‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு 74 ஆண்டுகால தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

1952 ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் கி.வீரமணியின்
அனுபவங்கள் எத்தனை, எத்தனை! வசதிகள் மிகக் குறைவு!
மெகபோனிலும் பிரச்சாரம் – நேரக்கட்டுப்பாடு கிடையாது;
ஒலி பெருக்கி இல்லாமலும் தந்தை பெரியாரின் பிரச்சாரம்!

 

சென்னை, ஏப்.23 1952 ஆம் ஆண்டுமுதல் 2026 ஆம் ஆண்டுவரை 74 ஆண்டுகால தேர்தல் பணி, பிரச்சார அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்.

‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு ‘‘கொஞ்சம் நில்லுங்கள்’’ பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த நேர்காணல்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் கடந்த 15.4.2026 அன்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின்போது ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியின் ‘‘கொஞ்சம் நில்லுங்கள்’’ பகுதிக்கு அளித்த நேர்காணல் வருமாறு:

1952 முதல் தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்ட உங்கள் அனுபவம் என்ன?

கேள்வி: 1952 ஆம் ஆண்டுகளில் இருந்து தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். முதன் முதலில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்பொழுது, எப்படி செய்தீர்கள்? எதன் வழியாகப் பயணம் செய்தீர்கள்? எவையெல்லாம் பயன்படுத்தப்பட்டது?

தமிழர் தலைவர்: நாங்கள், கிராமங்களுக்குச் செல்லும் போது நடந்து சென்றிருக்கின்றோம். மிதிவண்டியில் பின்னால் அமர்ந்து சென்றிருக்கின்றோம். சில நேரங்களில் கட்டை வண்டியில் பயணம் செய்திருக்கின்றோம். மிகப்பெரிய கூண்டு வண்டியில் சென்றிருக்கின்றோம்.

ஒலி பெருக்கி இல்லாமல்கூட, மெகபோன் வைத்து, ‘‘தாய்மார்களே, பெரியோர்களே ஓட்டுப் போடுங்கள்’’ என்று பிரச்சாரம் செய்து தெருத் தெருவாகச் சென்றிருக்கின்றோம்.

இரவு 10 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்கிற கட்டுப்பாடு கடந்த சில தேர்தல்களுக்கு முன்புதான் வந்ததே தவிர, அதற்கு முன்பு கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பாக, நான் அந்தக் கூட்டத்தில் உரையாற்றுவேன். அங்கே உரையாற்றிவிட்டு, அடுத்த ஊரில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்வோம்.

மாலை 6 மணிக்குக் கூட்டம் தொடங்கினால், தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெற்று, இரவு உணவை விடியற்காலை 4.30 மணிக்குச் சாப்பிட்டிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். அதுவரையிலும் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. அண்ணா அவர்கள் உரையாற் றுகிறார் என்றால், மக்கள் அதுவரையில் காத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒலிபெருக்கி வருவதற்குமுன்
எப்படிப் பிரச்சாரம் செய்தீர்கள்?

கேள்வி: ஒலிபெருக்கி வருவதற்கு முன்பாக நீங்கள் எப்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினீர்கள்?

தமிழர் தலைவர்: 1938 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னை கடற்கரையில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஒலி பெருக்கி கிடையாது. 10 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில், தந்தை பெரியார் மேடையில் உரையாற்றும்போது, ஆங்காங்கே சில தோழர்கள் நின்று கொண்டு, ‘‘தோழர்களே, தாய்மார்களே’’ என்று தந்தை பெரியார் பேசினால், செயின் (சங்கிலித் தொடர்) போன்று நின்று கொண்டிருக்கும் தோழர்கள், ‘‘தோழர்களே, தாய்மார்களே’’ என்று அடுத்தவர்களுக்குச் சொல்லுவார்கள். இப்படித்தான் அப்பொழுதெல்லாம் கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

அதற்கடுத்து, ஒலிபெருக்கி வந்தவுடன்தான், கூட்டத்தின் அழைப்பிதழில், ‘‘ஒலி பெருக்கி உண்டு’’ என்று விளம்பரம் செய்திருந்தால், அது பெரிய அளவிற்கு நடைபெறும் கூட்டம் என்று அர்த்தம்.

மழை, வெயில் காலங்களில்
பிரச்சாரம் செய்தீர்களா?

கேள்வி: மழை, வெயில் போன்ற காலகட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: மழை பெய்தால் குடை பிடித்துக் கொள்வோம். நாள்கள் குறைவாகத்தானே இருக்கும். தேர்தல் பிரச்சாரம் என்றால், எந்தப் பருவமென்றாலும், அந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.

ஒரு கூட்டத்தில், மழை பெய்ததால், குடை பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்; குடையை தேர்தல் சின்னமாகக் கொடுத்திருந்தார்கள்.  ‘‘குடை பிடிக்காதே, குடை பிடிக்காதே, குடையை மடக்குங்கள்’’ என்று சொன்னார்கள்.

மறைமுகமாக அந்தக் கட்சிக்கு ஓட்டுக் கேட்பது போன்று ஆகிவிடும், ஆகவே குடையை மடக்குங்கள் என்று சொன்னவுடன், வேறு வழியில்லாமல், பிறகு குடையை மடக்கினார்கள்.

சின்னம் என்பது ஒரு ‘சிம்பள்’ (Symbol) தானே தவிர வேறொன்றுமில்லை. சின்னத்திற்கே விளக்கம் சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.

அண்ணா அவர்கள், உதயசூரியன் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். எளிதாக அந்த சின்னத்தை சுவரில் வரைந்துவிடலாம்.

ஆகவே, வளர்ச்சி என்பது, அறிவு வளர வளர, உத்திகள் வளருகிறது. அறிவியல் வளர்ந்தவுடன், வாய்ப்புகள் வருகிறது.

கலைஞருடன் தேர்தலை
சந்தித்த தருணங்கள்!

கேள்வி: கலைஞருடன் தேர்தலைச் சந்தித்த தருணங்கள் எப்படி இருந்தது?

தமிழர் தலைவர்: 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தான் மிகவும் சிக்கலான தேர்தலாக இருந்தது. ராஜகோபாலாச்சாரியாரும், காமராஜரும் கூட்டணி வைத்து சந்தித்த தேர்தல் அது.

தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அதற்கு முன்பு சட்டமன்றத்தில் 138 இடங்கள் பெற்ற தி.மு.க., 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களைப் பெற்று சாதனை படைத்தது.

இன்னும் ஓராண்டு ஆட்சி இருக்கும்பொழுதே, சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தலை சந்தித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

கலைஞரின் சாதனையான 184 இடங்களில் வெற்றி என்பதை, இப்பொழுது 2026 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கின்ற தேர்தலில், தளபதி மு.க.ஸ்டாலின் முறியடிப்பார் என்று நம்புகிறோம்.

வேனில் நின்று பிரச்சாரம் செய்வதுபற்றி…

கேள்வி: பல வகைகளில் பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காகவே ஒரு வேனை பிரத்தியேகமாகத் தயாரித்ததற்கும், இதில் போய் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான காரணமும் என்ன?

தமிழர் தலைவர்:  காரணம் என்னவென்றால், இது ஒரு நகரும் குடில். எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். சில பேர், கூட்டம் நடத்தும்பொழுது ஒழுங்கு முறை இல்லாமல் ஆயிற்று. ஆகவே, எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டும்? மற்ற மற்ற கட்சிகளுக்கு அனுமதியை ஒழுங்குபடுத்தி கொடுப்பதற்கும், நேர வரைமுறைக்கும், இது எளிதாக இருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில், மக்களிடையே உரையாற்றி விட்டு, அடுத்த ஊரில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்வதற்கு வசதியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு, பொட்டலம் கொடுப்பார்கள். நடுவில் எங்கேயாவது வண்டியை நிறுத்திவிட்டு, சாப்பிட்டுவிட்டுச் செல்வோம். இது எங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று. வேனிலேயே படுத்து உறங்குவோம்.

அடுத்தடுத்த கூட்டங்கள் என்று மக்களைத் தேடி நாங்கள் செல்கிறோம்.

93 வயதிலும் பிரச்சாரம்
செய்கிறீர்களே, எப்படி?

கேள்வி: 93 வயதிலும் இடைவிடாது பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களால் எப்படி  முடிகிறது?

உடலைப் பொறுத்ததல்ல –
மனதைப் பொறுத்தது!

தமிழர் தலைவர்: கொள்கையில் உறுதியும், உழைக்கவேண்டும் என்கிற திடமும் இருந்தால், இடைவெளி ஏன் தேவை? தேர்தல் பிரச்சாரம் செய்வதற்குரிய நாள்கள் குறைவு. ஆகவே, அதை செய்கிறோம்.

அது உடலைப் பொறுத்தது அல்ல; மனதைப் பொறுத்தது;  எனக்கு உடல் ஒத்துழைக்காமல் இருக்கலாம்; ஆனால், என் மனம் தெளிவாக இருக்கிறது ஒத்துழைக்கக் கூடிய அளவிற்கு. அதைவிட கொள்கை எதிரிகளைப் பார்க்கும்பொழுது, மீண்டும் எனக்குள் உற்சாகம் ஏற்படுகிறது. இதனால் எந்த வலியும் எனக்குக் கிடையாது.

கேள்வி: பிரச்சாரத்திற்கு இடையில் எங்களுக்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி அய்யா!

தமிழர் தலைவர்: இதுவும் ஒரு பிரச்சாரம்தானே, அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேர்காணலில் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *