ஹிந்தி எதிர்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை!
‘‘தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தி பாஷையின் ரகசியமும்” என்ற தலைப்பில், 98 ஆண்டுகளுக்கு முன்பே 7-3-1926 நாளிட்ட ‘‘குடிஅரசு” இதழில் எழுதினார், தந்தை பெரியார்.
ஹிந்தி என்பது சமஸ்கிருதக் குடும்பத்தின் குட்டி! சென்னை மாகாண பிரதமராக இராஜகோபாலாச்சாரியார் இருந்தபோது, லயோலா கல்லூரியில் உரையாற்றினார். ‘‘சமஸ்கிருதத்தைப் புகுத்தவே ஹிந்தியை முதற்கட்டமாகக் கொண்டு வந்தேன்” என்று பேசினாரே!
1938 இல் நடத்தப்பட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாகும். அப்பொழுதும் அதே ஆச்சாரியார்தான் பள்ளிகளில் ஹிந்தியைத் திணித்தார். அதே ஆச்சாரியார் ‘‘Hindi Never; English Ever” என்று சொல்லும் நிலை பிற்காலத்தில் ஏற்பட்டதே!
கடும் போராட்டத்தின் விளைவாக ஹிந்தித் திணிப்புப் பின் வாங்கப்பட்டது. 1948 இல் மீண்டும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினோம்.
1952, 1953, 1954 ஆகஸ்டு மாதங்களில் இரயில்வே நிலையங்களில் ஊர்ப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பலகைகளில் முதல் இடத்தில் இடம்பெற்ற ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டே!
திருச்சியில் ஒரு பக்கத்தில் தந்தை பெரியாரும், மறுமுனையில் கலைஞர் அவர்களும் ஹிந்தி எழுத்துகளை தார்கொண்டு அழித்தனர்.
இரயில்வே நிலையங்களில் இன்றைக்குத் தமிழ் முதலிடம் பெற்றது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய போராட்டமே!
இடையிடையே ஹிந்தி தன் தலையை நீட்டிப் பார்க்கிறது. சரியான அடி வாங்கியவுடன், பொந்துக்குள் பதுங்கி விடுகிறது.
அண்ணா முதலமைச்சராக வந்த நிலையில், ‘‘தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை; தமிழும், ஆங்கிலமும்தான்” என்று சட்டம் செய்யப்பட்டு விட்டதே!
இப்பொழுது என்ன?
தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற ‘‘பொதிகை” என்ற தமிழ் ஒளிபரப்பு இப்பொழுது டிடி தமிழ் என்று மாற்றப்பட்டுள்ளது. (டிடி என்றால், தூர்தர்ஷன் என்பதாகும்).
நம்மால் விரட்டியக்கப்பட்ட ‘‘ஆகாஷ்வாணி” மீண்டும் குதித்து விட்டது. தொலைக்காட்சியின் இலச்சினை (லோகோ) காவி வண்ணமாகிவிட்டது.
தமிழர்கள் தூங்குகிறார்கள் என்ற நினைப்பா? கருஞ்சட்டைக்காரனுக்குத் தூக்கம் ஏது? எப்பொழுதும் விழிப்பாக இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் இயக்கம் இது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் தொடக்கமே ஹிந்தி எதிர்ப்பில் ஆரம்பமாகிவிட்டது.
நாளை (28-4-2024) ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் கூடுங்கள் தோழர்களே!
தொலைக்காட்சி நிலையம் நோக்கி அணிவகுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம்!
வாரீர்! வாரீர்!!