லூதியானா, ஏப்.22 “சீக்கிய மதம் ஒரு தனித் துவமான மதம்” இது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சொன்ன ஒரு வரி.
“இந்தியாவில் வசிக்கும் அனைவரும் கலாச்சார ரீதியாக இந்துக்களே” இது அதே மேடையில் அவர் சொன்ன அடுத்த வரி. இந்த இரண்டு வரிகளும் தான் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவர் ஆர்எஸ்எஸ் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
கடந்த பிப்ரவரி இறுதியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்றிருந்தார். அப்போது அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு மோகன் பாகவத் ஆற்றிய உரை தான் பெரிய சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. இது சீக்கிய அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் பதவி விலகி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
மோகன் பாகவத்
மோகன் பாகவத் அந்த மேடை பேச்சு தெளிவானது, அதேநேரம் சிக்கலானது. சீக்கிய மதம் அதன் பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு முறைகளில் தனித்துவமானது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அதே சமயம், இந்து என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு புவியியல் மற்றும் கலாச்சார அடையாளம் என்பது அவரது வாதம். அதாவது, “இந்தியாவில் பிறந்த அனைவருமே அவர்களின் வழிபாட்டு முறைகள் மாறினாலும், கலாச்சார ரீதியாக இந்துக்களே” என்கிறார் பாகவத்.
சர்ச்சை
இந்த ‘அனைவரையும் உள்ளடக்கும்’ அணுகுமுறைதான் சீக்கியத் தலைவர்களைக் கோபப்படுத்தியுள்ளது. “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்ற தங்களின் நீண்டகால அடையாளப் போராட்டத்தைச் சிதைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப் பதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் மோகன் பாகவத் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ஓய்வு பெற வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
போராட்டங்கள்
லூதியானா உரையைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் சீக்கிய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. “எங்கள் மதம் ஒரு சுதந்திரமான வழிப்பாதை. அதை வேறொரு அடை யாளத்திற்குள் திணிக்க முயலாதீர்கள்” என்பதே அவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
