இதனை முளையிலேயே தடுப்பது நமது முதல் கடமை!

5 Min Read

2 சதவிகிதம் பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே!
சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த நோக்கம்!
ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை பேராபத்தின் தொடக்கம்!

2% பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே! சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த நோக்கம்! ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை பேராபத்தின் தொடக்கம்! இதனை முளையிலேயே தடுப்பது நமது முதல் கடமை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையா?

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் 29,908 பணியிடங்களை ரத்து செய்யுமாறு, பல்வேறு மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில் வடக்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 3,303 பணியிடங்களும், தெற்கு ரயில்வேயில் 1,906 பணியிடங்களும் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘‘பாதுகாப்பு சாராத’’ (non-safety) பிரிவுப் பணிகளையே குறைக்கப் போகிறோம் என்பதாகச் சொல்கிறார்கள். ரயில்வே மருத்துவமனைகள், தூய்மைப் பணிகள் (housekeeping), ஏசி இயந்திரப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பிரிவுகள் ஆகியவற்றிலேயே இந்தப் பணியாளர் பற்றாக்குறை மிகவும் கடுமையாக உள்ளது.

புதிய ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறாது

அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை ரத்து செய்யுமாறு  ஒவ்வொரு பொது மேலாளருக்கும்  இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாம். தற்போது நிரந்தரப் பணியா ளர்களாக இருப்பவர்கள் தங்கள் வேலைகளை இழக்க மாட்டார்கள் என்றாலும், ரத்து செய்யப்பட்ட இந்தப் பணியிடங்களுக்குப் புதிய ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறாது. உதாரணமாக, தட்டச்சர்கள் போன்ற தேவையற்றதாகக் கருதப்படும் பணிகளில் உள்ள ஊழியர்கள், எழுத்தர்களாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிகாரப்பூர்வமாகப்  பணியிடங்கள் குறைக்கப்படாத ‘பாதுகாப்புப் பிரிவு’களில் கூட, ஓய்வுபெறும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஈடாகப் புதிய நியமனங்கள் நடைபெறவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆள்குறைப்பு செய்வதற்கான தொடக்கம் இது!

ரயில்வேயில் கடந்த ஏப்ரல் 1, 2026 நிலவரப்படி, 14 லட்சத்து 80 ஆயிரத்து 455 பணியிடங்கள் உள்ளன. ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த 14.8 லட்சம் பணியிடங்களில், தற்போது 11 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப் பட்டுள்ளன. அதிலேயே இன்னும் 3 லட்சம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு இருந்தும், அவற்றுக்கான ஊழியர்களை நியமிக்காமல் இருக்கிறது இந்திய ரயில்வே வாரியம். இப்படி ஏற்கெனவே கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், சுமார்  30,000 பணியிடங்களையே இல்லாதொழிக்கும் இந்த நடவடிக்கை நிச்சயமாக இத்துடன் நிற்காது; தொடர்ந்து இப்படிச் செய்வதற்கான முன்னோட்டம். அதுவும் ரயில்வே துறையில் மட்டும் இப்படி நடக்கும் என்று சொல்வதற்கில்லை – எல்லா அரசுத் துறைகளிலும் இதே போன்ற ஆள்குறைப்பு செய்வதற்கான தொடக்கம் இது! ஒருபோதும் இதனை நாம் ஏற்க முடியாது. கடும் கண்டனத்திற்குரியது

இதற்குப் பின்னால், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவதற்கான சூழ்ச்சி நிறைந்துள்ளது.அது மட்டுமல்லாமல், நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து, தற்காலிகப் பணிகளாக அவற்றை மாற்றும் நடவடிக்கை யின் ஆரம்பம் தான் இந்த ஆட்குறைப்பு!

ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கல் நோக்கத்தை விரைவுபடுத்தும் ஒரு தெளிவான அறிகுறி!

இந்தியா முழுவதும் புதிய ரயில் பாதைகளும், ரயில்களும் அறிமுகப்படுத்தப்படுவதாகத் தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர் மோடி. நேரில் சென்று ரயில் நிலையங்களைத் திறப்பதும், ரயில்களைக் கொடி அசைத்துத் தொடங்கிவைப்பதும் தான் அதிகபட்சமாக அவர் பங்கேற்கும் அரசியல் பிரச்சாரங்கள் அல்லாத மக்களுக்கான பணிகளைத் தொடங்கி வைக்கும் அரசு நிகழ்ச்சிகள். அவர்களின் சொல்படியே அதிகம் பணிகள் நடக்கும் ரயில்வே துறையில், கூடுதல் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ள இத்தரு ணத்தில், பணியிடங்களை மொத்தமாக ரத்து செய்வது ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கல் நோக்கத்தை விரைவுபடுத்தும் ஒரு தெளிவான அறிகுறி!

ரயில்வே பட்ஜெட்டை ஒழித்த போதே, தங்கள் நோக்கத்தை பா.ஜ.க. வெளிப்படுத்திவிட்டது!

ஏசி பெட்டிகளின் பராமரிப்பு மற்றும் ரயில் பெட்டிகளின் (rake) பழுதுபார்ப்புப் போன்ற பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் அதிகளவில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன; ரயில் நிலையப் பராமரிப்பு, கடைகள் குத்தகை என்று அதானி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அதானி தனியாக 300 கிமீ நீளத்திற்கு தனியார் ரயில்வே பாதையை அமைத்திருக்கிறார். படிப்படியாக இந்தியா முழுமையையும் இணைக்கும் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வேயைத் தனியார் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது மோடி பதவியேற்ற காலத்திலிருந்தே அவர்களின் நோக்கமாகும். மக்கள் நலனை விட, பெருமுதலாளிகளின் நலனே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. – மோடி அரசின் நோக்கம். ரயில்வே பட்ஜெட்டை ஒழித்த போதே, தங்கள் நோக்கத்தை பா.ஜ.க. வெளிப்படுத்தி விட்டது.

தனியார் மயமாக்கல் என்பதும், பணியிடக் குறைப்பு என்பதும் சமூகநீதி அடிப்படையிலும் மிகப் பெரிய ஆபத்தாகும். மண்டல் அறிக்கை அமல்படுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் உருவாகத் தொடங்கிய பின்னர், தனியார் மயமாக்கலை நோக்கி எல்லா நிறுவனங்களையும் நகர்த்தத் தொடங்கி னர் அதிகாரத்திலும், திட்டமிடலிலும் உள்ள பார்ப்பனர்கள்!

சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே
அவர்களின் உள்ளார்ந்த நோக்கம்!

பார்ப்பன ஆதிக்கக் கோட்டையாக இருந்த ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் பெருமளவில் உள்ளே நுழைவதும், படிப்படியாகக் கல்வி வளர்ச்சி காரணமாக 22.5% பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் நுழைவு அதிகமாவதும் அவர்களால் பொறுத்துக் கொள்ளப்பட முடியாததானது. நேரடியாக இடஒதுக்கீட்டைக் குறைக்க முடியாது என்பதால், சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே அவர்களின் உள்ளார்ந்த நோக்கம். அதன் வெளிப்பாடுகள் தான் வாஜ்பாயி காலத்தில் தனியாகவே, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதற்கென்றே உருவாக்கப்பட்ட அமைச்சகம். அந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், அதை நிதியமைச்சகத்தின் ஒரு பிரிவாக ‘பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை நிர்வகிக்கும் துறை’ என்று ஆக்கி, அதே வேலையை இன்னும் வேகமாகச் செய்து கொண்டி ருக்கிறது மோடி அரசு.

ஓர் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி, இந்நேரம் 24 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக, வேலைவாய்ப்பை ஒழிக்கும் பணியையே மும்முரமாகச் செய்கிறது அவரது அரசு. வழக்கம்போல இந்த உறுதிமொழியும் ‘ஜும்லா’ ஆயிற்று.

தொழிற்சங்கங்களும், சமூகநீதி உணர்வாளர்களும் இணைந்து களம் காண வேண்டும். தொடக்கத்திலேயே இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது இந்தியப் பொருளா தாரத்தை மேலும் அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்லும்! வாய் ஜம்பங்களும், தம்பட்டங்களும் நாட்டுக்குப் பயன்படாது.

நமது முதல் கடமை!

ரயில்வே துறையில் தொடங்கும் இச் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இது பெரு வெள்ளமாகி, அரசுப் பணிகள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிடும். இதனைத் தடுப்பது நமது முதல் கடமை.

கி.வீரமணி

    தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.4.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *