ஓசூர், ஏப்.15- இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (அய்எஸ்டிஇ) தமிழ்நாடு பிரிவு 28ஆவது ஆண்டு ஆசிரியர் மாநாடு 10.04.2026 அன்று காலை 9.30 மணிக்கு ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலிருந்தும் பல்வேறு கல்லூரியின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அய்எஸ்டிஇ-யின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் பிரதாப்சிங் காகாசாகேப் தேசாய் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் டாக்டர் லஸ்யா தம்பிதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அய்எஸ்டிஇ தமிழ்நாடு பிரிவு தலைவர், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சங்கரசுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜி.ரங்கநாத் மற்றும் முதல்வர் டாக்டர் ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் அய்எஸ்டிஇ தமிழ்நாடு பிரிவு செயலாளர் மற்றும் பொருளாளர் பேராசிரியர்
கே.சவுரிராஜன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதியமான் கல்லூரியின் பேராசிரியர்கள் எம். சுகன்யா மற்றும் டாக்டர் ஜே.அறிவுடை நம்பி ஆகியோரால் நன்றியுரை வழங்கப்பட்டது.
புதுமையான கற்பித்தல் முறைகள்
இந்த நிகழ்ச்சி, பேராசிரியர் களின் தொழில்நுட்பக் கல்வியின் மேம்பாடு, புதிய ஆய்வுகள், புதுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை பகிர்ந்து கொள்ளும் முக்கிய தளமாக அமைந்தது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு “சிறந்த அத்தியாய விருது” (ISTE Best Chapter Award 2026) வழங்கப்பட்டது. மேலும் இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு “சிறந்த அத்தியாய தலைவர் விருது” (ISTE Best Chapter Chairman Award 2026), “சிறந்த அத்தியாய செயலாளர் விருது” (ISTE Best Secretary Award 2026), “சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது” (ISTE Best Polytechnic Teacher Award 2026), “சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது” (ISTE Best Paper Award 2026) ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறந்த அத்தியாய விருது
இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாட்டிற்காக “சிறந்த அத்தியாய விருது” (ISTE Best Chapter Award 2026) இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு நடத்தும் திறன், புதிய முயற்சிகள் மற்றும் புதுமைகள் அறிமுகம், சிறந்த தலைமைத்துவ திறன் ஆகிய சிறப்பான செயல்பாட்டிற்காக இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரிக்கு “சிறந்த அத்தியாய தலைவர் விருது” (ISTE Best Chapter Chairman Award 2026) விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த அத்தியாய செயலாளர் விருது
மேலும் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தும் திறன், மாற்றங்களுக்கு தகுந்து செயல்படும் திறன், டிஜிட்டல் திறன், இலக்கை நோக்கி செயல்படும் திறன், நேர்த்தி, பொறுப்புணர்வு மற்றும் ஆளுமைத் திறன் ஆகிய சிறப்பாக செயல்பாட்டிற்காக இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜாவுக்கு, (HOD/ECE) “சிறந்த அத்தியாய செயலாளர் விருது” (ISTE Best Secretary Award 2026) விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது
கற்பித்தல் திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் மாணவர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கான சிறந்து பங்களிப்பு, மாணவர்களுக்கு புராஜக்ட், இன்டன்சிப் மற்றும் பிளேஸ்மெண்ட் வாய்ப்புகளை ஏற்படுத்தி கல்வி சேவையை சிறப்பாக ஆற்றிய இக்கல்லூரியின் ஆங்கில முதுநிலை பேராசிரியர்
ஆர்.அய்யநாதனுக்கு “சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது” (ISTE Best Polytechnic Teacher Award 2026) விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது
இதில் ஆராய்ச்சிப் பிரிவில் 02.04.2026 அன்று காணொலி மூலம் நடைபெற்ற “Academic Leadership in the Age of AI : ”Shaping a Sustainable and Intelligent Future” என்ற முதன்மைத் தலைப்பில் 24 பேராசிரியர்கள் கட்டுரை வாசித்தளித்தலில், இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜாவின் (HOD/ECE) “AI – Powered Personalized Learning in Higher Education: Transforming
Research, Projects, and Career Pathways” என்ற ஆய்வுக் கட்டுரை “சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது” (ISTE Best Paper Award 2026) விருதிற்காக தேர்வு செய்யப்பட்டது மற்றும் மா.சண்முகப்பிரியா (HOD/AI & ML) வாசித்தளித்த “The Making of Smart Campus: A Review and Conceptual Framework” என்ற ஆய்வுக் கட்டுரையும் “சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது” (ISTE Best Paper Award 2026) விருதிற்காக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பாராட்டுச் சான்றிதழ்கள் இவ்விழாவில் இரண்டு பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளைப் பெற்ற இக்கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்களை இக்கல்லூரியின் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

