தந்தை பெரியாரைப் பொறுத்தவரை யார் ஆளுகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி ஆளுகிறார் – யாருக்கான ஆட்சி என்பதுதான். ‘‘நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகவே இருந்திருக்கிறேன்” என்றார் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரை (ராஜாஜியை) பதவியிலிருந்து விரட்டி, அந்த முதலமைச்சர் நாற்காலியில் காமராசர் அமர்வதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆச்சாரியார் மூடிய 6 ஆயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, பல்லாயிரக்கணக்கான புதிய பள்ளிகளையும் திறந்து, ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்துக்குக் ‘கல்தா’ கொடுத்தவர் காமராசர்.
கல்விக் கண்களைத் திறந்தவர் காமராசர் என்றார். ‘பச்சைத் தமிழர்’ என்றும் காமராசரைப் பாராட்டினார் தந்தை பெரியார்.
‘கல்கி’ போன்ற பார்ப்பன ஏடுகள் – ‘கதர்ச்சட்டைக்குள் கருப்புச்சட்டை’ என்றும், ‘குயில் (காமராசர்) முட்டையிடுகிறது – காக்கை (பெரியார்) அடைகாக்கிறது’ என்று கார்ட்டூன் போட்டவர்களா குதர்க்கம் பேசுவது!
‘பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்!’ என்று சொன்ன ஆச்சாரியார் ராஜாஜியின் மூக்கை உடைத்தவர் தந்தை பெரியாரின் சீடரான அறிஞர் அண்ணா!
வரலாறு புரியாமல்
வக்கணை பேசாதே, தினமலரே!