காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் வலியுறுத்தல்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காவிரியில் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது
தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை மாதம் தோறும் வழங்க வேண்டும் 

புதுடில்லி, நவ.7 காவிரி யில் தமிழ்நாட்டுக்கான பங்கினை மாதம்தோறும் வழங்க வேண்டும். காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-ஆவது கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் நேற்று (6.11.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டா பிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன், உதவிப் பொறியாளர் நிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு நீர்வளத் துறை செயலர் க.மணிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய பங்கு, அதுபோல தமிழ்நாட்டில் இருந்து காரைக்காலுக்குச் சேர வேண்டிய பங்கு வழங்குவது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். இந்த நவம்பர் மாதம் 5-ஆம் தேதி வரை நமக்கு வரவேண்டிய காவிரி நீர் 2.2 டிஎம்சி. ஆனால், 4.2 டிஎம்சி வந்து சேர்ந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் நமக்கு 13.78 டிஎம்சி காவிரி நீரை கருநாடக அரசு தர வேண்டும். அதைத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அதுபோல டிசம்பர் மாதத்தில் 7.35 டிஎம்சி தர வேண்டும். மொத்தமாக ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 145.65 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 248 டிஎம்சி வந்து சேர்ந்துள்ளது. இருப்பினும், கருநாடக அரசு தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் தரவேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்றுதான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிக மழை பெய்து கருநாடக அணைகளில் தேக்கி் வைக்க முடியாத நிலையில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது பிலிகுண்டுலு வுக்கு விநாடிக்கு 7,000 கன அடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் பெய்து வருகிறது. அதனால் இந்தாண்டு டெல்டா பகுதி விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இருப்பினும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் காவிரி யில் தண்ணீர் திறந்துவிட் டால்தான் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து வலியுறத்தி வருகிறோம்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தின் நிகழ்ச்சி நிரலி லேயே இல்லை. தமிழ்நாடு காரைக்காலுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுபோல நாமும் முறையாக காரைக்காலுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறு க.மணிவாசன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *