‘‘ஹிந்து தேசம்’’– ‘‘முஸ்லிம் தேசம்’’ என்று பிரித்தவர் சாவர்க்கரே!
நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி. எழுச்சியுரை!
புதுடில்லி, டிச.18 உச்சநீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்புகளை, ஒன்றிய அரசு சிதைக்கிறது என்றும், ஹிந்து தேசம் – முஸ்லிம் தேசம் என்று பிரித்தவர் சாவர்க்கர் என்றும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார்.
அரசமைப்புச் சட்டத்தின் எழுபத்தைந்தாண்டு நிறைவை ஒட்டி நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக துணைச் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் 14.12.2024 அன்று நிகழ்த்திய உரை வருமாறு:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை தகுதிக்கு உகந்ததாக இல்லை
“இந்த விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்துள்ளார். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவருடன் 1999 ஆம் ஆண்டு முதல் அய்ந்தாண்டு காலம் வாஜ்பாய் அவர்களின் அமைச்சரவையில் நானும் இருந்தேன். ஆனால் அவருடைய இன்றைய உரை அவருடைய தகுதிக்கு உகந்ததாக இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் ஆவணத்தை ஒருகட்சி ஆவணமாக மட்டுமே கருத முடியாது என்று ராஜ்நாத் சிங் இந்த அவையில் கூறுகிறார். அவரின் கூற்று சரிதான். இந்த நாட்டு மக்களில் அரசமைப்புச் சட்டத்தின் ஆவணத்தின் உரிமையை ஒரு தரப்பினர் மட்டும் கோர முடியாதுதான்.
நேருவுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன், வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு, ஜெயகர், ஷியாம் பிரசாத் முகர்ஜி உள்பட அனைவரும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பங்களித்தனர். ஆனால், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகாசபையின் பங்களிப்பு வரலாற்றில் இல்லவே இல்லை. இன்றைய பாஜகவினரின் முன்னோர்களான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் எந்த வகையான பங்களிப்பை வழங்கினார்கள் என பாஜக இங்கே கூற இயலுமா?
ஒரு போலித்தனமான கருத்தை இந்த அவைக்கு அளித்துள்ளனர்
நாம் இங்கே அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கிறோம். ஆனால், பாஜகவினர் பாபாசாகேப் அம்பேத்கர் காங்கிரசால் அவமானப்படுத்தப்பட்டார், பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கொண்டாடவே இல்லை, அமைச்சரவையில் உரிய இடமளிக்கவில்லை என பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும், பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மற்றும் முன் வரிசையில் இருப்பவர்கள் தங்கள் கடந்தகால செயல்பாடுகளுக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஒரு போலித்தனமான கருத்தை இந்த அவைக்கு அளித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பாஜகவின் முன்னோர்கள் அளித்த பங்களிப்பு மற்றும் இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு இன்றுவரை அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாஜக செய்த முயற்சிகள் என்ன என்று மக்களவையில் இங்கிருக்கும் பாஜகவினர் யாராவது சொல்ல இயலுமா? தங்களை அரசமைப்புச் சட்டத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் எனது கேள்விக்கு பதிலளிக்கவும்.
உண்மையா, இல்லையா?
நாட்டின் அரசமைப்புப் பதவியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஒருவர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகள் (Basic structure of the Constitution) மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கவில்லையா? பாஜகவின் துணைத் தலைவர் ஒருவர் தேர்தலின்போது பாஜக மக்களவையில் 400 இடங்களைப் பெற்றால் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரம்’ என பெயர் மாற்றம் செய்வோம் என்று வெளிப்படையாக பொதுவெளியில் கூறினாரே! இது உண்மையா இல்லையா! என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கின்றது.
ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி: அரசமைப்பில் 2 ஆம் இடத்தில் உள்ள ஒருவர் (குடியரசு துணைத் தலைவர்) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை மாற்ற வேண்டும் என்று பேசியதாக மாண்புமிகு உறுப்பினர் இந்த அவையில் குறிப்பிடுகிறார். எப்போது, எங்கே, அவ்வாறு பேசினார் என்பதை சான்றுடன் நிரூபிக்க வேண்டும்.
(தொடர்ந்து பேசிய ஆ. இராசா)
நான் தயார்!
அம்பேத்கர் மூன்று விசயங்களைத் தெளிவுப்படுத்தினார். அரசமைப்பு (Constitution), அரசமைப்பு கோட்பாடு (Constitutionality) மற்றும் அரசமைப்பின் தத்துவம் (Constitutionalism).
‘‘அரசமைப்புச் சட்டம் உள்ளதாலேயே ஒரு நாடு அரச மைப்புச் சட்டத் தத்துவம் என்று ஒன்றை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் இந்தியாவில் அரசமைப்புச் சட்ட தத்துவம் உள்ளது’’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.
1973 இல் நடந்த ‘கேசவானந்த பாரதி’ வழக்கு நாட்டி லேயே அதுவரை இல்லாத அளவு பதின்மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட பெரு அமர்வு. பிரபல வழக்குரைஞர் நானி பால்கிவாலா, 68 நாள்கள் தொடர்ந்து வாதிட்ட வழக்கில் 1000 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு வந்தது.
ஒரு சட்ட மாணவராக நான் அதை பலமுறை படித்துள்ளேன். இந்த விவாதத்திற்காக கூட, நேற்றிரவு (13.12.2024) மூன்று முறை படித்தேன். கேசவானந்த பாரதி வழக்கை பற்றி பல சட்ட நிபுணர்களும் நிறைய கட்டுரைகள் எழுதினார்கள்; அதுதான் நம்மை வழிநடத்தும் அரசியல் கோட்பாடு என்பதால். கேசவானந்த பாரதி வழக்கை நான் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.
ஏனெனில் அரசமைப்பின் அனைத்துப் பிரிவுகளும் மாற்றத்திற்குள்ளானாலும், எது மாற்றப்படக் கூடாது என்பதற்கான வழக்கு அது.
விரலுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யலாம்; கைக ளுக்குக் கூட அறுவை சிகிச்சை செய்யலாம்; என் தலையை வெட்டிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதுபோலத்தான், அரசமைப்பின் அடிப்படை பண்பு, அர சமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைத் தவிர அனைத்து அரசமைப்புப் பிரிவுகளையும் நாம் திருத்தலாம், மாற்றலாம்.
பாஜக குழப்பத்தில் இருக்கிறது
ஆனால், பாஜக குழப்பத்தில் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை முறை மாற்றப்பட்டுள்ளது என கேட்கிறீர்கள். ஆம், அதன் பிரிவுகள் மாற்றப்படலாம். ஆனால் அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதுதான் அரசமைப்பின் ஆன்மா. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முழு அரசமைப்புச் சட்டத்தின் ஆறு கூறுகள்.
கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு கூறிய பதின்மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த அரசமைப்பின் ஆறு அடிப்படைக் கூறுகள் என்ன?
ஜனநாயகம் (Democracy), மதச்சார்பின்மை (Secularism), சட்டத்தின்ஆட்சி (Rule of Law), சமத்துவம் (Equality), கூட்டாட்சி (Fedaralism), சுதந்திரமான நீதித்துறை (Independent Judiciary). அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்த ஆறு கூறுகளையும் தொடுவதற்கு பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை. ஏனெனில் பா.ஜ.க. இதற்கு எதிராக இருக்கின்ற கட்சி. – (குறுக்கீடுகள்). நீங்கள் அமைதியாக இருந்தால் நான் அவற்றை இங்கு ஆதாரத்துடன் மெய்ப்பிப்பேன்…. (குறுக்கீடு)
ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி: உங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைபிடிக்கப்பட்டதை மறந்து விடாதீர்கள் (தொடர்ந்து பேசிய ஆ.இராசா)
நான் முட்டாளும் இல்லை;
அறியாமையில் இருப்பவனும் அல்ல!
இந்த அவையில் நான் 6 முறை எம்.பி., மூன்று முறை அமைச்சராக இருந்த சட்ட மாணவன். நான் முட்டாளும் இல்லை; அறியாமையில் இருப்பவனும் அல்ல. மக்களவையில் ஜனநாயகம் பற்றி பேசும்போதெல்லாம் மிசா, எமர்ஜென்சி என்று பாஜகவினர் கூச்சல் போடுகின்றனர்!.
கேசவானந்த பாரதி வழக்கின் முதல் சாரமான ஜனநாயகத்திற்கு வருகிறேன்.
ஆம். எங்கள் தலைவரும் கூட எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க இலக்கியத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? கறுப்பர்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த ‘பெஞ்சமின் மொலைஸி’ என்ற ஒரு பெரிய கவிஞர் இருந்தார். அவர் பின்னாளில் தூக்கிலிடப்பட்டார். அவரது ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன்.
கதையாடல் கலந்த கவிதை; 22 வயது கருப்பர் இனப் பெண் அரசாங்கத்தால் தேச விரோத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியான அவள், ஆறு மாதங்களுக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தநாட்டு குற்றவியல் சட்டப்படி, காவல்துறையால் ஏதேனும் அநீதி உங்களுக்கு இழைக்கப்பட்டதா என்று நீதிபதி அந்த பெண்ணிடம் கேட்டார்.
அவள் அருகே இருந்த இரண்டு காவலர்களை பார்த்து விட்டு, பயந்து கொண்டே நீதிபதியிடம், அந்த இளம்பெண், ‘‘அய்யா, எனக்கு ஒன்றும் அநீதி இழைக்கப்படவில்லை. ஆனால், இங்கே காவலர்களின் கையில் இருக்கிற இந்த லத்தியோ, தடியோ விந்தணுவை வெளியேற்றும் தன்மை கொண்டிருந்தால் நான் இன்று ஆறு மாத கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும்’’ என்றாள்.
நான் இங்கே இதை குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. திமுகவுக்கும் அப்படிப்பட்ட கொடுமைகளும் நடந்தது. மிசாவில் இருபத்தி நான்கு வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே அவர் கடுமையாக தாக்கப்படுகிறார். அவரைப் பார்க்க சென்றார் அவரது தந்தை.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஏற்பட்ட காயங்களில் இருந்து தேசத்தை மீட்டெடுங்கள்
ஒருபோதும் முழுக்கைச் சட்டை அணியாத தன் மகன் முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததை பார்த்துவிட்டு அந்த புத்திசாலி தந்தை, “காவல்துறை தாக்கியதால் உனக்கு காயம் ஏற்பட்டதா?” என கேட்டார். மகன் சொன்னார் “என் காயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஏற்பட்ட காயங்களில் இருந்து தேசத்தை மீட்டெடுங்கள்’’ என்று. (கைத்தட்டல்)
அந்த இளைஞன் வேறு யாருமல்ல, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அந்த தந்தை தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான்.
நாங்கள் வலியை அனுபவித்தவர்கள். நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். எல்லாவற்றையும் தாண்டி வந்து நாங்கள் இங்கே காங்கிரஸோடு அமர்ந்திருக்கிறோம் என்றால் நாங்கள் அரசமைப்புச் சட்டம் அனைத்துக்கும் மேலானது என நம்புகிறோம். காங்கிரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருப்பதற்குக் காரணம் நாங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதுதான்.
எங்களுக்கு யாருடன் கூட்டணி என்பதைவிட கொள்கையே முக்கியம்!
2ஜி வழக்கில் நானும், கனிமொழியும் கைது செய்யப்பட்டோம். கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது. விசாரணை நடக்கும் போதும் தீர்ப்பின் போதும் உங்களின் பாஜக ஆட்சி இருந்தது. காங்கிரசிடமும் தி.மு.க கெஞ்சவில்லை. பாஜகவிடவும் தி.மு.க கெஞ்சவில்லை. எங்களுக்கு யாருடன் கூட்டணி என்பதைவிட கொள்கையே முக்கியம்.
மிசாவின்போது ஜனநாயகம் மட்டுமே காயப்பட்டது; ஆனால், தற்போது பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை சுதந்திரம் என ஆறு கூறுகளும் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதைப்பற்றி பேசத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். பதவி, பணத்திற்காக அல்ல. (குறுக்கீடு)
அவைத்தலைவர்: இராசா அவர்களே உணர்ச்சிவசப்படா தீர்கள். சீக்கிரம் பேச்சை முடியுங்கள். (தொடர்ந்து பேசிய ஆ.இராசா)
தந்தை ஸ்டேன் சுவாமி தனது முழு வாழ்க்கையையும் பழங்குடியினருக்காக அர்ப்பணித்தவர். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட எண்பத்தைந்து வயதான அவரை பாஜக கைது செய்தது. பிணை வழங்கவில்லை. என்.அய்.ஏ. அனுமதிக்கவில்லை, மூன்றாவது முறையாக பிணை விண்ணப்பம் கொடுத்து வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கையில் ஸ்டான் சுவாமி மருத்துவமனையில் இறந்துவிட்டார் என செய்தி வருகிறது.
உடனே நீதிபதிகள், ‘‘ஸ்டான் சுவாமியின் பணிமீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது இறப்பு அதிர்ச்சியாக உள்ளது. மன்னிக்கவும். எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை’’ என்றனர். இதுதான் உங்கள் ஜன நாயகமா?
எனவேதான் கூறுகிறேன் அவசரநிலை காலத்தில் ஜன நாயகம் மட்டும்தான் காயப்பட்டது. ஆனால் அப்போதுதான் ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சமதர்மம்’ என்ற இரு வார்த்தைகள் அரசமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. அதுதான் இன்றைக்கு தேசத்தை உங்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகப் படுகொலைகளுக்காக ஒருநாள் பாஜகவும்
விலை கொடுக்க வேண்டி வரும்!
ஸ்டேன் ஸ்வாமி தனது இறுதிக்குறிப்பில் சொல்கி றார். ‘‘இன்று எனக்கு நடப்பது எனக்கு மட்டுமே நடக்கும் தனித்த செயல் அல்ல. முக்கிய அறிவுஜீவிகள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் தலைவர்கள் என இந்த அரசின் தவறுகளுக்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இதற்கான விலையை நான் கொடுத்துதான் ஆகவேண்டும்; கொடுக்க சித்தமாகிவிட்டேன்” என்று அவர் கூறியதை போலவே அதற்கான விலையை அவர் கொடுத்தார். இது போன்ற ஜனநாயகப் படுகொலைகளுக்காக ஒருநாள் பாஜகவும் விலை கொடுக்க வேண்டி வரும், மறந்து விடாதீர்கள்.
அடுத்து மதச்சார்பின்மை, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் கே.டி.ஷா, அரசமைப்பின் முகவுரையில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நுழைக்க விரும்பியபோது, அம்பேத்கர் கூறினார். ‘‘அரசமைப்பின் பிரிவுகள் 15, 25, 26, 28, 29 மற்றும் அனைத்தும் மதத்தின் அடிப்படையிலான அனைத்துப் பாகுபாடுகளையும் தடைசெய்கிறது. மேலும், மதச்சார்பின்மையை பாதுகாக்கிறது;
நம்முடைய அரசமைப்பே முழுமையாக மதச்சார்பற்றது. பாகிஸ்தான் ஒரு மதச்சார்பான நாடு என்று அறிவித்துவிட்டது நமக்கு தெரியும். ஆனால் இந்தியாவை நாம் அப்படி கட்டமைக்கவில்லை. எனவே, அதை மதச்சார்பற்ற நாடு என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லை.’’
ஏனென்றால், அப்படி ஒரு மோசமான நிலை இந்த நாட்டிற்கு வராது என்று நம்பினார் அம்பேத்கர். இவ்வளவு மோசமான பாஜக ஆட்சிக்கு வரும் என்று அன்று அவர் அறிந்திருக்கவில்லை.
இந்த நாட்டில் மதச்சார்பின்மைக்கு வழிகோலியது யார்? 1946 நவம்பர் 13 ஆம் தேதி அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை தீர்மானம் (Objectives Resolution) நேரு அவர்களால் அரசியல் நிர்ணயச் சபையில் முன்மொழியப்பட்டது. அதில், அமைய இருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என உறுதியிட்டார். அதற்கு முன்னதாகவே, 1931 இல் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் காந்தி தாமாகவே முன்வந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். ‘மதச்சார்பின்மைதான் சுதந்திர இந்தியாவின் ஆன்மா’ என்று குறிப்பிட்டார். இதுதான் நேரு – காந்தி. உங்கள் நிலைப்பாடு அப்போது என்ன?
சாவர்க்கரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை!
இந்தியாவில் ‘இந்து தேசியம்’ (Hindu Nationality) மற்றும் ‘முஸ்லிம் தேசியம்’ (Muslim Nationality) எனும் இரு தேசக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் ஜின்னா என்று பலர் நம்புகிறோம். இல்லை, 1924-லேயே சாவர்க்கர் தான் அதைச் செய்தார். சாவர்க்கரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கர் தெளிவாகச் சொன்னார், “இந்த நாட்டிற்கு இந்து ராஜ்ஜியம் வந்தால், அது மிகப்பெரிய ஆபத்தான அழிவாக இருக்கும். என்ன விலை கொடுத்தாவது அதை நிறுத்த வேண்டும்” என்று.
எங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் தவறானது!
ஆனால், பிரதமர் மோடி, மிகவும் கவனமாக, புத்திசாலித்தனமாக, தந்திரமாக தன் சுதந்திரதின உரையில் சாவர்க்கர் மற்றும் அம்பேத்கர் இருவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து, ஒரே அளவுகோலில் தன் உரையில் புகழ்கிறார்; எங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் தவறானது.
இரண்டாவதாக சட்டத்தின் ஆட்சியின் கீழ் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். மணிப்பூர், பில்கிஸ் பானு மற்றும் மல்யுத்த வீரர்கள் மீது நடந்த தாக்குதல். இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி எங்கே நடக்கிறது? மலைவாழ் பெண்கள் மீது பகல் வன்புணர்ச்சி! பகல் கொலை! நீதி இல்லை! இதுதான் சட்டத்தின் ஆட்சி. (குறுக்கீடு)
அவைத்தலைவர்: இராசா அவர்களே, உங்களிடம் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருக்கலாம். ஆனால், நேரமில்லை. விரைவாக உரையை முடியுங்கள். (தொடர்ந்து பேசிய ஆ.இராசா)
நாட்டில் நீதிப்பரிபாலனம் தன்னிச்சையாக உள்ளதா? ராஜ்நாத் சிங் இங்கே குறிப்பிட்டார். அவசரநிலை காலத்தில் நீதியரசர் கண்ணா அவர்கள் அவருக்கு மேல் இருந்த பல நீதிபதிகளைத் தாண்டி மூப்பு அடிப்படையின்றி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று.
நீங்கள் என்ன செய்கிறீர்கள். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் தற்போதும் பதவியில் இருக்கிறார்கள். ஒரு நீதியரசர் 23 நீதிபதிகளைத் தாண்டி மூப்பு அடிப்படையின்றி பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்னொரு நீதியரசர் 30 பேரை தாண்டி பதவி பெற்றுள்ளார் உங்கள்
ஆட்சியில்!
இதுதான் சட்டத்தின் ஆட்சியா? சமூக நீதியா?
மன வலியுடன் சொல்கிறேன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல அனைத்து தகுதியும் இருந்தும், பாஜக அரசு அவரை கேரளாவில் தலைமை நீதிபதியாக பதவி கொடுத்து அவரது திறமை மற்றும் தகுதியைப் புறக்கணித்துவிட்டது இதுதான் சட்டத்தின் ஆட்சியா? சமூக நீதியா?
அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை எரிக்க விரும்பி னார் என்று பலரும் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆம், அம்பேத்கர் அப்படி கூறினார். காரணம் ஆந்திராவுக்கு மாநில தகுதி வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் ஜாதியினர் சிறப்பு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு கேட்டனர்.
“ஆந்திராவுக்கு மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையில் மாநில தகுதி வழங்கினால், ஆளுநருக்கு சிறப்பு அனுமதி மற்றும் சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் விரும்புகின்றனர்; அதனால், அந்த மாநில ஆளுநருக்கு தனி கூடுதல் அதிகாரம் வழங்கலாம்’’ என்றார்அம்பேத்கர்.
வாடகை குதிரையாக நான் பயன்படுத்தப்பட்டேன்: அம்பேத்கர்!
நீங்கள் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தில் ஆளு நருக்கு அந்த அதிகாரம் தர இயலாதே என்று வாதம் வந்தபோது, அம்பேத்கர் உணர்ச்சிவசப்பட்டு சொன்னார், ‘‘நான்தான் அரசமைப்புச் சட்டத்தை எழுதியதாக சொல்கிறார்கள். சில நேரத்தில் வாடகை குதிரையாக நான் பயன்படுத்தப்பட்டேன். அதை எரிக்கும் முதல் ஆளாகவும் நானிருப்பேன்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து அம்பேத்கரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை நீங்களே எரிக்க வேண்டும் என கூறியதன் காரணம் என்ன என கேட்டதற்கு, ‘‘கடவுளுக்காக ஒரு கோயில் கட்டுகிறோம். அதில் பிசாசு வந்து குடியேறினால் கோயிலை இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை அல்லவா?’’ என்று அம்பேத்கர் சொன்னார்.
நன்றி! வணக்கம்.
– இவ்வாறு நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.