கேள்வி: ‘நாடு முழுவதும் புகையிலைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது’ என்று ஒன்றிய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை விடுத்துள்ள கேள்விக்கு ஒன்றிய அரசு எத்தகைய வினையாற்றுவது புகையிலை ஒழிப்புக்கு ஏதுவாகும்?
– மு.பூபாலன், அயன்புரம்
பதில்: புகையிலை ஒன்றும் நெல், கோதுமை போன்று வாழ்க்கைக்கு இன்றியமையாதது அல்ல. அது ஒரு வருவாய் தரும் பயிர் (Cash Crop) ஆகும். 1967இல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது தந்தை பெரியார் அவர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் புகையிலை போன்ற விவசாயிகளின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை தராமல் (அரசுக்கு வரி மூலம் கூடுதல் வருவாய் கருதி இவற்றை ஊக்குவிக்காமல்) விவசாயிகளுக்கு, மக்களுக்குப் பயன்படும் நெல் உற்பத்தியை ஊக்கப்படுத்துவது அவசியம் என்று ஒரு நல்ல யோசனையையும்கூடத் தெரிவித்தார்கள். எனவே உயர்நீதிமன்றத்தின் யோசனை சிறப்பானது. அரசுகள் ஆவன செய்ய முன்வர வேண்டும்.
- • •
கேள்வி: மாநில நெடுஞ்சாலைத்துறையில் 15 ஆண்டு காலமாகப் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர்களை ஊதியம் தர இயலவில்லை என்று திடீர்ப் பணி நீக்கம் செய்துள்ள த.வெ.க. அரசு பட்டினியால் வாடும் ஊழியர்களின் அவலக் குரலுக்குப் பின்பாவது மீண்டும் பணி வாய்ப்பு வழங்குமா?
– மு.காதர், திண்டிவனம்

பதில்: மனித நேயத்துடன் சிந்தித்து அவசரமாகச் செயல் ஆற்ற வேண்டியது முக்கியக் கடமை.
- • •
கேள்வி: திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தோடு மூன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். இதற்குக் கண்டனம் பெருகிய பின்பு, அதில் என்ன தவறு என்று
ஆர்.எஸ்.எஸ்.சினர் கேட்பது சரியா?
– மங்கலபதி, ஒசூர்

பதில்: அரசு நிகழ்ச்சி அல்ல அது. ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்டம். அதில் துணைவேந்தர் – அதுவும் பொறுப்பு! இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை எப்படி ஏற்க முடியும்?
- • •
கேள்வி : இறுதி ஊர்வலங்களில் மது – கஞ்சா போதையில் கூத்தாடுவது – பட்டாசுகள் வெடிப்பது போன்ற பொதுமக்கள் இடையூறுகளுக்குக் காவல்துறைத் தடை உள்ளது. இருந்தும் இவ்வாறு நடப்பதற்கு முற்றாகத் தடை விதிக்க தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுவது ஏன்?
– ம.மஞ்சரி, வேளச்சேரி
பதில்: துணிவுடன் இதைத் தடை செய்ய முன்வர வேண்டும். (பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் ஒரு பெரிய பானையில் சாவு வீட்டில் ‘துக்கக் கள்ளு’ வைத்து, மொண்டு மொண்டு குடித்து ஆடுவார்கள். அது இன்றைய நாகரிக சூழலில் விடை பெற்றுள்ளது. அதுபோல சுடுகாட்டில், சவ ஊர்வலத்தில், சுருட்டுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கொடுப்பது வழக்கம். அதுவும் இப்போது மாறிவிட்டது.)
- • •
கேள்வி: த.வெ.க. கட்சியினரின் தொடர் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்திட அக்கட்சித் தலைவர் ச.ஜோசப் விஜய், அக்கட்சித் தலைமையகம் அறிவுரை கூறாது மவுனம் சாதிப்பது ஏன்?
– எம்.அந்தோணி, பெருவளப்பூர்
பதில்: வருத்தத்திற்குரியது. மக்களிடையே அதிருப்தி, வெறுப்பு வளர்வதை அரசின் நுண்ணறிவு (intelligence) காவல் துறையாவது முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எடுத்துச் சொல்லி, த.வெ.க. கட்சியினரின் அடாவடி வெறுப்புப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லக் கூடாதா?
- • •
கேள்வி: அ.தி.மு.க. 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலின்போது ‘குதிரை பேரம்’ நடந்தது உண்மையா? சி.பி.அய். விசாரணை தேவையா?
– மு.பகலவன், பொன்னேரி
பதில்: அது குதிரை பேரமா? வேறு எந்த பேரமா? இத்தகைய அரசியல் ஒழுக்கக் கேடு; ஜனநாயகத்தை அசிங்கப்படுத்தும் ஒரு புதிய வியாபாரம். கட்சித் தாவல் சட்டம், தேர்தலில் வாக்களித்த மக்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். சி.பி.அய். விசாரணை தேவைதான்!
- • •
கேள்வி: சென்னை கடற்கரை – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் (ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள்) என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பிரதமர் அலுவலகம் நேரடியாகத் தலையிட்டு செயல்பட்டுள்ளதே. இதேபோல் இதர துறைகளிலும் (கல்வி உள்பட) தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முனைவார்களா?
– ம.கவிதா, வியாசர்பாடி

பதில்: இதற்கு உரிய பதிலை புதிய ஆட்சியும், சம்பந்தப்பட்ட துறையும்தான் தர வேண்டும்.
- • •
கேள்வி: தற்போதைய சிறுவர்களின், இளைஞர்களின் மனோநிலை எப்படி உள்ளதாகக் கருதுகிறீர்கள்? கண்ணை மூடிக்கொண்டு கைப்பேசி எனும் கடலில் குதித்து, மூழ்கிப் போகிறார்களே – என்ன செய்து இவர்களைச் சரி செய்வது?
– பா.அமுதமொழி, மீனம்பாக்கம்

பதில்: முறையான கட்டுப்பாடுகளும் – அவசியமான அறிவுரை ஆணைகளும் தேவை. செல்லம் கொடுத்து கெடுத்துவிடக் கூடாது! கவனச் சிதறல் அவர்களது கல்வியை, ஒழுக்கத்தைப் பாழ் அடையச் செய்யும்.
- • •
கேள்வி: தமிழ்நாடு அரசினை ஆறு மாதத்திற்கு என்ன நடந்தாலும் கேட்கக் கூடாதாமே?
– க.வெற்றிவேல், கரூர்
பதில்: ‘விடுதலை’ 17.6.2026 அறிக்கையைப் படியுங்கள். தீயணைப்பு, தீவிர அவசர சிகிச்சை போன்றவற்றிற்கு அவகாசம் கேட்க உரிமை கிடையாது. அதுபோல சமூகக் குற்றத்திற்கும். புரிந்து கொள்ளுங்கள்.
- • •
கேள்வி: பாலியல் கொடுமை நொடிக்குநொடி பெருகுவதைத் தடுக்க இயலா த.வெ.க. ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– தா.கருப்பசாமி, திருச்சி
பதில்: முன்பு, பழைய ஆட்சி மீது வைத்த குற்றச்சாட்டு, ‘பூமராங்’ ஆகத் திரும்பும் நிலைதான். மக்கள் வேகமாக மாறவும் செய்வர் என்பதை புதிய ஆட்சி உணர வேண்டும்.
