“டபுள் எஞ்சின்” அரசு என்று பெருமையாகப் பேசப்படும் பீகார் மாநிலத்தில், கல்வித்துறையின் அவல நிலை சந்தி சிரிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், அதில் 15 ஆண்டுகள் பா.ஜ.க.வின் கூட்டணியே பிரதானமாக இருந்துள்ளது. தற்போது பா.ஜ.க.வின் பிடி அங்கு இன்னும் வலுவடைந் துள்ள சூழலில், அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் தவிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், இறுதி ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பறையில் இடவசதி இல்லை. இதன் விளைவாக, சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் அனைவரும் சாலையில் வரிசையாக அமர்ந்து தேர்வு எழுதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
“கல்விக்கு பீகார் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் இதுதானா?” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்து கிடப்பதும், மாணவர்களுக்கான குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாததும் நிதிஷ்குமார்-பா.ஜ.க. கூட்டணியின் 20 ஆண்டு கால சாதனையா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
‘‘இந்த ‘பீகார் மாடல்’ வெற்றியைத் தான் தமிழ்நாட்டி லும் கொண்டு வருவோம்’’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். தமிழ் நாட்டின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவின் முன்னோடியாக இருக்கும் நிலையில், ‘பீகாரின் இந்த பின்தங்கிய நிலையை முன்மாதிரியாகக் கொள்வது ஆபத்தானது’ என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ‘ரோடு ஷோ’க்களின் போது, சாலையின் இருபுறமும் மக்களை, குறிப்பாக மாணவர்களை மணிக்கணக்கில் நிற்க வைப்பது ‘பா.ஜ.க.வின் வழக்கமான தந்திரம்’ என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. பீகாரில் மாணவர்கள் கல்விக்காகச் சாலையில் அமர வேண்டிய நிலையில் உள்ளனர்!
இந்த அவல நிலையில் பாதிக்கப்படுவது பெரும் பாலும் விளிம்புநிலை மற்றும் ஏழை மாணவர்களே. இத்தகைய பொதுப்பள்ளிகளில் பா.ஜ.க. தலைவர்களின் பிள்ளைகளோ அல்லது உயர்வகுப்பினரின் பிள்ளைகளோ படிப்பதில்லை என்பதும், எளிய மக்களின் பிள்ளைகளே இத்தகைய கல்விப் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீகாரில் 9 முதல் 10ஆம் வகுப்பு வரை இடைநிற்றல் விழுக்காடு பல மடங்கு அதிகம்.
உயர் கல்வி கற்போரை எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு 50 விழுக்காடு, பீகாரிலோ 15 விழுக்காடு! மடுவுக்கும் மலைக்குமுள்ள வேறுபாடு! தேசிய சராசரியோ 28.4 விழுக்காடு!
இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்?
அரசுத் தேர்வுகளை சாலையோரங்களில் அமர்ந்து பீகார் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்ற அவலத்தை என்னவென்று சொல்லுவது!
இவ்வளவுக் கீழிறக்கம் உலகத்தில் எங்கேதான் காண முடியும்?
தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ் நாட்டைப் பீகாராக ஆக்கி விடாதீர்கள்! நமது சந்ததியினர் தலை தூக்க வேண்டுமானால், இதுவரை பெற்ற வெற்றியைவிட மகத்தான பெரு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு அளித்து மேலும் நாளும் நாடு வளர – நமது கடமையைச் செய்வோம்! நாளை நமதே என்று உறுதி கொள்வோம்!
வாக்காளர்கள் கவனத்துக்கு…
இந்தக் காட்சி என்ன தெரியுமா? பிஜேபி ஆளும் பீகார் தேர்வில் பள்ளி மாணவர்கள் சுட்டெரிக்கும் வெய்யிலில் சாலையோரத்தில் உட்கார்ந்தும், நின்று கொண்டும் தேர்வு எழுதும் அவலம்!
தி.மு.க. ஆளும் தமிழ்நாட்டையும், பிஜேபி ஆளும் பீகாரையும் ஒப்பிட்டுப் பாரீர்!
பா.ஜ.க. கூட்டணிக்குத் தண்டனையைத் தாரீர்

