தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். இந்தத் தமிழ்நாடே வித்தியாசமானது தான்! ஆன்மிகவாதிகள் கையெடுத்துக் கும்பிடவும், கால் வைத்துக் கோயிலுக்குள் நுழையவும் உரிமைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் எனும் நாத்திகர். அதேபோல கடவுள் மறுப்புக் கூட்டத்திற்கு நன்கொடைகளை அள்ளித் தருபவர்கள் நெற்றியில் பட்டையும், கழுத்தில் உத்திராட்சக் கொட்டையும் அணிந்திருக்கும் ஆன்மிகவாதிகளே!
இந்த உறவைத்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜகவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஹிந்துக் குடும்பத்தில் கடவுளை வழிபடுபவர்களும், கடவுளை மறுப்பவர்களும் எப்படி சேர்ந்து வாழ முடிகிறது என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறைந்தபட்சம் அவர்களால் சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. மத ரீதியாக ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனப் பிரிப்பது பாஜகவிற்கு எளிய வேலையாக இருக்கும். தமிழ்நாட்டிலோ ஹிந்து மதத்திற்கு உள்ளேயே இந்துக்களையும், முற்போக்காளர்களையும் பிரிப்பது முடியாத வேலையாக இருக்கிறது.
ஆத்திகம், நாத்திகம் எதிரெதிர் கொள்கையாக இருந்தாலும், அவர்களிருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்தது பெரியாரியம்! இந்தப் பெருமை எங்குமே இல்லாத காரணத்தினால் தான் இதைப் ‘பெரியார் மண்’ என்று அழைக்கிறோம். இப்போது இருக்கும் நாத்திகர்கள் அனைவருமே ஆத்திகர்களாக இருந்தவர்கள் தான். அந்த அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் கோயிலின் தர்மகர்த்தாவும் திராவிடர் கழகத்தில் இணைந்தது! வாருங்கள்… பெங்களூருவில் வசிக்கும் அவர் கதையை நேரில் சென்று கேட்டு வருவோம்!
அய்யா வணக்கம்! தங்களின் தொடக்க கால வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?
எனது பெயர் மு.ஜானகிராமன். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கோட்டை எனது கிராமம். 1932இல் பிறந்த எனக்கு இப்போது 93 வயதாகிறது. பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கியது கிடையாது. எனது பெற்றோர் முத்துச்சாமி-மீனாட்சி. உடன் பிறந்தோர் 11 பேர். வறுமை காரணமாகச் சென்னைக்குப் பயணமானேன். கையில் இருந்தது 11 ரூபாய். இங்கு வந்ததும் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த வேகத்திலே மறுநாள் வேலை போயிற்று. வேறொரு இடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மாதச் சம்பளம் 1.75 காசுகள். இதில் தங்குமிட வாடகை 50 காசுகள். அதிலும் சிறுகச் சிறுக சேமித்து 175 ரூபாய் வைத்திருந்தேன். பின்னர் பெங்களுருவில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டேன்.
அங்கு என்ன வேலை செய்தீர்கள்?
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக் லிமிடெட் (HAL) எனும் கம்பி தயார் செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தேன். அது கடுமையான பணி. எனினும் அதையும் சிறப்பாகச் செய்தேன். நாளொன்றுக்கு 20 டன் (20 ஆயிரம் கிலோ) கம்பிகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்படி செய்தால் 75 காசுகள் சம்பளமாகக் கிடைக்கும். குறிப்பாகத் தொழிலை ஆர்வமுடனும் செய்து வந்தேன்.
இந்நிலையில் ஒருநாள் நிறுவன உணவகத்தில் (Canteen) சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது “மார்டன் மில்க் டைரி” என்கிற வாகனம் பால் ஏற்றிக் கொண்டு வந்தது. எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த பால் கேன்கள் கீழே விழத் தொடங்கின. பால் தரையில் கொட்டத் தொடங்கியது. சக ஊழியர்கள் வேடிக்கைப் பார்த்து நிலையில், உணவருந்திக் கொண்டிருந்த நான் வேகமாகச் சென்று பால் கேன்களை நிமிர்த்தி, என்னால் ஆன உதவிகளைச் செய்தேன். எனது இந்தச் செயல்களைக் கவனித்த ஒருவர் என்னை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அடுத்தக் கட்டம் என்பது என்ன?
எனது செயல்களைக் கவனித்தவர் தான் “மாடர்ன் மில்க் டைரி” நிறுவனத்தின் உரிமையாளர்.
பெங்களூருவில் புகழ்பெற்ற நிறுவனம் அது. பால் கேன்கள் கீழே விழுந்த நேரத்தில் அவரும் அங்கேயே இருந்துள்ளார். இந்நிகழ்விற்குப் பிறகு தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நானும் அங்கு சென்றேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து 475 பேர் பணியாற்றிய நிறுவனத்தில் நானும் சேர்ந்தேன்.
மாதச் சம்பளம் ரூபாய் 500 கொடுத்தார்கள். முந்தைய ஊதியத்தை விட, இரண்டு மடங்கு அதிகம். அதுமட்டுமின்றி, தங்குமிடமும், உணவும் அவர்களே கொடுத்தார்கள். வேலையில் வித்தியாசம் இன்றி அனைத்தையும் செய்து வந்தேன். இயல்பாகவே ஆர்வத்துடனும், பொறுப்புடனும் வேலை செய்யும் எனக்கு மேற்பார்வையாளர் (Supervisor) பணி ஒரே வாரத்தில் கிடைத்தது. நல்ல வளர்ச்சி வந்த வேளையில், மீண்டும் என் பயணம் திசை திரும்பியது.
என்ன ஆனது?
நல்ல வருமானம் கிடைத்த நிலையில் 5 சதோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். அதன் பின்னர் எனது அம்மா, சின்னம்மா ஆகியோர் பெங்களூருக்கே வந்து, மாமா மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். அந்தப் பெண்ணுக்கு 16 வயதிலேயே இருதய அறுவைச் சிகிச்சை நடந்ததால் யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் நானே செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பின்னர் மூன்று ஆண்டுகள் பெங்களூருவில் இருந்துவிட்டு, அதன் பின்னர் ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
“மாடர்ன் மில்க் டைரி” நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், காரைக்குடி வந்து மெ.மெ.வீதியில் “ஜெயா ஜவுளி ஸ்டோர்” எனும் கடையைத் தொடங்கினேன். அதுவரையில் நான் ஒரு ஆன்மிகவாதியாக இருந்தேன். காலையில் திருநீறு பூசினால் மாலை வரை அப்படியே இருக்கும். அதுமட்டுமின்றி திராவிடர் கழகக் கூட்டங்களில் நேரடியாகவும், ஆள் வைத்தும் கல் எறியும் அளவிற்கு எதிர்ப்பு நிலையில் இருந்தேன்.
கல் எறிந்த நீங்கள்
கருப்புச் சட்டைக்கு மாறியது எப்போது?
ஜவுளிக்கடைக்குச் சேலை கொள்முதல் செய்ய போகும் போது, காரைக்குடி நாவன்னாபுதூர் அருகே திராவிடர் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் நின்று கேட்டேன். அப்போது சாந்தன் என்கிற பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார். “இரண்டு கை, இரண்டு கால், ஒரு தலை உள்ள குழந்தைகளே வெளியே வரச் சிரமப்படும் சூழலில், நான்கு கை, நான்கு கால், இரண்டு தலை உள்ள சாமிகள் எப்படி வெளிவரும்?”, என நகைச்சுவையாகக் கேட்டார். அந்த ஒற்றைக் கருத்து, என்னைக் கருப்புச் சட்டைக்கு மாற்றியது.
அன்றிரவே வீட்டிற்குச் சென்றதும் ஒன்றிரண்டு கடவுள் படங்களைக் கீழே போட்டு உடைத்தேன். பிறகு ஏன் “போட்டோ பிரேம்களை” உடைக்க வேண்டும், அதனுள் வேறு படங்களை வைத்துக் கொள்ளலாம் என எண்ணி, கடவுள் படங்களை (Paper) மட்டும் பிரித்தெடுத்துக் குப்பையில் வீசினேன்.
ஒரே நாளில் புரட்சிக்கு மாறிவிட்டீர்களே?
அதுமட்டுமல்ல, விடிந்ததும் நேராக என்.ஆர்.சாமி அய்யா வீட்டிற்குச் சென்றேன். விவரங்கள் அனைத்தையும் கூறி, உடனே கூட்டம் போட வேண்டும், கொடியேற்ற வேண்டும், மூடநம்பிக்கை ஊர்வலம் நடத்த வேண்டும், இவை அனைத்தும் என் செலவிலே செய்ய வேண்டும் எனக் கூறினேன். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த இராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து தோழர்களை அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
சிறிது நாட்களிலேயே காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகிலேயே கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார்கள். இதற்கிடையே பழ.கருப்பையா, சிவகங்கை சண்முகநாதன், சாமி.திராவிடமணி,
தேவகோட்டை டாக்டர் சுப்பிர மணியம், சாமி.சமதர்மம் உள்ளிட்ட பலரோடும் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில் அந்தக் கூட்டத் திற்காக நான் அச்சிட்ட ஒரு துண்டறிக்கைப் பெரும் எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கிவிட்டது.
அப்படியென்ன துண்டறிக்கை?
அதில் என்ன இருந்தது?
பெரியார் சிந்தனை வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை, நான் ஆஞ்சநேயர் கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்தவன். அப்படியான நிலையில் இது எனக்கு முதல் கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு என்னைத் தான் தலைமைத் தாங்கவும் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் நான் அச்சிட்ட அந்தத் துண்டறிக்கையில், “ஆஞ்சநேயர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த ஜானகிராமன் என்கிற பழுத்த ஆத்திகர், நாத்திகராக மாறப் போகிறார்”, எனப் பதிவு செய்திருந்தேன். இதை வேடிக்கைப் பார்க்கவே பெருங்கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்திற்கு மதுரை மேயர் முத்து போன்றோரெல்லாம் வந்திருந்தார்கள்.
அதன் பிறகான உங்கள் இயக்க நடவடிக்கை
எப்படித் இருந்தது?
காரைக்குடியில் தீவிர செயல்பாட்டில் இருந்த நான், நகரப் பொருளாளராகவும் இருந்தேன். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பெங்களூரு செல்லும் நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே பெங்களூருவில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த சூழலில், சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தேன். “தந்தை பெரியார் டிரான்ஸ்போர்ட்”, “தந்தை பெரியார் டிராவல்ஸ்” என்கிற நிறுவனத்தைத்
தொடங்கி 17 கார், 27 ஆட்டோ, 4 லாரி எனப் பெரியதாக நடத்தினேன். மிகக் குறிப்பாக அனைத்து வாகனங்களிலும் “NO GOD” எனவும், “LONGLIVE PERIYAR” எனவும்
எழுதியிருந்தேன்.
அந்தக் காலத்தில் வங்கிகளில் பார்ப்பனர்களே அதிகம் இருப்பார்கள். அதனால் எனக்கு வங்கியில் கடன் கிடைப்பது சிரமமாக இருந்தது. எனினும் தொழிலை வெற்றிகரமாக நடத்தினேன். கொள்கையிலும் சமரசம் செய்து கொண்டது கிடையாது.
தங்களின் பெரும்பாலான வாழ்க்கை
பெங்களூருவிலேயே கழிந்துவிட்டதோ?
ஆமாம்! தேவகோட்டை அருகில் கீழக்கோட்டையில் பிறந்து, பெங்களூருவில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவிட்டேன். 2021 ஆண்டு எனது இணையர் மறைந்துவிட்டார். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பெண். பெண்ணுக்கு ஆசிரியர் தான் திருமணம் செய்து வைத்தார்கள். உடல்நிலை ஒத்துழைக்க மறுத்ததால், இப்போது தொழில் எதுவுமின்றி ஓய்வில் இருக்கிறேன். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக 1983 தொடங்கி 2025 வரை இருந்தேன். பெங்களூரு நகரில் ஏராளமான கழகப் பணிகள் செய்துள்ளோம். ஆசிரியர் அவர்களை அழைத்து எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். இப்போது திராவிடர் கழகக் காப்பாளராக இருக்கிறேன்”, என்கிறார் சாதனைகள் பல படைத்த மு.ஜானகிராமன்!

