கொல்கத்தா, ஏப்.26 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஏறத்தாழ 225 இடங்களைக் கைப்பற்றி, தமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று (25.4.2026) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேர வைத் தேர்தலை இரண்டு கட்டங் களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-இல் நடை பெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29-இல் நடைபெற உள்ளது. கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், கவுரா மாவட்டம் பாலியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அபிஷேக் பானர்ஜி, “முதல் கட்டத்தில் நூறு ரன்களைக் கடந்துவிட்டோம். இரண்டாம் கட்டத்தில் இரட்டைச் சதம் அடிப்போம். குறைந்தது 225 இடங்களில் நாம் வெற்றி பெறுவோம்.
நாங்கள் இங்கு நான்காவது முறையாக ஆட்சி அமைப்போம். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் டில்லியிலிருந்து பாஜகவை வேரோடு பிடுங்கி எறிவோம்.
மோடி நடந்து சென்ற சாலையும், அவர் நின்று தெருவோரக் கடையில் ‘ஜால்முரி’ என்ற உணவை ரசித்த நடைபாதையும் மம்தா அரசால் கட்டப்பட்டவை. அந்தக் கடைக்காரர் பீகாரின் கயாவைச் சேர்ந்தவர்.
பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு இவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்கியிருந்தும், பீகாரைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏன் ஜார்கிராமில் ஜால்முரி விற்கிறான்? பீகாரில் வேலைவாய்ப்பு எங்கே போனது?” என காட்டமாகக் கூறியுள்ளார்.
