எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, ஜன. 30- உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், “நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஅய்பி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம்” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளனர். இதில், நேற்று (29.1.2025) அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்தத் தகவல் இது வரை உத்தரப்பிரதேச அரசு அல்லது அதிகாரிகளால் உறுதிப் படுத்தப்படவில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இதனிடையே, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி மிகவும் வருத்த மளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன், காய மடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
நிர்வாக சீர்கேடும், பொது வான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் விஅய்பி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இன்னும் பல மகாஸ்நானங்கள் நடக்க உள்ளன. இன்று நடந்தது போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் அமைப்பை பலப் படுத்த வேண்டும்.
விஅய்பி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும், பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரி வித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “பிரயாக்ராஜின் மவுனி அமாவாசையை முன்னிட்டு நடந்த விபத்தில் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் பக்தர்களின் வசதியை மிக முக்கியமாகக் கருதி உடனடி ஏற்பாடுகள் செய் யப்பட வேண்டும், இதனால் எதிர்கால நீராடல் நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாப்பாக முடிக்கப்படும்.
பல நூற்றாண்டுகள் பழை மையான அகாடாக்களின் அரச குளியல் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் பொறுமையுடனும், அமைதி யுடனும் நீராடுமாறு கேட் டுக் கொள்கிறேன்” என தெரி வித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “மகா கும்பமேளாவின் போது, தீர்த்தராஜ் சங்கமக் கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வேத னையளிக்கிறது. பக்தர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறோம், காயம டைந்தவர்கள் விரைவில் குண மடைய வாழ்த்துகிறோம்.
அரைகுறை ஏற்பாடுகள், விஅய்பிகளின் நடமாட்டம், நிர்வாகத்தை விட சுய விளம் பரத்தில் அதிக கவனம் செலுத் தியது, தவறான நிர்வாகம் ஆகிய வையே இதற்குக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தாலும், இதுபோன்ற ஓர் அமைப்பைக் கொண்டிருப்பது கண்டனத்துக் குரியது. இன்னும் பல முக்கிய நீராடல்கள் மீதமுள்ளன. எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இப்போதே விழித்துக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
பக்தர்களின் தங்குமிடம், உணவு, முதலுதவி மற்றும் நட மாட்டத்துக்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். மேலும் விஅய்பிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைத்தான் நமது துறவிகளும், முனிவர்களும் விரும்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “மகா கும்பமேளாவில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்து, மேலும் இதுபோன்ற சம் பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மாதிரியான மிகப் பெரிய நிகழ்வுக்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். அதைச் செய்யாதது ஏன்?
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். மகா கும்பமேளா நிகழ்வை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை எப்படிச் செய்வது என்பதை இந்த நிகழ்வின் மூலமாவது மாநில அரசு கற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளையில் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.