தெஹ்ரான், ஆக.24 ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளித்தால், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவர் மொஹ்சீன் ரேசாய் எச்சரித்துள்ளார்.
மேற்காசியாவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 6 மாதமாகப் போர் நடைபெறுகிறது. இந்தப் போரின் இடையே இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இதைச் சுட்டிக்காட்டி, ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சீன், தெரிவித்திருப்பதாவது:
“ஈரானுக்கு எதிரான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு அளிக்கக் கூடாது. அப்படி ஆதரவு அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுவரை ஹோர்முஸ் நீரிணையில் சென்ற கப்பல்களே தாக்குதலுக்கு ஆளாகின. ஆனால், இனி பாரசீக வளைகுடாவில் உள்ள மற்ற கடல் பகுதியில் செல்லும் கப்பல்களையும் ஈரான் தாக்கும். வளைகுடா நாடுகளை ஈரான் தனது எதிரியாகக் கருதும். அதன்பிறகு அந்த நாடுகளின் முக்கிய இடங்களைக் குறிவைத்து தாக்குவோம்” என்றார்.
அதிபர் மசூத் பெசஷ்கியான் கருத்து: ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசஷ்கியான் பேசுகையில், “தற்போது போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இதில் இருந்து ஈரான் வெளிவர வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம், இந்தச் சூழலில் இருந்து ஈரான் வெளிவர சிறந்த வழியாக இருக்கும்” என்றார்.
பாகிஸ்தான் தளபதி பயணம்: இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முநீர் தலைமையிலான பாகிஸ்தான் அதிகாரிகள் குழு, ஈரானுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ளது. அமெ ரிக்காவுக்கும், ஈரானுக்கும் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான், கத்தார் நாடுகள் சமாதானம் செய்து வரும் நிலையில், இதுதொடர்பாக முநீர் பயணம் மேற்கொள்கிறாரா என்பது குறித்துத் தகவல் இல்லை. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேயி கூறுகையில், “ஈரான், பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஈரானில் முநீர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தப் பகுதியில் அமைதி, பாதுகாப்பை ஊக்குவிக்க பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும்’’ என்றார்.
