கொல்கத்தா, ஏப்.24 மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்களை பா.ஜ.க.வினர் மிரட்டியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க. வேட்பாளர்களை பொது மக்கள் விரட்டியடித்தனர்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 16 மாவட்டங்களின் 152 தொகுதிகளுக்கு நேற்று (23.4.2026) வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கம் போல மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவிலேயே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள விருந்த முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நவ்தா பகுதியில் நேற்று முன்தினம் (22.4.2026) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
சிவநகர் தொடக்கப்பள்ளி அருகே நடைபெற்ற இந்த வெடிகுண்டு சம்பவத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சஹினா மும்தாஜ் கான் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் இந்தத் தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
தாக்குதலில் இருந்து லேசான காயத்துடன் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “நான் தொழுகைக்காக வெளியே வந்தபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இரண்டு இளைஞர்கள் வந்து என் காலருகே வெடி குண்டை வீசினர். இந்தச் சம்பவத்தில் ஆம் ஜனதா உன்னயன் கட்சி தலைவர் ஹுமாயூன் கபீர் (திரிணாமூல் கட்சியில் இருந்து விலகியவர் – தற்போது பாஜக ஆதரவு) ஆதரவாளர்களுக்குத் தொடர்புள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் ஹுமாயூன் கபீர், வெடி குண்டு நிகழ்ந்த இடத்திற்கு வருகை தந்த போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்ப, அங்கு இரு தரப்பி னருக்கும் மோதல் வெடித்தது. அங்கிருந்த பொருட்களை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் தடியடி மூலம் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வன்முறையில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வாக்காளர்களுக்கு
மிரட்டல்
குண்டுவெடிப்பு, வன்முறை சம்பவங்க ளைத் தொடர்ந்து முர்ஷிதாபாத் மாவட்டம் டொம்கலின் ராய்பூர் கிராமத்தில் நேற்று (23.4.2026) அதிகாலை முதலே ஆயுத மேந்திய கும்பல் வாக்காளர்களை மிரட்டி யுள்ளது. இது தொடர்பாக வாக்காளர்கள் கூறுகையில், “தாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல முயன்றால் தாக்கப்படுவோம் என மிரட்டப்பட்டோம்” என்று தெரிவித்தனர். ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இந்த அடாவடியை செய்தது என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் பா.ஜ.க. வினர் தான் ஆயுத மேந்திய கும்பலை கள மிறக்கி வாக்காளர்களை மிரட்டினர் என குற்றம்சாட்டியுள்ளது.
இதனையடுத்து முர்ஷிதாபாத் வன்முறை, டொம்கலில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல்
அசன்சோல் தெற்கு சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட ரஹ்மத் நகர் அருகே பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அக்னிமித்ராவின் பின்பக்க கார் கண்ணாடி உடைந்து சிதறியது. பா.ஜ.க. வேட்பாளர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
அதே போல தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் குமார்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுபேந்து சேகர், குமார்கஞ்சிற்கு அருகே உள்ள ஒரு வாக்குச் சாவடி அருகே சென்ற போது எஸ்அய்ஆர் மூலம் வாக்குகளை எல்லாம் நீக்கிவிட்டு இங்கு எதற்கு வந்தீர்கள்? என்ற கேள்வியுடன் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் உதவியோடு லேசான காயத்துடன் சுபேந்து சேகர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பெண்களைத் தாக்கிய
சிஆர்பிஎப் வீரர்கள்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் லக்கிபூர் வார்டு, பூத் எண் 163இல் சிஆர்பிஎப் வீரர்கள் 3 பெண்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லக்கிபூர் வார்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் சிஆர்பிஎப் வீரர்கள் பெண்களை ஏன் தாக்கினர்? என இடது முன்னணி கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
