற்கு ஏன் பிசியோதெரபி அவசியம்?

“காயம் ஆறிய பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று பலர் நினைக்கின்றனர். இது மிகப் பெரிய தவறு.

தீக்காயம் ஏற்பட்ட முதல் நாட்களிலிருந்தே, மருத்துவப் பயனாளியின் உடல்நிலை அனுமதிக்கும் நேரத்தில் பிசியோதெரபி தொடங்கப்பட வேண்டும். இதனால்:

மூட்டுகள் இறுகாமல் பாதுகாக்கப் படுகின்றன.

தசை பலவீனம் குறைகிறது.

வீக்கம் குறைகிறது.

குருதி ஓட்டம் மேம்படுகிறது.

நுரையீரல் செயல்பாடு பாதுகாக்கப் படுகிறது.

மருத்துவப் பயனாளி விரைவில் எழுந்து நடக்கத் தொடங்குகிறார்.

மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைய வாய்ப்பு அதிகரிக்கிறது.

தீக்காயத்திற்குப் பிறகு சிகிச்சை அளிக்கும் குழுவில் அறுவைச் சிகிச்சை வல்லுநர், மயக்க மருத்துவர், செவிலியர், ஊட்டச்சத்து வல்லுநர், உளவியல் வல்லுநர் ஆகியோருடன் பிசியோதெரபிஸ்டும் மிக முக்கிய உறுப்பினராக உள்ளார்.

ஒரு மருத்துவப் பயனாளி உயிர் பிழைப்பது மட்டும் போதாது; அவர் மீண்டும் தன்னம்பிக்கையுடன் தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான பாலமாக செயல்படுவது பிசியோதெரபியே.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *