கட்சி மாறிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் திட்டம் தோல்வி!
புதுடில்லி, ஏப். 27- மாநிலங்களவையில் ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த ராகவ் சட்தா உட்பட 7 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இதற்காக பாஜக கையாண்ட ‘தெலுங்கு தேசம் பார்முலா’ வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், பஞ்சாபில் ஒன்றிய அரசின் வியூகம் எடுபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
2022 பஞ்சாப் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு, சமீபத்திய தேர்தல்கள் பெரும் சோதனையாக அமைந்தன.
அரியானா தோல்வி: 2024 அரியானா தேர்தலில் 1.8 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, ஒருவரைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர்.
டில்லி தேர்தல் பாதிப்பு: 2025 டில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தது ராகவ் சட்தா மற்றும் சந்தீப் குமார் பதக் போன்ற இளந்தலைவர்களின் செல்வாக்கைக் கட்சிக்குள் கேள்விக்குறியாக்கியது.
இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, பல மாதங்களாக திரை மறைவில் காய் நகர்த்திய ஒன்றிய பாஜக அரசு, தற்போது ‘ஆம் ஆத்மி’யின் முக்கியத் தூண்களைத் தன் பக்கம் இழுத்துள்ளது.
‘தெலுங்கு தேசம் பார்முலா’?
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களைப் பிரிப்பது அவசியம். கடந்த காலங்களில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக இதே முறையில் இணைத்ததை முன்மாதிரியாகக் கொண்டு, தற்போது ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானோரைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தனது பெரும்பான்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் ‘ஆம் ஆத்மி’யைப் பலவீனப்படுத்திய போதிலும், பஞ்சாப் மாநில அரசைக் கவிழ்க்க அல்லது அங்கு கட்சியைக் கலைக்க ஒன்றிய அரசு போட்ட திட்டங்கள் பலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. டில்லி மற்றும் அரியானாவில் ஏற்பட்ட பின்னடைவைத் தாண்டி, பஞ்சாபில் ஆம் ஆத்மி இன்னும் தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளதாகத் தெரிகிறது.
