திருவண்ணாமலையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி!

7 Min Read

* சட்டம் ஒன்று நிறைவேற வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு ஆதரவு வேண்டும்!
* மாநில சட்டமன்றங்களில் 50 விழுக்காடு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவேண்டும்!
இப்பொழுது பி.ஜே.பி. நிறைவேற்றத் துடிக்கும் சட்டம் இவற்றையெல்லாம் தூரத் தூக்கி எறிந்துவிட்டது!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே நொறுக்கித் தள்ளிவிட்டது!

திருவண்ணாமலை, ஏப்.17 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே அடித்து நொறுக்கி, தொகுதி மறுவரையறை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (16.4.2026) தேர்தல் பரப்புரைக்காக திருவண்ணாமலைக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தொகுதி மறுவரையறையால் எந்தப் பாதிப்பும், யாருக்கும் கிடையாது என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரே?

பிரதமர் மோடி எப்போதுமே
உண்மையைப் பேசுவதில்லை!

தமிழர் தலைவர்: பிரதமர் மோடி எப்போதுமே உண்மையைப் பேசுவதில்லை. மேலும், அவர் ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோல’ பேசக் கூடியவர்.

தொகுதி மறுவரையறையால் பாதிப்பு எப்படி ஏற்படும் என்பதைப்பற்றி நாங்கள் மட்டும் சொல்லவில்லை, ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்துப் பார்க்கட்டும்!

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தையே தொகுதி மறுவரையறை என்பது மாற்றப் போகிறது. எப்படி என்று சொன்னால், அதற்கு முன்னால், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஒன்று மில்லாததாக ஆக்கி, அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் மீண்டும் இதைக் கொண்டு வருகிறார்கள் என்பதை விளக்கமாக நாங்கள் கூறியிருக்கின்றோம்.

அதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உள்ள மிக முக்கியமான பகுதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்குகி றார்கள்.

எப்படி என்று சொன்னால், முதலில், ஒரு மசோதாவை தாக்கல் செய்தால், அதனை ஒப்புக் கொள்கிறவர்கள் கையைத் தூக்கினால் போதும்; அந்த மசோதா வெற்றி பெற்றுவிடும் என்று கொண்டு வந்தார்கள். இது அரசி யலமைப்புச் சட்டத் திருத்தத்தில் கிடையாது.

முக்கியமான பிரச்சினைகளில், இரண்டு நிபந்த னைகள் உண்டு. 50 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிக்க வேண்டும் என்பது ஒன்று.

உறுப்பினர்கள் 50 விழுக்காட்டினர் ஒப்புக்கொள்ளவேண்டும்!

அவையில், அமர்ந்திருப்பவர்களில் மூன்றில், இரண்டு பாகத்தினர் ஒப்புக்கொள்ளவேண்டும். அதோடு மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படு வதாக இருந்தால், அதை அவர்கள் எப்படி அணுக வேண்டும்? மாநிலங்கள், சட்டமன்றத்தைக் கூட்டி, அதில், உறுப்பினர்கள் 50 விழுக்காட்டினர் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இத்தனை நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அத்தனையையும் தொகுதி மறுவரையறை தூக்கிப் போடுகிறது.

2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடா ளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வினருக்கு வெற்றி வாய்ப்பு வேண்டும். ஆனால், அதற்கு மக்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மைனாரிட்டி அரசாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம், மோடியின் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது!

ஆகவே, அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான், ஹிந்தி பேசும் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்தி, அதன்மூலமாக தாங்கள் ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம். அதுதான், மோடியின் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது.

மனுதர்மம் அரசியலமைப்புச் சட்டமாகவேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்!

அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்குத் தேவை இல்லை என்றும், மனுதர்மம்தான் அரசியலமைப்புச் சட்டமாக்கப்படவேண்டும் என்றும் ஏற்கெனவே சொன்னார்கள்.

அதுபோன்றே, மனுதர்மத்தை நாங்கள் அரசிய லமைப்புச் சட்டமாக்கிக் கொள்கிறோம் என்று, அதற்காக மெஜாரிட்டியை உருவாக்குவதற்கு என்னென்ன வழிகளோ அவற்றைச் செய்ய முனைந்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் அவர்களுடைய கைகளில்தான் இருக்கிறது. இதற்கு ஆதாரம் இருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் இவை அத்தனையையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.

ஒன்றிய பா... அரசின்
சூட்சமம் புரியாமல் பேசும் சிலர்!

தொகுதி மறுவரையறைப்படி, தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் கூடும் என்று நாக்கில் தேனைத் தடவுகிறார்கள், சர்க்கரையைத் தடவுகிறார்கள் என்று நான் சொல்வதற்குக் காரணம், ‘‘அவர்கள்தான் தொகுதிகளை அதிகப்படுத்துவோம் என்று சொல்கி றார்களே, நீங்கள் ஏன் அதனை வேண்டாம் என்று தடுக்கிறீர்கள்?’’ என்று இதிலுள்ள சூட்சமம் புரியாத சிலர் கேட்கிறார்கள்.

தொகுதி மறுவரையறையை செய்துவிட்டு, அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள், சமூக நீதிப் பிரிவுகள் எல்லாவற்றிலும் திருத்தம் செய்வார்கள்.

உதாரணமாக, அவர்கள் தவறாக செயல்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம், ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொன்னார்கள் மோடி ஆட்சியில்.

அந்த ஏழைகள் என்பவர் யார்?

எல்லா ஜாதியிலும் இருக்கக்கூடிய ஏழைகளா? என்றால், கிடையாது. ‘‘உயர்ஜாதி ஏழைகள்’’ என்று சொன்னார்கள்.

ஹிட்லர் ஆதிக்கம், எதேச்சதிகாரம், பாசிசம் வருவதற்கு வழிவகுத்திருக்கின்ற முன்னோட்டம்!

ஆகவேதான், இது முழுக்க முழுக்க வெறும் தொகுதி மறுவரையறை பிரச்சினை மட்டுமல்ல; அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை, இடித்து நொறுக்கி, மீண்டும் ஒரு ஹிட்லர் ஆதிக்கம், எதேச்சதிகாரம், பாசிசம் வருவதற்கு வழிவகுத்திருக்கின்ற முன்னோட்டம் – அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.

அதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். கேரளம் மாநிலமும் உணர்ந்துகொண்டது. அதேபோல,  மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ளவர்கள் உணரவேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, அந்த மசோதாவின் நகலை எரித்திருக்கிறார்கள்!

‘‘தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால், அவர்கள், இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தமாட்டார்கள்; எல்லா வற்றையும் வேகமாக நாம் செயல்படுத்திவிடலாம். ரோடு ரோலர் மெஜாரிட்டி, கைதூக்கும் மெஜாரிட்டி இருக்கிறது’’ என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால், தேர்தலை விட முக்கியமான எங்கள் உரி மைகளை வி்ட்டுக் கொடுக்கமாட்டோம் என்ப தற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, அந்த மசோதாவின் நகலை எரித்திருக்கி றார்கள்.

தொகுதி மறைவரையறையின் பின்னணியில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது.

பொய்க்கால் குதிரை,
ரேஸ் குதிரையோடு போட்டி போட முடியாது!

செய்தியாளர்: த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘அ.தி.மு.க., பா.ஜ.க. போன்று நாங்கள் தேர்தல் வாக்குறுதி களை அள்ளி வீசமாட்டோம்; அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக வைத்து, நாங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்திருக்கிறோம்’’ என்றார். முதன்முதலில் தேர்தலில் போட்டியிடுபவர், அறம், பொருள், இன்பத்தை வைத்துத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறோம் என்று சொல்லியிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: கொள்கையே என்னவென்று தெரியாத ஒரு கட்சி அது. அப்படிப்பட்ட சூழலில், அவருடைய வாக்குறுதிக்கு எந்தவிதமான உறுதியும் கிடையாது.

முதலில், தன்னுடைய கட்சிக்குக் கொள்கை உரு வாக்கி, கட்சிக்கு ஒரு கட்டுப்பாடு வகுப்பதற்கு அவர் தயாராக இல்லை.

பொய்க்கால் குதிரை வேகமாக ஆடும்பொழுது, பார்ப்பவர்களுக்குக் கலகலப்பாக இருக்கும். ஆனால், அந்தப் பொய்க்கால் குதிரை, ரேஸ் குதிரையோடு போட்டி போட முடியாது.

ஆகவே,  அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவ தில்லை. அதற்காக நேரத்தை செலவழிக்கவேண்டிய அவசியமுமில்லை.

மின்மினிப் பூச்சிகள்,
மின்சாரத்தோடு போட்டி போட முடியாது!

மின்மினிப் பூச்சிகள், மின்சாரத்தோடு போட்டி போட முடியாது. இருட்டில், மின்மினிப் பூச்சிகள் வரும்பொழுது, வெளிச்சம் தெரிவது போன்று தெரியும்; ஆனால், மின்சார வெளிச்சம் என்பது நிரந்தரமானதாகும்.

வாணவேடிக்கையை ரசிக்கலாம்; அது மின்சாரப் பயனைத் தராது. ஆகவே, அவருடைய வாக்குறுதிகளைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆட்சிக்கு வருகின்றவர்கள்தானே வாக்குறுதிகளைத் தரவேண்டும். மக்கள் மன்றத்தையே அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. சட்டமன்ற விதிகள்கூட அவருக்குத் தெரியாது.

அதற்கு உதாரணம், வேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுதுகூட, திருத்தம் இல்லாமல் தாக்கல் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்டவர், நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார்? என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

ஆகவே, அவரைப்பற்றி பேசி, நேரத்தை நாங்கள் வீணாக்க விரும்பவில்லை.

பீகாரில், நிதிஷ்குமாருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் வரப் போகிறது!

செய்தியாளர்: எடப்பாடி பழனிசாமி அவர்கள், தோல்வி பயத்தால், தலைவர்களை தரக்குறைவாக பேசுவதுபற்றி…?

தமிழர் தலைவர்: தோல்வி பயம் இல்லையென்றால், இந்த அளவிற்குத் தரக்குறைவாகப் பேசுவாரா? மதுரையில் மாநாடு நடத்தினார்கள்; அந்த மாநாட்டு மேடையின் முகப்பில் ‘பெரியார் படம்’ வைத்திருந்தார்கள். ‘பெரியார் படம்’ வைக்கக்கூடாது என்று பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் சொன்னவுடன், பெரியார் படத்தை எடுத்துவிட்டு, தாமரைப் படத்தை வைத்தார்கள். இதைவிட அடிமைத்தனம் வேறு உண்டா? பீகாரில், நிதிஷ்குமாருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அந்த நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் வரப் போகிறது.

யாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்!

‘‘புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மேல் வந்து விழுங்கள்’’ என்று சொல்வதுபோன்று, அவருக்குத்தான் பயமே தவிர, தி.மு.க.விற்கு எந்தவிதமான பயமும் கிடையாது. யாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட அவருக்குக் கிடைக்குமா? என்பது சந்தேகமே!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *