பழைய பவுத்தமும், டாக்டர் அம்பேத்கரின் புதிய பவுத்தமும்! (நவயான)-இரா.முரளி

15 Min Read

1956 அக்டோபர் 14ஆம் நாள். அன்று விஜயதசமி வேறு. நாக்பூர் நகரே அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு வாரம் முன்பே ஆயிரக்கணக்கானோர் அங்கு திரளத் தொடங்கிவிட்டனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கொண்டிருந்தன. அன்று நகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. அன்றுதான் அம்பேத்கர் தன்னையும், பிற தலித்துகளையும் பவுத்த மதத்திற்கு மதமாற்றம் செய்த நிகழ்வு நடந்தேறியது.

அக்டோபர் 13 இரவு, மும்பை விக்டோரியா டெர்மினஸில் நாக்பூர் செல்லும் நாக்பூர் எக்ஸ்பிரஸ் நிரம்பி வழிந்ததால், மத்திய ரயில்வே ஒரு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது. அக்டோபர் 14 அதிகாலைக்குள், நாக்பூர் வெள்ளை உடை அணிந்த மக்கள் கடலாக மாறியது. வாக்சின் இன்ஸ்டிடியூட் மைதானத்தில் (இன்றைய தீட்சாபூமி) அமைக்கப்பட்டிருந்த மேடையில் புத்தர் சிலை வைக்கப்பட வேண்டியது முக்கிய சவாலாக இருந்தது. அம்பேத்கர் நேரடியாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் ரவிசங்கர் சுக்லாவை அழைத்து, மத்திய அருங்காட்சியகத்தை இரவில் திறக்க வைத்துச் சிலையைக் கொண்டுவந்து நிறுவினார்.

நாக்பூரில் உள்ள தீட்சாபூமி (Deekshabhoomi), அம்பேத்கர் மதமாற்றம் செய்து கொண்ட இடம், இன்று நவயான பவுத்தர்களின் முக்கிய யாத்திரைத் தலமாக விளங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 14ஆம் நாள் ‘தம்மசக்கர பிரவர்த்தன்’ தினமாகக் கொண்டாடப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“மொத்தத்தில் மனித மாண்பை மதிப்பதையும், பகையுணர்வும், ஏற்றத்தாழ்வும் அற்ற சகோதரத்துவத்தை மனித உறவுகளில் உருவாக்குவதையும், அரசியல் பரப்பில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பாதுகாத்து செழுமையடைய வைப்பதையும் உள்ளடக்கிய ஒரு வலுவான மெய்யியல் கோட்பாட்டை அம்பேத்கர் உருவாக்கி அது வெறும் கருத்தியலாக அன்றி செயல்பாடாக இருக்க நவயான பவுத்தம் என்ற புதிய மதத்தையும் உருவாக்கினார் என்பது வருங்கால சமூக நீதி செயல்பாட்டாளர்களுக்கு ஒரு வழி காட்டுதலாகும்.”

நாக்பூரில் விஜயதசமி நாளில் (அக்டோபர் 14, 1956) இந்நிகழ்வு நடைபெற்றது. பவுத்தப் பேரரசரான அசோகர் விஜயதசமியைத் தனது வெற்றி நாளாகக் கொண்டாடினார். அதுபோல, ஆரியர்களுக்குப் பகையான “நாக” மக்களின் வாழ்விடமான நாக்பூரில் இருந்து, சமத்துவமற்ற இந்து மதத்தின் கோட்டையைத் தகர்த்து வெளியேறும் ‘உண்மையான எல்லை தாண்டல்’ (seemollanghan) இது எனப் பொருள்படும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது. இது ஆர்எஸ்எஸ் தலைமையகம் என்பதற்காக நாக்பூரைத் தேர்வு செய்யவில்லை என்றும், நாக மக்களின் வரலாற்றுத் தொடர்பையொட்டியே அதைத் தேர்வு செய்ததாகவும் தெளிவுபடுத்தினார் அம்பேத்கர்.

தம்முடன் சுமார் மூன்று லட்சம் பின்பற்றுபவர்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தில் இணைந்து மேற்கொண்ட மதமாற்றம், இந்தியச் சமூகச் சீர்திருத்த வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். அம்பேத்கர் புதிதாக உருவாக்கிய பவுத்தம் இது ‘நவயான பவுத்தம்’ (Navayana -‘புதிய வாகனம்’) என்று அழைக்கப்படும் இதன் தத்துவம், வெறுமனே ஒரு மதத்தைத் துறந்து இன்னொரு மதத்தைத் தழுவும் செயல் மட்டுமல்ல; மாறாக, நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்கான ஒரு புதிய தத்துவ அடித்தளமாகும்.

மரபிலிருந்து புத்தரை மீட்டெடுத்தல்!

புத்தரின் ஞானம் அவர் தியானப் பயிற்சிகளில் விளைந்ததாக விளக்கப்படுகின்றது. ஆனால். அவர் அந்த ஆன்ம அனுபவத்தை முன்வைத்துத் தன் மெய்யியலை உருவாக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் ஆன்மா பற்றிப் பேசக் கூட இல்லை. வெட்டவெளியைத் தொட்டுப் பார்ப்பது பற்றிய பிரகடனமும் வழிகாட்டுதல்களும் இல்லாதது அவரின் பவுத்தம். மாறாக அது மனிதரின் வேதனையைப் பற்றிய கவலை கொண்ட மகா கருணையைப் போற்றியது. அதில் கடவுளும், மீமெய்யியல் களமும் இல்லை. அதே சமயம் அன்று பண்பாட்டு மேலாதிக்கத்தைச் செய்த வேத மரபின் மெய்யியல் வேரை வெட்டுவதற்கான தர்க்கத்தையும், சகோதரத்துவத்தையும் அவர் முன் வைத்ததைக் காணவேண்டும். ஜாதி மத பேதமற்று அனைவரின் விடுதலையும் சமூகப் பரப்பில் காண வேண்டும் என்பதே புத்தரின் நோக்கமாகத் தெரிகின்றது. ஆனால், பின் வந்த நாகார்ஜுனர் அதைச் சூன்யவாத மெய்யியலாகத் தன் தர்க்க பலத்தைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்தார். தனி மனித ஆன்மா உச்சக் கட்டமாக உணரவேண்டியது ஒரு சூன்ய நிலையை என்ற புரிதலைப் பவுத்தத்திற்கு அது வழங்கியது. இந்த நிலையில் இந்து மரபில் தோன்றிய ஞானிகளின் ஞான அனுபவங்களும் தியானத்தில் விளையும் மோனம் பற்றிப் பேசுவதேயாகும். தனி மனிதர் பெறும் அருவமான அனுபவ நிலை பற்றியவை அவை. ஆனால் சமூகத்தில் ஒரு சமூகக் குழுவினால் ஒடுக்கப்படும் பிற மனித இனத்தவருக்கான விடுதலை பற்றி அந்த ஞானங்களால் பேச முடியவில்லை எனலாம். புலையன் ஒருவனால் சங்கரருக்கு ஞானம் கிட்டியிருக்கலாம். ஆனால், புலையனுக்கு விடுதலை கிடைத்ததா இல்லை கிடைக்குமா என்பது பற்றி சங்கரர் பேசியதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டத்தில் உண்மையான புத்தரை உலகிற்கு மீண்டும் மீட்டெடுத்துத் தரவேண்டும் என்பது அம்பேத்கரின் வேட்கையாக இருந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

வாழ்க்கையில் தலித் விடுதலைக்காகத் தொடர்ந்து அரசியல் களத்தில் போரட்டங்களை முன்னெடுத்த அம்பேத்கர், அரசியல் கோட்பாட்டு ரீதியான புரிதலை இந்திய மக்கள் பெறுவதற்கான கல்வி வழங்கப்பட்டு, பகுத்தறியும் பயிற்சி அளிக்கப்பட்டால்தான் இங்கு அரசியல் அறிவியல் குறித்தப் புரிதலை உருவாக்க முடியும் என அவர் உணர்ந்திருப்பார். அதுவரையில் ஆன்மீகப் பண்பைக் கொண்ட தலைவர்களின் பின்னால்தான் இவர்கள் திரளுவார்கள் என்பதையும் புரிந்திருப்பார். இந்தியாவின் முதல் தேர்தலின் போது 85 சதவிகிதத்தினர் படிப்பறிவு இல்லாதவர்கள். 17.6 கோடி பேர் வாக்காளர்கள். அவர்களுக்கும் வாக்களிப்பது எப்படி என்று தெரியாத நிலை. 1952 இல் முதல் தேர்தலில் போட்டியிட்ட அம்பேத்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு வணிகரிடம் தோல்வியுற்றார். இந்த நிலையில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை அரசியல் கோட்பாடுகளாக மக்களுக்குப் புரியவைக்க இயலாத நிலை. அதுவும் ஜாதியம் வேர் ஊன்றிக் கிளை பரப்பியிருந்த காலம். இந்தச் சூழல்தான் அவரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையையும், பிற ஜனநாயகக் கோட்பாடுகளையும் மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்லும் ஒரு புதிய வாகனமாக அவர் புத்த மதத்தைக் கண்டார். ஆனால் அம்பேத்கர் ஏறக்குறைய 21 ஆண்டுக்காலம் இந்து மதம், பவுத்தம், சீக்கியம், கிறித்துவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து முக்கிய மதங்களையும் ஆழமாகப் படித்து, இறுதியாகப் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த மதமாற்றம் என்பது விடுதலை மெய்யியல் அடிப்படையிலான ஒரு பண்பாட்டுப் புரட்சி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இது நாடாளுமன்ற அரசியல் அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, மனித மாண்பு என்பது மறுக்கப்பட்ட இனத்திற்கான ஒரு விடுதலை நிகழ்வு இது. அம்பேத்கர் தன் அரசியல் எல்லையை ஆன்மீகத்திற்கு விஸ்தரித்த நிகழ்வாகும் இது. கட்சி என்பதை விட ஆன்மீக வடிவம் கொண்ட அரசியல் களமே இங்கு செயல்படுத்த இயலும் என்று கூட அவர் கருதியிருக்கலாம்.

மரபுவழிப் பவுத்தத்திலிருந்து
நவயானத்தின் வேறுபாடுகள்

நவயான பவுத்தம், பாரம்பரிய தேரவாத, மகாயான, வஜ்ரயான பவுத்தப் பிரிவுகளிலிருந்து பல அம்சங்களில் அடிப்படையில் வேறுபடுகிறது. அம்பேத்கர் தமது நவயானத்தைப் புத்தரின் அசல் போதனைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவே கருதினாரே தவிர, புதிய ஒரு மதப்பிரிவை உருவாக்குவதாகக் கருதவில்லை. இருப்பினும், அவரது விளக்கங்கள் மிகவும் தீவிரமான மாற்றங்களைக் கொண்டிருந்தன.

மரபுவழிப் பவுத்தம் தனிமனித விடுதலை (நிர்வாணம்) மற்றும் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. அம்பேத்கரின் நவயானமோ, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது. ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தப் பூமியிலேயே மானத்துடன் வாழ்வதையே இது தனது மய்ய நோக்கமாகக் கொண்டிருந்தது. நிர்வாணம் என்பது உலகத்திலிருந்து விடுபடுவதற்கான வழியாக இல்லாமல், சமூக அநீதிக்கு எதிராகச் செயல்படத் தயார்படுத்தும் ஒரு முன்னோடி நிலையாக அவர் விளக்கினார்.

தலித்தின் சுயம்

வைதீகக் கோட்பாடுகளின் விளைச்சலான மேல் ஜாதிகளின் ஆணிவேர் என்பது ஆன்மா என்ற ஒரு கருத்தாக்கமே என்று அம்பேத்கர் கருதினார். மேல் ஜாதிக் கட்டமைப்பான நான் எனும் சுயம் ஆன்மா எனும் தகுதியைக் கொண்டது. தலித்துகளின் சுயம் என்பது வெறும் “அதுவாக”க் கருதப்பட்டது. அது ஓர் அஃறிணைதான். அதற்கு முக்திக்கு வாய்ப்பு கிடையாது. ஏனெனில் அவர்கள் நிரந்தரமாக மாசு பட்டவர்கள் என்பது மனுவின் கோட்பாடாகும்.

இந்த மாசு என்பது இறைச்சி வகை உண்பதை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்டது என்கின்றார் அம்பேத்கர். இதை மறுத்து, தலித்துகளின் சுயம் என்பதும் மாண்புக்குரியது என்பதை உலகறியச் செய்ய ஒரு சரியான மெய்யியல் அடிப்படைத் தேவை என்றும், அது பவுத்தம்தான் என்றும் அம்பேத்கர் கண்டார். ஆனால் மீண்டும் வேதாந்தக் கருத்துக்களுக்கு எதிரான தர்க்க எதிர்வாதத்தை முன்வைப்பது என்பதை விட அவர் சமூகச் சூழலைக் கருத்தில் கொள்ளும் ஒரு தலித்திய அறிவுக் கோட்பாட்டை (Dalit Epistemology) முன்வைத்தார். இந்த அறிவுக் கோட்பாடு. மரபுக்கும், நவீனத்துவத்திற்கும் இடைப்பட்ட ஒரு கோட்பாடு.

தன் கோட்பாட்டில் அம்பேத்கர் கடவுள் மற்றும் ஆன்மா (soul) மீதான நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மனித முழுமை அடைதல் (human perfectibility) என்பது இந்த உலகிலேயே, இந்த வாழ்க்கையிலேயே சாத்தியமான ஒன்று என்று அவர் நம்பினார். ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபடுவதே மேல் என்று கூறினார்.

தன்னை ஒரு கடவுளின் அவதாரமாகச் (avatar) சிலர் போற்றியபோது, அது வெறும் “இறையியல் முனைப்புகள்” (theological preoccupations) , இப்படிப்பட்ட சிந்தனைகளால்தான் பார்ப்பனியம் “இந்திய மனதைக் கெடுத்தது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் தனிப்பட்ட முறையில் தியானப் பயிற்சிகளைச் செய்தார் என்ற தெளிவான ஆதாரம் இல்லை. அவர் பவுத்தத்தைத் தியான மதமாக அல்ல, சமூக-நெறித் தத்துவமாக மறுவிளக்கம் செய்தார்.

கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய
மாற்று விளக்கம்!

அவரைப் பொறுத்தவரை, ஆன்மா என்பது பஞ்ச பூதங்களின் சுழற்சியால் உருவாவது ஆகும். இறப்பிற்குப் பின்னால், ஒருவரது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்கள் (காற்று, நீர், பூமி, நெருப்பு, ஆகாயம்) பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகின்றன என்பதாகும். எனவே தனியாக ஆன்மா என்ற ஒன்று இல்லை. மோட்சமும் இல்லை. ‘சொர்க்கம், நரகம் என்பது மனிதர் இந்த உலகிலே உருவாக்கிக்கொள்ளும் வாழ்க்கைதான் என்றார்!

மரபுவழிப் பவுத்தத்தில், கர்மா என்பது ஒவ்வொரு தனிநபரின் செயல்களின் விளைவாகும். ஆனால் அம்பேத்கர், ஜாதிய அமைப்பு ஒரு வகையான சமூகக் கர்மாவாகச் செயல்படுவதாக விளக்கினார். ஒருவரின் பிறவிச் சூழலே அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஓர் அநீதியான சமூக அமைப்பைச் சுட்டிக்காட்டினார்.

அவரைப் பொறுத்தவரை, கர்மா என்பது விதி (fate) அல்ல; அது ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய செயல் (action). எனவே, ஒவ்வொருவரும் தங்கள் செயல்களால் சமூகத்தை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். அம்பேத்கரின் பவுத்த நவீனத்துவம் (Buddhist modernism), கர்மாவை ஒரு மாய அல்லது உளவியல் நிலையாகப் பார்க்காமல், நெறிமுறை (ethics) மற்றும் நீதி (justice) சார்ந்த வாசிப்பாக மாற்றியது.

சமயம் வாழ்க்கைக்கானது

அவர் தன்னுணர்வு (consciousness) என்பது சமூக ரீதியாக உருவாகும் ஒரு மனநிலை என்று வரையறுத்தார். அம்பேத்கரின் தத்துவத்தில், தன்னுணர்வின் மிக முக்கியமான வெளிப்பாடு ‘சுயமரியாதை’ (self-respect) ஆகும். இதிலிருந்து அவர் தலித் சுயம் என்பதை விளக்குகின்றார். தலித் சுயத்தின் (Dalit self) வளர்ச்சி, சமூகத்தில் நிலவும் சுரண்டல் மற்றும் இழிவுபடுத்தல்களுடன் (exploitation and humiliation) தொடர்ந்து கொள்ளும் போராட்டத்தின் மூலமே உருவாகிறது என்றார். இந்த விளக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தங்கள் மீதான மதிப்பை உணர்த்தி, ஒரு புதிய சுய உணர்வை (new Dalit consciousness) உருவாக்கியது எனலாம்.

நவயானம் உருவாக்கப்பட்ட அந்நாளில், அம்பேத்கர், அங்கு குவிந்த இலட்சக்கணக்கானவர்கள் பின்பற்றவேண்டிய 22 உறுதிமொழிகளை முன்மொழிந்தார். அவர்களும் ஏற்று ஒப்புதல் தந்தனர். இந்த உறுதி மொழிகளே நவயானத்தின் அடித்தளமாக அமைந்தன. அவையாவன:

இந்து மதத்தை நிராகரித்தல்: முதல் ஆறு உறுதிமொழிகள் இந்து மதத்தின் கடவுள்கள், அவதாரக் கொள்கை மற்றும் சடங்குகளை முற்றிலுமாக நிராகரிக்கின்றன.

பவுத்த கொள்கைகளை ஏற்றல்: 11 முதல் 18 வரையிலான உறுதிமொழிகள் புத்தரின் எண்வழிப் பாதை, பாரமிதைகள் மற்றும் அய்ந்து ஒழுக்கங்களை (பஞ்ச சீலம்) ஏற்றுக் கொள்வதாகும்.

சமூக நீதி மற்றும் சமத்துவம்: 9, 10 மற்றும் 19-ஆம் உறுதிமொழிகள் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

புதிய அடையாளம்: 21-ஆம் உறுதிமொழி, இந்த மதமாற்றத்தை ஒரு புதிய பிறப்பாக உணர்ந்து, பழைய அடையாளங்களிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது.

இந்த உறுதிமொழிகள் அம்பேத்கர் உருவாக்கிய பவுத்தத்திற்கும் (நவயானம்), பாரம்பரிய பவுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அம்பேத்கர் பவுத்தத்தை ஒரு ‘பிந்தைய-சமயம்’ (post-religious religion) என்று கருதினார். அதாவது, மூடநம்பிக்கைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் பெயரால் மக்களைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாக இல்லாமல், அறிவு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தைக் கட்டமைக்கும் ஒரு நெறிமுறைக் கோட்பாடாக அவர் அதைப் பார்த்தார்.

இதனால்தான் அவர் பவுத்தத்தை மார்க்சியத்திற்கு ஒரு சிறந்த மாற்றாகவும், வன்முறையற்ற சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் கருதினார். இதனால் சில பாரம்பரிய பிக்குகள் “இது புத்தமதத்தின் புதிய விளக்கம்; பாரம்பரியத்திலிருந்து விலகுகிறது” என்று விமர்சித்தனர். சிலர் “புத்தமதம் அரசியல் இயக்கமாக மாற்றப்படுகிறது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

வி.டி.சாவர்க்கரின் விமர்சனம்: இந்து மகாசபைத் தலைவர் வி.டி.சாவர்க்கர், மே 1956 இல் ‘மராத்தி கேசரி’ இதழில் இம்மதமாற்றத்தைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அம்பேத்கரின் முயற்சி இந்து மதத்திற்குப் பேரிழப்பு எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், அம்பேத்கர் பவுத்தத்திற்கு மாற முயன்றாலும், அவர் இந்துத்துவத்தின் எல்லைக்குள்தான் இருப்பார் என்றும் சாவர்க்கர் கருத்துத் தெரிவித்தார். இன்றும் இந்தப் புரிதலின் அடிப்படையில் தலித்துக்களையும், அம்பேத்கரையும் கபளீகரம் செய்ய முற்படுகின்றன வலதுசாரி அமைப்புகள்.

ஜவஹர்லால் நேருவின் அணுகுமுறை: பிரதமர் நேரு இந்நிகழ்வு குறித்து மவுனம் காத்தார். மதமாற்றத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அம்பேத்கர் தனது ‘புத்தரும் அவர் தம்மமும்” நூலின் 500 பிரதிகளை அரசு வாங்க வேண்டும் என்று நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், புத்தர் விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்கெனவே செலவிடப்பட்டுவிட்டதாகக் கூறி நேரு மறுத்துவிட்டார். இது அன்றைய அரசின் அணுகுமுறையைக் காட்டியது.

பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் பணி!

பாரம்பரிய பவுத்தத்தில் பிக்குகள் தமது முக்கிய நேரத்தைத் தியானம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலேயே செலுத்தினர். ஆனால் நவயானத்தில், அம்பேத்கர் பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்குச் (பெண் துறவியர்) சமூகச் சீர்திருத்தத்தில் முக்கிய பங்கு வழங்கினார். ஜாதிய எதிர்ப்புப் போராட்டத்திலும், சமூக விழிப்புணர்வு பரப்புதலிலும் துறவிகள் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். இது பெண் துறவிகளுக்கும் புதிய அதிகாரத்தை வழங்கி, பாலினச் சமத்துவத்தையும் வலியுறுத்தியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பாட்டவர்கள் நவயான பவுத்தர்கள் என்று தெரிகின்றது. அதில் 90 சதவிகிதத்தினர். மகாராட்டிர மாநிலத்தில் வசிக்கின்றனர் என்பதும், அவர்களின் எழுத்தறிவு 82 சதவிகிதத்திற்கும் மேலானது என்றும் தெரிகின்றது.

நவயான பிக்குணிகள், அம்பேத்கரின் பார்வையில், சமூக மாற்றத்தின் முக்கிய ஊடகங்களாக இருந்தனர். பாரம்பரிய பவுத்தத்தில் பிக்குணிகள் முக்கியமாக ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க, நவயான பிக்குணிகள் சமூக நீதி, பெண்களின் உரிமை, ஜாதி ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது பெண்களின் அதிகாரமயமாக்கலுக்கும், சமூகத்தில் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும் ஒரு முக்கியமான படியாக இருந்தது. பந்தே சுனீதி பிக்குணி (Bhante Suniti Bhikkuni), மற்றும் தம்ம உபாசிகா ஷாலினி வஜ்ரச்சித்தா (Dhamma Upasika Shalini Vajrachitta) போன்ற பல பிக்குணிகள் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர்.

உலகளாவிய தாக்கம்

இன்று நவயானம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி வளர்ந்து வருகிறது. மியான்மர், தாய்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நவயான பவுத்த சமூகங்கள் உருவாகியுள்ளன. இருப்பினும், நவயான பவுத்தத்தின் பாதையில் சவால்கள் இல்லாமல் இல்லை. மதம் மாறிய பின்னர், பல தலித் பவுத்தர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டு உரிமைகளை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தையும், அதனால் ஏற்பட்ட சட்டப் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. பட்டியலின இட ஒதுக்கீட்டிற்கான சட்டப்பூர்வ அடிப்படை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341ஆவது பிரிவு ஆகும். இந்தப் பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஒரு சமூகத்தைப் பட்டியலினமாக அறிவிக்கிறார். ஆரம்பத்தில், 1951-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவின்படி, பட்டியலின இட ஒதுக்கீடு என்பது இந்து மதத்தினருக்கு மட்டுமே பொருந்தும் என்றிருந்தது. அம்பேத்கரின் பெருமளவிலான மதமாற்றத்தைத் “தொடர்ந்து, இந்தச் சட்டத்தில் முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டன: 1956-இல் சீக்கிய மதத்தினர் சேர்க்கப்பட்டனர். 1990-இல் பவுத்த மதத்தினர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதன் பொருள், பவுத்தத்திற்கு மதம் மாறிய பிறகும், ஒரு நபர் தான் மாறுவதற்கு முன்பு இருந்த அதே சமூக, பொருளாதார பின்னடைவைச் சந்திப்பதால், அவர் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறத் தகுதியானவர் என்று சட்டம் அங்கீகரிக்கிறது.

தமிழ் பவுத்தம்

தமிழ்நாட்டில் அயோத்திதாசர் அம்பேத்கருக்கு முன்பே தமிழ் பவுத்தம் என்பது பற்றி ஒடுக்கப் பட்டவர்களின் பூர்வீக மதமாக விளக்கியிருந்தார். அம்பேத்கர் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். ஆனால் அவர் அயோத்திதாசர் குறித்து எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நவயான பவுத்தத்திற்கு முன்பே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை பேசிய பவுத்தம் தமிழ்நாடில் இருந்தது என்பதை அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கும் நவயான பவுத்தத்திற்குமான வேறுபாடுகளும் அறிந்து கொள்ளவேண்டியவையாகும்.

மெய்யியல்

அம்பேத்கரின் தத்துவத்தின் வடிவமைப்பு மரபுக்கும் நவீனத்து வத்திற்கும் இடையிலும், அதற்கும் அப்பாற்பட்ட நிலையிலும் அமைந் துள்ளது. இந்தியச் சமுதாயத்தில் ஜாதி அடிப்படையிலான அடிப்படை வாதத்தையும், பிளவுபட்ட அடையாளங் களையும் உருவாக்கிய மரபுகளை மீறி அவற்றைக் கடந்து செல்லும் ஒரு விமர்சன கோட்பாடாக அது விளங்குகிறது. அது நவீன காலத்தின் விழுமியங்களான பகுத்தறிவு (rationalism), மதச்சார்பின்மை (secularism), மற்றும் சமூக ஜனநாயகம் (social democracy) ஆகியவற்றின் துணையுடன் நடைபெறும் மாற்றத்துடனும் இணைந்துள்ளது. இந்த விழுமியங்களை மேற்கத்திய மரபிலிருந்து அல்ல, தான் புத்தரிடமிருந்துதான் எடுத்ததாக அம்பேத்கர் குறிப்பிடுகின்றார்.

அம்பேத்கர் ஜன் டூயியின் மாணவர் ஏன்பதால் அவரின் மெய்யியலை நடைமுறைத்துவம் (pragmatism) என்று சுருக்கிவிட முடியாது. வரலாற்று ரீதியாக அவரும் அவரது சமூகமும் சந்தித்தத் திரளான சமூக, பொருளாதார பாதிப்புக்களே அவரது தத்துவ அணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தன. அம்பேத்கரின் நவீனத்துவ மெய்யியல்,மேற்கத்தியக் கருத்துக்களை இந்தியச் சூழலில் புகுத்திய ஓர் எளிய முயற்சி அல்ல.

மாறாக, பகுத்தறிவு, சமத்துவம், சுதந்திரம் போன்ற உலகளாவிய மதிப்பீடுகளை இந்தியாவின் சிக்கலான சமூக அமைப்புகளுக்குள் பிரயோகித்து, ஒரு புதிய சமூக ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் உருவாக்கிய ஓர் ஆழமான மற்றும் தனித்துவமான சிந்தனைப் பள்ளி ஆகும். இந்தியாவில் ‘வர்க்கம்’ என்பது ‘ஜாதி’யின் வடிவத்தில் இருப்பதாக அம்பேத்கர் வாதிட்டார். ஜாதியை “உள்ளடங்கிய வர்க்கம்” (Enclosed Class) என்று அழைத்தார்.

ஜாதியை ‘மேற்கட்டுமானம்’ என்று ஒதுக்கித் தள்ளிய அன்றைய இந்தியக் கம்யூனிஸ்டுகளை விட, ஜாதியையே இந்திய முதலாளித்துவத்தின் அடித்தளமாகக் கண்டார். ஒரு சூத்திரரின் அந்நியப்படுதலையும் (alienation) ஒரு தொழிலாளி வர்க்க (proletariat) அந்நியப்படுதலாகக் குறைத்துப் பார்க்க முடியாது என்று அவர் விளக்கினார்.

அம்பேத்கர் 1956 நவம்பர் 20 அன்று காத்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பவுத்த சகோதரத்துவ மாநாட்டில் “புத்தரும் மார்க்சும்” என்ற தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், சமூக மாற்றத்திற்கான இரண்டு வழிகளைப் பற்றி விவாதித்தார். வன்முறையற்ற முறையில் சமூக மாற்றத்தைக் கொண்டுவரும் பவுத்தத்தின் வழி, வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் மார்க்சிய வழியை விட மேலானது என்று அவர் நம்பினார்.

இன்று, உலகம் முழுவதும் வன்முறை அதிகரித்து வரும் வேளையில், அம்பேத்கரின் இந்த அமைதிப் பாதை, நமக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறது.

மொத்தத்தில் மனித மாண்பை மதிப்பதையும், பகை யுணர்வும், ஏற்றத்தாழ்வும் அற்ற சகோதரத்துவத்தை மனித உறவுகளில் உருவாக்கு வதையும், அரசியல் பரப்பில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பாதுகாத்து செழுமையடைய வைப்பதையும் உள்ளடக்கிய ஒரு வலுவான மெய்யியல் கோட்பாட்டை அம்பேத்கர் உருவாக்கி அது வெறும் கருத்தியலாக அன்றி செயல்பாடாக இருக்க நவயான பவுத்தம் என்ற புதிய மதத்தையும் உருவாக்கினார் என்பது வருங்கால சமூக நீதி செயல்பாட்டாளர்களுக்கு ஒரு வழி காட்டுதலாகும்.

நன்றி: “காக்கைச் சிறகினிலேஏப்ரல் 2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *