ஜாதி ரீதியிலான அரசியல் கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை

Viduthalai

உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, ஜூலை 16 வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு சமமான அளவில் ஆபத்தானவை என்று உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் பதிவு மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை நேற்று (14.7.2025) விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், எந்தவொரு கட்சி அல்லது தனிநபரை விமர்சிக்காமல் பொதுவான சீர்திருத்தங்களைக் கோரி விரிவான மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம் என்று தெரிவித்தது.

மனுதாரர்

அஸாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகள், முஸ்லிம்களின் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளன. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே, அதன் பதிவு மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தெலங்கானாவைச் சேர்ந்த திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால், சட்டத்தின்கீழ் அனைத்து தேவைகளையும் அக்கட்சி பூர்த்தி செய்துள்ளதாக கூறி டில்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முஸ்லிம்கள் மத்தியில் இசுலாமிய கல்வியை ஊக்குவிக்குகிறது மஜ்லிஸ் கட்சி என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஹிந்து மத பெயரில் ஓர் அரசியல் கட்சியை தொடங்கி, வேதம், புராணங்கள், உபநிடதங்களை போதிக்க நான் விரும்பினால், அதை தேர்தல் ஆணையம் நிச்சயம் ஏற்காது என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் கூறிய தாவது:

தீண்டாமையை
ஊக்குவித்தால் குற்றம்

இசுலாமிய கல்வியை போதிப் பதில் என்ன தவறு இருக்கிறது? கல்வி நிலையங்களை அமைக்க அரசியல் கட்சிகள் முன்வந்தால் நாம் வரவேற்க வேண்டும். வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங் களை போதிக்க தேர்தல் ஆணையம் உள்பட யாரும் ஆட்சேபம் தெரி விக்க முடியாது. அதேநேரம், எந்தவொரு அரசியல் கட்சியும் தீண்டாமையை ஊக்குவித்தால், அது கண்டிப்பாக குற்றமே.

மஜ்லிஸ் கட்சியின் விதிமுறை களின்படி, சிறுபான்மையினர் உள்பட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்காக பணியாற்றுவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு சில குறிப்பிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய மனுவை விசாரிக்கமுடியாது.

வகுப்பு வாதத்தை தூண்ட மாட்டோம் என்ற உறுதிமொழியை ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ மீறும் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. வகுப்புவாதம், பிராந்தியவாதம் போல ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் கட்சிகளும் உள்ளன. அவையும் சமமான அளவில் ஆபத்தானவையே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *