வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வது பெண்களே என்று தரவுகள் கூறுகின்றன.
வீட்டைப் பராமரிக்க பெண்கள் நாளொன்றுக்கு சராசரியாக 289 நிமிடங்களை ஒதுக்குவதாகவும், ஆனால் ஆண்கள் வெறும் (சராசரியாக) 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 299 நிமிடங்களை பெண்கள் ஒதுக்கியிருந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து 2024-இல் 10 நிமிடங்கள் மட்டுமே பெண்களுக்கு குறைந்துள்ளது. அதாவது ஆண்களைக் காட்டிலும் 201 நிமிடங்கள் கூடுதலாக வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் பெண்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி – டிசம்பர் வரையிலான ஆய்வுக்குப் பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,
ஊதியமின்றி வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 62 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குகிறார்கள். பெண்கள் 137 நிமிடங்களை ஒதுக்கும் நிலையில், ஆண்கள் 75 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர். இதில் 15 – 59 வயது வரையிலான பெண்கள் ஈடுபடுகின்றனர்.
வீட்டு வேலைகளைச் செய்வதற்கு பெண்கள் 289 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இதே வேளையில் ஆண்கள் 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குகின்றனர்.
புதிதாக கற்றுக் கொள்வதற்கு பெண்கள் 413 நிமிடங்களையும் ஆண்கள் 415 நிமிடங்களையும் ஒதுக்குகின்றனர்.
தங்களின் தனிப்பட்ட பராமரிப்புக்காக பெண்கள் 706 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள். இதில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஆண்கள் 710 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.
தொழில்முறை வேலைவாய்ப்பு தொடர்பான செயல்களில் ஆண்கள் 473 நிமிடங்களையும் பெண்கள் 341 நிமிடங்களையும் ஒதுக்குவதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் உழைப்பைச் சுரண்டும் ஆண் மகனின் மனதில் – பெண் என்றால் தனக்கு அடிமை – தன் பேச்சை எவ்வகையிலும் தட்டக் கூடாது; மறுத்துப் பேசக் கூடாது என்ற மனப்பான்மைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
தந்தை பெரியார் சகாப்தத்தில் திராவிட இயக்க சித்தாந்தத்தில் தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பெண்கள் மேலோங்கி நிற்கிறார்கள்.
பெண்களே மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்த பெருமை தமிழ்நாட்டுப் பெண்களையே சாரும்.
ஒரே நாடு, ஒரே மதம் பேசும் சங்கிகளின் மனப்பான்மை என்ன? ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கிறார்கள்; வேலைக்குப் போகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்; அதன் காரணமாக ஆண்களைப் பெண்கள் மதிப்பதில்லை. அத்தகைய பெண்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுவது – அவர்கள் வரித்துக் கொண்ட இந்து மத்தின் சாரமும் காரமும் ஆகும்.
வேலைக்குப் போகாத நிலையிலும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை, குழந்தைகள் பராமரிப்பு என்பது எல்லாம் சாதாரணமானதா?
‘‘பெண்ணடிமை பேசுந்திரு நாட்டில் மண் ணடிமை தீருவது முயற்கொம்பே’’ என்றார் தந்தை பெரியாரின் சீடர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
பாலியல் வன்கொடுமை தொடர்வதை அனுமதிக்க முடியாது. பெண்களுக்குத் தற்காப்பு ஆயுதம் தேவை! (துப்பாக்கி உட்பட) 33 விழுக்காடு சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் – வேண்டும்.’’