பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு அமைச்சர் துரைமுருகன் தகவல்

viduthalai
2 Min Read

டி.ஆர்.பாலு எம்.பி.பாலாற்றில் நிகழாண்டு 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார்

காட்பாடி வட்டம், காங்கேய நல்லூா் கிராமம் முதல் அம்முண்டி கிராமம் அருகே பாலாற்றில் இணையும் வரை ரூ.6.32 கோடி மதிப்பில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட பாண்டியன் மடுவு கால்வாயை அமைச்சா் துரைமுருகன் 20.4.2025 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னா் அவா் பேசும்போது கூறியதாவது:

பிரம்மபுரம் முதல் அம்முண்டி வரை 8 கி.மீ தொலைவு பாண்டியன் மடுவு கால்வாய் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் தூா்ந்து போய் காணப்பட்டது.

நீர்மட்டம் அதிகரிப்பு

மழைக்காலங்களில் காவனூா் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீா் இந்த கால்வாய் வழியாக சென்று பாலாற்றில் கலக்க வேண்டும்.

கால்வாய் தூா்ந்து போனதால் தண்ணீரானது பல வயல்களிலும், குடியிருப்பு பகுதிகளையும் தேங்கி நிற்கக் கூடிய சூழ்நிலை இருந்து வந்தது.

தூா்வாரி சீரமைக்கப் பட்டதன் மூலம் காவனூா் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீா் இந்த பகுதிகளில் உள்ள விவசாயத்துக்கு பயன்படும்.

காட்பாடி தொகுதியில் பல இடங்களில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொன்னை ஆற்றில் ரூ.48 கோடியில் ஆங்காங்கே சிறு, சிறு அணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்கும். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, குகையநல்லூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை காரணமாக கிராமங்களில் கிணற்றில் தண்ணீா் மட்டம் உயா்ந்துள்ளது.

3 தடுப்பணைகள்

பாலாற்றில் இதேபோல் நிறைய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நிகழாண்டு கூட 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவனூா் ஏரியிலிருந்து வெளியேறும் நீா் பாலாற்றில் கலப்பதற்கு ஏதுவாக ரூ.25 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பிரம்மபுரம் – சேவூா் இடையே பொதுமக்கள், கால்நடைகள் சென்றுவர பாண்டியன் மடுவு கால்வாயில் ஒரு சிறு பாலம் இந்தாண்டு கட்டப்படும் என்றார்.

பின்னா், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளைச் சோ்ந்த 787 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், வேலூா் துணை மேயா் எம்.சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *