மதுரை, ஆக.9 தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதில் 25 மாநகராட்சிகளில் மதுரை கடைசி இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்டமாக ஆக.1 முதல் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடக்கிறது. பெரும்பாலும் ஆசிரியர்களே ஈடு பட்டுள்ளனர். மதுரையில் ஆக. 31 வரை ‘ஆன் டூட்டி’ (ஓ.டி.,) வழங்கும்படி பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு, மாநகராட்சி பள்ளிகளில் காலையில் ஒரு தரப்பினரும் (குழு), மாலையில் ஒரு தரப்பினரும் வீடுவீடாக கணக்கெடுக்கின்றனர். அதேசமயம் உதவிபெறும் பள்ளிகளின் நிலையோ வேறு விதமாக உள்ளது.
வருவாய்த்துறை மற்றும் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
இப்பணியில் மதுரை பின்தங்கக் காரணம் ஒரு ஆசிரியருக்கு 250 முதல் 300 வீடுகளுக்குப் பதில் 800–க்கும் மேல் ஒதுக்கியுள்ளனர். உதவிபெறும் பள்ளிகளில் மாலை வேளையில்தான் அனுமதிக்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல் விரிவாக்கப் பகுதி வீடுகளை தேடி கணக்கெடுக்கும் முன் நேரமாகி விடுகிறது.
பல ஆசிரியர் குழுக்களுக்கு மேற்பார்வையாளரே நியமிக்காததால், ஆசிரியர்களால் பணிகளைத் தொடங்க இயலவில்லை. ஆசிரியர்களுக்கு உதவ வார்டுகளில் பில்கலெக்டர்கள் நியமித்தும், அவர்கள் ஆர்வம் காட்ட வில்லை. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என்பது குறைபாடாக உள்ளது.
மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் மதுரையில் நியமித்துள்ள 2,117 பேரில் 1,935 பேர் இன்னும் பணி துவக்கவில்லை. 181 பேரே பணி செய்கின்றனர். ஒருவர் பணி முடித்துள்ளார். இது 8.55 சதவீதம். அதே சமயம் ஈரோடு 77.60 சதவீதத்துடன் முதலிடத்திலும், கரூர் 76.47 சதவீதத்துடன் 2 ஆம் இடத்திலும், ஓசூர் 71.05 சதவீதத்துடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன. மதுரை 25 ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
