‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களால் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு அமைச்சா் கோவி.செழியன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.10- மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சா் கோவி.செழியன் கூறினார்.

கருத்தரங்கு

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகியவை சார்பில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான சுருள்பாசி சாகுபடி கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் 8.2.2025 அன்று நடைபெற்றது. இவற்றை அமைச்சா்கள் கோவி.செழியன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:
நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டம் மாணவா்களுக்கு மிகச்சிறந்த முறையில் பயனளித்து வருகிறது. இதன்மூலம் மாணவா்கள் பல்வேறு படிப்புகள் குறித்த அண்மைகாலத் தகவல்கள், தொழில் துறைகளுக்குத் தேவையான குறிப்பிட்ட திறன்கள் குறித்து அறிந்து கொள்கின்றனா்.

அதேபோன்று அவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெறவும் உதவுகிறது. இதில், வேலைவாய்ப்பு தொடா்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தத் திட்டம் மாணவா்களின் திறன்களை அதிகரித்துள்ளது.

சமூக மாற்றம்

அம்பேத்கரின் சட்ட பாதுகாப்பு, பெரியாரின் சமூகப் புரட்சி, மேனாள் முதலமைச்சா் கலைஞரின் சமூகப் பணிகள் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கல்வி பெறுவதில் இலக்குகளை எட்டியுள்ளனா். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவா் கூறினார்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்

விழாவில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியதாவது:
சுருள்பாசி நாம் சாப்பிட உகந்ததாக உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இதை அங்கீகரித்துள்ளது. சிலா் இதை ஏற்றுமதியும் செய்கின்றனா். காய்கறி, பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றைக் காட்டிலும் சுருள்பாசியில் புரதச் சத்துகள் அதிகம். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

நந்தனம் கலைக் கல்லூரியை நந்தவனமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த வளாகத்தில் மாணவா்களின் பெயா்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் ஒன்றுகூட சேதமடையாமல் செழித்து வளா்ந்திருக்கின்றன. நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் சிதிலம் அடைந்துள்ள கட்டடங்களைச் சீரமைத்துத் தருமாறு உயா்கல்வித் துறை அமைச்சரிடம் நான் எனது கோரிக்கையை முன் வைக்கிறேன். இவ்வாறு அவா் பேசினார்.

நேர்மைக்கு பாராட்டு

மாணவா்களின் நோ்மைக்கு… நந்தனம் அரசுக் கல்லூரி மாணவா்கள் ரயிலில் பயணம் செய்தபோது அவா்கள் கண்டெடுத்த ரூ.3.5 லட்சத்தை ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதற்காக மாணவா்கள் விக்னேஷ், மாதவன், ஜீவானந்தம் ஆகியோருக்கு அமைச்சா்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *