அண்ணல் அம்பேத்கரின் தேவை

3 Min Read

அண்ணல் அம்பேத்கரின் தேவை!

இன்று அண்ணல் அம்பேத்கரின் 136ஆம் ஆண்டு பிறந்தநாள்! ஒவ்வொருவரும் அவர் தம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் – நினைவு நாளில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறோம்.

ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் உருவாக்கப்பட்டு சிறப்பாக, அந்த சிந்தனையாளர்களின் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெளிநாடு சென்றாலும், ஜாதியையும் நிழலாகத் தம்மோடு கொண்டு செல்லும் இழிநிலை தொடரத்தான் செய்கிறது.

இந்த நோயைக் கொன்றொழிக்கவும் – படித்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பழைமைக்கு மூளையின் ஒருபுறத்தில் இடம் அளித்து வரும் பேதைமையை நீக்கவும் இந்த அமைப்பு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவிற்கு கடந்தாண்டு மார்ச் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல கருத்தரங்குகளிலும் பங்கேற்று, இந்த இரு பெரும் தலைவர்களின் புத்துலகச் சிந்தனைகளைப் பரப்பி வந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இந்த இரு பெரும் தலைவர்களும் பல முறை நேரில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுண்டு – நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியதுண்டு.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப் பட்டு தந்தை பெரியாரால் திராவிடர் கழகமாக உரு வாக்கப்பட்ட போது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு ஓர் அரிய அறிவுரையைக் கூறியுள்ளார் அண்ணல் அம்பேத்கர்.

‘‘பார்ப்பனரல்லாதாருக்கு நான் சொல்வது என்னவென்றால், தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மற்றவர்களிடமிருந்துபார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து, மதித்து நடந்து கொள்ளுங்கள்!’’ என்று அறிவுரை கூறினார் அண்ணல் அம்பேத்கர் (‘குடிஅரசு’ 30.9.1944)

இவ்விரு தலைவர்களும் நடத்திய போராட்டங்களிலும் அடிப்படை ஒற்றுமையைக் காணலாம்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமூக நீதிப் போராட்டங்களில் மிக முக்கியமானவை:

  1. மஹத் குளம் சத்தியாகிரகம் (1927):

தீண்டத்தகாதவர்கள் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்ட மஹத்தில் உள்ள சவுதார் குளத்தில் அம்பேத்கர் தலைமையில் போராட்டம் நடந்தது. இது சமூக சமத்துவத்திற்கான ஒரு மைல்கல்.

  1. மனுஸ்மிருதி எரிப்பு (1927):

சமூகத்தில் நிலவும் ஜாதிப் பாகுபாடுகள் மற்றும் அநீதிகளுக்கு மூல காரணமாகக் கருதப்பட்ட மனுஸ்மிருதி நூலை அம்பேத்கர் அவர்கள் பகிரங்கமாக எரித்துத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

  1. நாசிக் கோயில் நுழைவுப் போராட்டம் (1930):

காலாராம் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவதற்கான உரிமையை வலியுறுத்தி அய்ந்தாண்டுகள் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

  1. வட்டமேசை மாநாடுகள் (1930-1932):

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க லண்டனில் நடைபெற்ற மாநாடுகளில் அம்பேத்கர் பங்கேற்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி தேவை என்ற கருத்துக்கு இசையாது, காந்தியார் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியபோது அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் (1932) இருந்த தந்தை பெரியார், ‘‘ஒரு காந்தியார் உயிரைவிட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வு முக்கியம்!’’ என்று அண்ணல் அம்பேத்கருக்குத் தந்தி வழி செய்தி அனுப்பியவர் தந்தை பெரியார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

‘‘ஹிந்துராஜ்யம் அமைப்போம், ராமராஜ்யம் அமைப்போம்’’ என்று கூறி, மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்திக் கொண்டு, மீண்டும் மனுதர்ம ராஜ்ஜியத்தை நிலை நிறுத்த ஒரு கூட்டம் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகள் மக்கள் மத்தியில் சென்றடைவது மிகவும் அவசியமாகும்.

பாசிச பார்ப்பனஆதிபத்திய நோய்க்கு – படையெடுப்புக்குச் சரியான சித்தாந்த ரீதியான எதிர்ப்பு மாமருந்து – இந்த இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளும், கோட்பாடுகளுமேயாகும்.

அண்ணல் பிறந்த நாளை சமத்துவ நாளாக ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்துள்ளது. மறக்கவொண்ணாமல் அதனை மனதில் கொள்ள வேண்டிய கால கட்டமாக அண்ணலின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் வருவது மிகவும் பொருத்தமானதாகும்.

‘‘சமத்துவமின்மை மற்றும் பாரபட்ச தொல்லையால் பாதிக்கப்படும், அடித்தட்டு மக்கள், ஒரு கட்டத்தில் நாட்டின் அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்து வருவார்கள்’’ என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்தோடு இதனை முடிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *