சென்னை, மே 19- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும்.
அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-2026 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அமைச்சுப் பணியாளர் களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது. இவற்றில் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல் ஆகியவை மே 26, 29, 30ஆம் தேதிகளில் வழங்கப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து உதவியாளர் பணியிடத்துக்கு ஜூன் 4ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 6, 9, 11ஆம் தேதிகளிலும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.