எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேச்சு
திருச்சி, ஜன.30 சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத் திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, நான் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனைவருக்குமான தலைவர்
இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘‘பரபரப்புக்காக சீமான் ஏதேதோ பேசுகிறார். இது கருத்தியல் பொருத்தமோ, அரசியல் பொருத்தமோ, கால பொருத்தமோ இல்லாத ஒன்று. கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி வரும் இளைஞர்களை, அரசியல் பயணத்திற்குப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்.
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஸநாதன சக்திகளை வேரூன்ற விடாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அதே வெங்காயம் தான் ஸநாதன சக்திகளை இங்கு நுழையவிடாமல் விரட்டியடித்து கொண்டிருக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் சமூக நீதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான தலைவர்.
நம்பிக்கை அளிக்கக் கூடிய தலைவர்
பன்னாட்டளவில் அறிவியல்பூர் வமான அனைத்தையும் அணுகக் கூடிய ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனை அவர் கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் பேசவும், விவாதிக்கப்படவும் உள்ளது.
பொருத்தமில்லை
வக்பு வாரிய மசோதாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. குறித்து சீமான் விமர்சிப்பதில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்தக் கூடிய ஒன்றிய அரசை பற்றி பேசவில்லை. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான படுகொலையை பற்றி பேசுவதில்லை. தமிழீழ விடுதலை அரசியலையும், தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது பொருத்தமில்லாதது’’ என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘சென்னையில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்தி சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்திருக்கிறார்கள். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் 24 மணி நேரமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், தி.மு.க. அரசை குறை கூறி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி மக்கள் பிரச்சினையை குறித்து அவர்கள் பேசுவதே இல்லை. தி.மு.க. அரசுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் அரசியல் என கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது!
தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். சமூக நல்லிணக்கம் நிலவுகிறது, பதற்றமில்லாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பிரச்சினைகள் அங் கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது. ஆனால் ஒப்பீட்டு அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சுமுகமான நிலை தான் உள்ளது. வேங்கைவயல் பிரச் சினையை பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி ஏன் கையில் எடுத்து போராடவில்லை?’’ என்று திருமாவளவன் செய்தியா ளர்களிடம் கூறினார்.