அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

3 Min Read

சென்னை,பிப்.19- ‘‘அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’’ என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி உயர்நிலைக் குழு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையின் முதல் பாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிப்ரவரி 16ஆம் தேதி சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் நேற்று (18.2.2026) தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை முதல் கொள்கையாக கொண்டு திமுக செயலாற்றி வருகிறது. ஒரு மாநிலமாக நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவுக்கு நமக்கு அதிகாரங்கள் இல்லை. தற்போதுள்ள அதிகாரத்தை வைத்து கொண்டுதான் சமூக நீதி, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நிதியுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நாம் இன்னும் போராட வேண்டியுள்ளது. எனவே, எல்லா அதிகாரமும் கொண்டதாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும் முன்னெடுப்புகளை நாம் தொடங்க வேண்டும்.

சர்வாதிகார மனப்பான்மையோடு

அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ள ஒன்றிய அரசு, சர்வாதிகார மனப்பான்மையோடு அதை பயன்படுத்துவதுடன், மாநில அரசுகளையும் மதிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அதற்கான முன்னெடுப்பே இக்குழுவின் அறிக்கையாகும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பி.வி.ராஜமன்னார் குழு, நீதிபதி சர்க்காரியா ஆணையம், வெங்கடாச்சலையா ஆணையம், நீதிபதி பூஞ்ச்சி குழு ஆகியவை பல்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட அறிக்கைகள் வழங்கியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.

முக்கிய அதிகாரங்கள் கூட…

அதேவேளையில், மாநில அரசின் பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்கள் கூட அடுத்தடுத்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது, பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்புக்கு ஈடாக அல்லாமல் குறைவாகவே பகிரப்படுகிறது. இதை சரிசெய்யவே உயர்நிலைக் குழு அமைக்கப் பட்டு தற்போது அறிக்கை பெறப்பட்டுள்ளது.அந்த வகையில் மாநில சுயாட்சி வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மலர வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை. இதைத்தான் அந்த அறிக்கையும் நிறுவுகிறது. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதாவது, கூட்டாட்சிக் கோட்பாட்டை அரசமைப்புச் சட்டத்தின் பண்பாடாக சேர்க்க வேண்டும். கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள் ளது. நாம் முயன்றால் மீண்டும் அரசமைப்புச் சட்டத்தை திருத்த முடியும்.

கூட்டாட்சித் தன்மை கொண்டதாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது நாட்டை பலவீனப்படுத்தாது எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயகச் சக்திகள் அதிகமாக உள்ளனர். அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

ஒன்றிய அரசும், மாநிலங்களும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொதுவான ஒரு அமைப்பின் பங்கு தாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர முடியும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவோம்.

திறந்த மனதுடன்…

தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சிதான். இந்த அறிக்கையை அனைவரும் திறந்த மனதுடன் ஏற்று, அறிவார்ந்த விவாதங்களை நடத்தி செழுமைப்படுத்த வேண்டும்.

ஒன்றிய, மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் ஒன்றிய அரசு வலுவாக இருக்கும். கூட்டாட்சிக் கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல. நாட்டுக்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *