மும்பை, ஏப்.16 மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள நெஸ்கோ (NESCO) மய்யத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர், தலா ரூ.2 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் புழக்கம் தாராளமாக இருந்ததாகக் கூறப் படுகிறது.
போதை மாத்திரை
நிகழ்ச்சியின் போது போதை மாத்திரைகளை உட்கொண்ட மூன்று இளைஞர்களுக்கு நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 24 வயது இளம்பெண் மற்றும் 28 வயது இளைஞர் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு 25 வயது பெண் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த உயிர்க்கொல்லி போதை மாத்திரைகள் மும்பைக்கு வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆகாஷ் சமல் (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்) சன்னி வினோத் ஜெயின் (நெஸ்கோ ஊழியர்) பால கிருஷ்ணன் பலராம் (உள்பாதுகாப்பு குழு உறுப்பினர்) மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய இரண்டு மாணவர்கள் உட்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் மிக சாதாரணமாக இருப்பதாகவும், இளைஞர்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதாகவும் சமூக வலைதளங் களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
“தமிழ்நாட்டில் சட்டம் – –- ஒழுங்கு குறித்தும், போதைப்பொருள் புழக்கம் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜகவினர், தற்போது பாஜக ஆளும் மகாராட்டிராவில் அரங்கேறியுள்ள இந்த அவலத்தைப் பார்க்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

