கீழடியைத் தொடரும் கரிவலம்வந்தநல்லூர் சங்க காலத் தமிழ்நாட்டின் மற்றுமொரு நகர நாகரிக அடையாளம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு தொல்லியல் துறையின் வரலாற்றில் கீழடி அகழாய்வு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கங்கைச் சமவெளிக்கு இணையான ஒரு நகர நாகரிகம் சங்க காலத் தமிழ்நாட்டிலும் இருந்தது என்பதை கீழடி உலகிற்குப் பறைசாற்றியது.

அந்த வரிசையில், தற்போது தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் என்ற இடத்திலும் கீழடியைப் போன்றே ஒரு பண்டைய நகர நாகரிகத்திற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் அனுமதியுடன் 2026 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு, வெறும் 3 மாதங்களிலேயே வியப்பூட்டும் வரலாற்றுச் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது.

புவியியல் அமைப்பும், அகழாய்வுப் பின்னணியும்!

கீழடியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது கரிவலம்வந்தநல்லூர்.

இந்தத் தளம் செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லக்கூடிய பழமையான வணிகப் பெருவழியில் அமைந்துள்ளதால், இது ஒரு முக்கியமான வணிக நகரமாக இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் கா. ராஜன் குறிப்பிடுகிறார்.

காரிச்சாத்தான் மலையின் தென்புறம் மக்கள் வாழ்விடப் பகுதிகளும், வடபுறம் முதுமக்கள் தாழிகள் அடங்கிய ஈமச்சின்னங்களும் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த வாழ்விடம் பரவியுள்ளது.

மூன்று மாதங்களில் கிடைத்த
வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள்!

அகழாய்வு தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இப்பகுதியின் தொன்மைக்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன:

செங்கல் கட்டுமானம்: 40 செ.மீ அகலமும், 20 செ.மீ நீளமும், 7 செ.மீ தடிமனும் கொண்ட சுட்ட செங்கற்களால் ஆன படிகளுடன் கூடிய சதுர வடிவ கிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது களிமண் கொண்டு பலப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கீழடிக்கு அடுத்தபடியாகச் சுட்ட செங்கல் கட்டுமானம் இங்கு கிடைப்பது நகர நாகரிகத்தின் முக்கிய அடையாளமாகும்.

மட்கலன்கள் மற்றும் ஓடுகள்: குறியீடுகள் பொறிக்கப்பட்ட கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் ரவுலட்டட் (Rouletted) பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த ரவுலட்டட் ஓடுகள் உரோம நாட்டு தொழில்நுட்பச் சாயல் கொண்டு, உள்ளூரிலேயே வனையப்பட்டவை ஆகும்.

தொழில்நுட்பச் சான்றுகள்: ஹேமடைட் (Hematite) இரும்புத் தாது மற்றும் இரும்புக் கழிவுகள் கிடைத்துள்ளதால் இது ஓர் இரும்பு உற்பத்தி மய்யமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், அதிக தகரம் கலந்த வெண்கலத் துண்டு, கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

ஈமத்தாழிகள்: இங்கு கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளில் குறியீடுகளும், ‘மயில்கள்’ போன்ற ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

பன்னாட்டு வணிகத் தொடர்பும்,
வரலாற்றுப் பெருமையும்!

கரிவலம்வந்தநல்லூருக்கு பிரிட்டிஷ் காலம் முதலே தொல்லியல் முக்கியத்துவம் இருந்துள்ளது. 1930களில் இங்கு 6 ரோமானிய தங்க நாணயங்கள் உட்பட ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. வரலாற்று அறிஞர் ஆர். நாகசாமியின் ‘சவுத் இந்தியன் ஸ்டடீஸ்’ நூலில் இப்பதிவு உள்ளது.

நாணயங்கள்: பேரரசர்கள் நீரோ (கி.பி. 54-58), வெஸ்பாசியன் (கி.பி. 69-79), டொமிஷியன் (கி.பி. 81-96), மற்றும் ஹாட்ரியன் (கி.பி. 117-138) காலத்து ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன.

தங்கப்பதக்கம்: இங்கு கிடைத்த 18.901 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கத்தை 1960-இல் லண்டன் பிரிட்டிஷ் அருங்vகாட்சியகம் ஆய்வு செய்தபோது, அது எகிப்தின் தாலமி II (கி.மு. 284-247) முதல் தாலமி X (கி.மு. 117-81) வரையிலான மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தது என நாணயவியல் நிபுணர் ஏ.டி.எச்.பிவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவை தற்போதைய திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

காலக்கணிப்பும்,  முக்கியத்துவமும்!

ஒப்பீட்டுக் காலம் (Relative Dating): இங்கு கிடைத்துள்ள செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள் ஆகியவை கீழடி, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களின் தரவுகளுடன் ஒத்துப் போவதால், இந்த நாகரிகம் கி.மு. 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறை கருதுகிறது.

இருப்பினும், இதன் துல்லியமான காலத்தை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய கார்பன் காலக்கணிப்பு (Carbon Dating) ஆய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வரும்போது இதன் காலம் இன்னும் உறுதியாகத் தெரியவரும்.

நுண்கற்காலத்திலிருந்து இரும்புக்காலத்திற்கும், பின்னர் படிப்படியாகச் சங்க கால நகர நாகரிகத்திற்கும் கரிவலம்வந்தநல்லூர் வளர்ந்திருப்பதை இப்போதைய அகழாய்வு காட்டுகிறது. கீழடியில் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே முழுமையான நகர நாகரிகம் வெளிப்பட்டது போல, கரிவலம்வந்தநல்லூரிலும் அடுத்தடுத்த கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தமிழ்நாடு வரலாற்றின் மற்றுமொரு பொற்காலம் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் அய்யமில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *