காஞ்சிபுரம், நவ. 21- குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு தங்கத் தேர் செய்வதாக தனியார் சிலர் பணம், தங்கம் வசூல் செய்துள்ளனர். இதுவரை தேர் செய்வதற்கான எந்தப் பணிகளும் நடைபெறாததால் மோசடி ஏதும் நடைபெற்றதா என்று சந்தேகம் எழுவதாகவும், தங்கத் தேர் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெற்றி வேல் முருகன் ஆன்மிகப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் ஏ.குமார் தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் குடமுழுக்கு விழா வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்காக தங்கத் தேர் அமைக்க ஒரு குழுவினர் மூலம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. நானும் நன்கொடை அளித்தேன். இதுவரை நன்கொடை அளித்தவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. தங்கத் தேர் அமைப்பதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதற்கிடையில் கோயில் செயல் அலுவலர் மூலம் தங்கத் தேர் தொடர்பாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2012-ஆம் ஆண்டு திடீரென்று அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. இந்தத் திருத்தேர் பணிக்காக ரொக்கம் மற்றும் தங்கம் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தங்கத் தேர் செய்யும் பணி நடைபெறவில்லை.
எனவே தங்கத் தேருக்காக நன் கொடை பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை இணைந்து தங்கத் தேர் செய்யப்படுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண் டும். இல்லையெனில் பணம் நன் கொடையாக அளித்தவர்களுக்கு வட்டியுடனும், தங்கமாக நன்கொடை அளித்தவர்களுக்கு தங்கமாகவும் திரும்ப அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
