சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
மருத்துவர்கள் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், சிறிய வகை கிளினிக் ஆகியவற்றுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. இதனால், வணிக நோக்கில் பல மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. கடந்த 1997இல் தனியார் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், மருத்துவர்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தன.
இந்த சூழலில், கடந்த 2018இல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் (அலோபதி) மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. பதிவு உரிமம் பெறுவதற்கு, மருத்துவமனைகளில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை, சிகிச்சை தரம் போன்றவற்றுடன், தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதும் கட்டாயமானது.
60 ஆயிரம் மருத்துவமனைகள் பதிவு இல்லை
தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மருத்துவமனைகள் இருக்கலாம் என்று கணக்கிடப் பட்டுள்ள நிலையில், மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநரகத்தில் 38,188 மருத்துவமனைகள் மட்டுமே இதுவரை பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன. அந்த வகையில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பதிவு செய்யாமல், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, அடிப்படை வசதிகள், அவசரகால வசதிகள் உள்ளிட்டவை இருப்பதுடன், பதிவு செய்து உரிமம் பெறுவதும் கட்டாயம் ஆகும். புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டால், 6 மாதத்துக்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் ஆகியவை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.