புறப்பட்டார் தமிழர் தலைவர்!

4 Min Read

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருப்பது 17ஆவது சட்டப் பேரவைத் தேர்தலாகும்.

சுதந்திர இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல் கணக்கீடு இது.

93 ஆம் ஆண்டில் நடைபோடும் தமிழர் தலைவர் – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த 17 சட்டப் பேரவைத் தேர்தலிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனுபவத்துக்குச் சொந்தக்காரர்.

இந்த வகையில், இவர்தான் தமிழ்நாட்டின் மூத்தவர் ஆவார்!

93 வயதில் 83 ஆண்டுப் பொது வாழ்வுக்கான வரலாறு படைத்தவர் ஆயிற்றே!

இவ்வளவுக்கும் திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத சமூகப் புரட்சி இயக்கமாகும்.

அப்படிப்பட்ட ஓர் இயக்கம் தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் களப் பணியிலும் ஈடுபடுவது ஏன்? – என்ற அய்யப்பாடு சிலருக்கு எழக் கூடும்.

தேர்தல் பிரச்சாரத்திலும், களப்பணியிலும் திராவிடர் கழகம் ஈடுபடுவது ஏன்?

‘முக்கியமான காரணம் உண்டு. ஆட்சியில் யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது’ என்பதிலே திராவிடர் கழகத்திற்கு முக்கிய அக்கறை உண்டு.

எடுத்துக்காட்டாக, இம்மாதம் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தி.மு.க. கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

அகில இந்திய அளவில் இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பது பிஜேபிதான். ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.இ.அ.தி.மு.க. தான்’ என்பது வெறும் பேச்சுக்காக சொல்லிக் கொள்ளலாம்! அ.இ.அ.தி.மு.க. என்பது பிஜேபிக்கான முகமூடிதான்’ என்று தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. கூட்டணியின் தலைவருமான மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது ‘ஆழ்ந்து நுண்மான் நுழைபுலம்’ அறிந்த மிகச் சரியான மதிப்பீடாகும்.

2024 ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.அய் மாநாட்டில் பங்கேற்ற அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும்  இந்நாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள்,‘‘ அஇஅதிமுக சிறுபான்மையின மக்களின் அரண்’’ என்றும், ‘‘இனி எக்காலத்திலும் பிஜேபி என்ற மதவாதக் கட்சியுடன் கூட்டணி இல்லை – கூட்டணி  கிடையவே கிடையாது’’ என்றும் அறுதியிட்டு, உறுதியுடன் இருப்பதாக ஆவேசமாக முழக்கம் செய்தார்.

அப்படி ஆவேசமாக அக்னி தெறித்தது போல அறுதியிட்டுப் பேசிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘அந்தர் பல்டி’ அடித்தது ஏன்?

11.4.2025 இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, சென்னைக்கு வந்து அஇஅதிமுகவுடன் கூட்டணிக்கு ஒப்பந்தம் செய்தார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பக்கத்தில் அமர வைத்து, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியவர் பிஜேபியின் ‘தேர்தல் வியூகி’ (!) என்று கூறப்படும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

செய்தியாளர்களிடம் ஒரேவொரு சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி.

அப்பொழுதே தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்து விட்டது – ‘பிஜேபியின் முகமூடிதான் அஇஅதிமுக’வும் – அதன் பொதுச் செயலாளர் எடப்பாடியும் என்பது!

தொடர்ந்து கூட்டணி தொடர்பான எல்லாப் பேச்சு வார்த்தைகளும், அஇஅதிமுக தலைமையகத்தில் நடைபெறவில்லை. அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் தான் நடைபெற்றது. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்த வண்ணம் தான் உள்ளனர்.

மதுரையில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு முகப்பில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணா படங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன (28.2.2026).

அதுபோலவே, மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, ஆர்.டி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா மற்றும் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். (22.6.2025).

இந்து முன்னணி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார்.

கட்சியின் பெயரில் அண்ணா இருந்தும், கொடியில் அண்ணா உருவம் பொறிக்கப் பட்டிருந்தும், அவரை இழிவுபடுத்தியபோது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மவுனிகளாக இருந்தது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் வெட்கக் கேடே!

அதே போல ஆர்.எஸ்.எஸ்.எஸ்., – பிஜேபி பிரமுகர்களை முன்னிலையில் வைத்துக் கொண்டு மோடியைப் பற்றியோ, அமித்ஷாபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். முன்னோடி கோல்வால்கர் போன்றவர்களைப் பற்றியோ திராவிட இயக்கத்தினர் பேசியிருந்தால், அவர்கள் மவுனிகளாக இருந்திருப்பார்களா?

எல்லா வகையில் பார்த்தாலும், ‘அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்ட பொருளாகி விட்டது’ என்பதுதான் உண்மை.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், இந்த உண்மைகளையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், திராவிட மாடல் அரசின் அய்ந்தாண்டு சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்வதற்குமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை’ தமிழ்நாடு தழுவிய அளவில்  நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

6ஆம் தேதி  நெல்லை மாவட்டத்திலிருந்து தன் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 21.4.2026  மாலை தஞ்சையில் நிறைவு செய்கிறார்.

இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளோம்.

(1) ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர வேண்டும் – ஏன்? (2) அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்? – (ஆசிரியர் கி.வீரமணி)

– என்பதுதான் அந்த வெளியீடுகள்

ஒவ்வொன்றின் நன்கொடை ரூ.10 (ஒவ்வொன்றும் 32 பக்கங்களைக் கொண்டது)

எதையும் ஆக்கப்பூர்வமாகச் செய்து பழக்கப்பட்டதுதான் திராவிடர் கழகம்.

புறப்பட்டார் தமிழர் தலைவர் சூறாவளிப் பிரச்சாரத்திற்கு!  அது முன்பைவிட இன்னும் பலமான சூறாவளிப் பிரச்சாரமாக சுழன்றடிக்கும் என்பதில் அய்யமில்லை.

வெற்றி  நமதே!

வெல்லட்டும் திராவிடம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *