தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கை!

Viduthalai
8 Min Read

* 1000 முதல்வர் உழவர் நல சேவை மய்யம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு * உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு
* மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் * ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 15 1000 முதல்வர் உழவர் நல சேவை மய்யம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு; உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு; மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம்; ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு; ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்; இன்று (15.3.2025) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (15.3.2025) வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
திருக்குறள், புறநானூறு பாடல்கள்
அப்போது, விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி தனது உரையைத் தொடங்கினார். முதலில்,
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, பல்வேறு அரசுகளை, தமது குடை நிழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் அனைத்து மக்களையும் பாதுகாப்பார்கள் என்பது புறநானூறு கூறும் சொல்லாகும்.
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறந்த தருகுவர் அடங்கா தோரே
(புறநானூறு பாடல் 35)
இப்பாடலின் முழு விவரம்
காளை மாடுகளைப் போற்றி உழவு செய்யும் விவசாயிகளை நீ போற்றினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடி பணிவர் என்று மன்னனுக்கு புலவர் அறிவுரை கூறும் வகையில் இப்புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளதாகக் கூறி உரையைத் தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.3.2025) தாக்கல் செய்து உரையாற்றினார்.
நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை

2025 – 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!
வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகள்:
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மய்யப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன்.

பொருளதாரத்தில்
தமிழ்நாடு 2 ஆவது இடம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி, பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் பிடித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், நிலக்கடலை உற்பத்தியில் 3 ஆவது இடம், கரும்பு உற்பத்தியில் 2 ஆவது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும்.
1.86 லட்சம் மின் இணைப்புகள்
1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
147 லட்சம் டன் நெல் கொள்முதல்
2021-2024 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,
பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு
டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

431 இளைஞர்கள் தொழில் முனைவோர்
வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனை வோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா
ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
கரும்பு உற்பத்தியில் 2 ஆவது இடம்
கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
1000 முதல்வர் உழவர் நல சேவை மய்யம்
முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மய்யம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (15.3.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் த. ஆபிரகாம், சர்க்கரை துறை இயக்குநர் த. அன்பழகன், வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இறுதி நிகழ்வு நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம்
முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே இந்தத் திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.

மலைவாழ் உழவர்கள்
முன்னேற்றத் திட்டம்
மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.
3 விவசாயிகளுக்கு
‘நம்மாழ்வார்’ விருது
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவ சாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்

நெல் சாகுபடியை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்.
மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கப் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுவைதாளிதப் பயிர்களுக்கான
சிறப்புத் திட்டம்!
சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத் திட்டம்
நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலப் பயிர்த் திட்டம்

கோடைக்காலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த
தென்னை வளர்ச்சித் திட்டம்
தென்னை பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல்விளக்கத்திடல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.35.26 கோடி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
மக்களின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்வதுடன், விவசாயிகள் வருமானத்தை உயர்த்திட ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் உருவாக்கப்படும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருள்கள் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல்.

தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை

பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை உருவாக்கப்படும்.
பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்
பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட ரூ.12.21 கோடி யில் பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம் உருவாக்கப்படும்.
உழவர்களின் நிலங்களில்
விதைப் பண்ணைகள்
உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.
உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.
நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் கொண்டுவரப்படும்.
ரூ.21 கோடியில் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதாரச் சுமையினை குறைக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
உயிர்ம விளைப்பொருள்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும்.
சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.53 கோடிய 44 லட்சத்தில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அமைக்கப்படும்.
ரூ.108 கோடியில்
எண்ணெய் வித்துகள் இயக்கம்
உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய ரூ.108 கோடிய 6 லட்சத்தில் எண்ணெய் வித்துகள் இயக்கம் அமைக்கப்படும்.
மக்காச்சோள உற்பத்தி
மேம்பாட்டுத் திட்டம்
மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
– இவ்வாறு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *