இந்நாள் – அந்நாள்

3 Min Read
- Advertisement -

சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு
“பெரியார்’” என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்ட நாள் இன்று (13-11-1938)

 

தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய ‘சுயமரியாதை இயக்கம்’ பெண்கள் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, ஜாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் 1929 இல் செங்கல்பட்டில் நடத்தப்பட்ட இயக்கத்தின் முதல் மாநாடு விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல்,

அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் அவர்கள்  வலியுறுத்தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே  நிகழ்த்த வேண்டும் என்ற நடை முறையையும் அவர் வழக்கமாக்கினார்.  சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெண்கள் பங்கெடுப்பதும், தொடக்க உரை நிகழ்த்துவதும் வெற்றுச் சம்பிரதாயமாக மட்டும் நின்றுவிடாமல், தொடர் நிகழ்வுகளாகவும்  மாறின. பெண்களைப் பொது வெளிக்குள், போராட்டக் களத்துக்குள் கொண்டு வந்தார் தந்தை பெரியார்.

அதன் விளைவாகவே, 1937 இல் சென்னை மாகாணப் பிரதம அமைச்சர் ராஜாஜி, ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து  வலுப்பெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்  1938 இல் உச்சக்கட்ட நிலையை எட்டியபோது, பெண்கள் பலரும் அதில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள்.

1938 நவம்பர் 13 சென்னை ஒற்றைவாடைநாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப்  பெண்கள் மாநாடு நடை பெற்றது.

மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார்.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொன்னெழுத் தால் பொறிக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் “பெரியார்” என்று பட்டம் வழங்கிய தீர்மானம்.

‘‘இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன பணிகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது’’ என்ற தீர்மானம் பெரு வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பல ஆண்டுகள் முன்பே 1927லேயே நாகர்கோவில் வழக்குரைஞர் பி. சிதம்பரம் (பிள்ளை) அவர்கள் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் என்று விளிக்கத் தொடங்கினார். 1929ஆம் ஆண்டு, அருப்புக்கோட்டை ‘நாடார் குல மித்திரன்‘ வெளியீடான ‘சுயமரியாதை இயக்கத் தலைவரும், ‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’ பத்திரிகைகளில் அதிபருமான உயர்திரு ஈ.வெ. ராமசாமிப் பெரியாரவர்களின் ‘பொன் மொழிகள்’ நூலிலேயே ‘பெரியார்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னரும், ‘பெரியார்’ என்றே அவர் அழைக்கப்பட்டு வந்ததற்குப் பல சான்றுகள் இருப்பினும், பெண்கள் கூட்டிய மாநாட்டில், தனித்ததொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதற்கான காரணங்களை விளக்கி, ஒருமனதாகப் பெரும் வரவேற்புடன் அத்தீர்மானத்தை நிறைவேற்றி ‘பெரியார்’ என்றே அழைக்க வேண்டும் என்று இட்ட அன்புக்கட்டளை வரலாற்றில் நிலைத்து விட்டது.

தகவல்: அருள்

 

உடையார்பாளையம் ஆசிரியர் சா. வேலாயுதம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (13-11-1947)

இந்நாள் - அந்நாள்

 

தாம் ஏற்றுக்கொண்ட உயரிய சமத்துவக் கொள்கைக்காக உயிரையே விலையாகக் கொடுத்த மாமனிதர்களின் பட்டியலில், மதிப்புமிக்க இடத்தினில் இருக்கத்தக்கவர் உடையார் பாளையம் ஆசிரியர் சா. வேலாயுதம் ஆவார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக் காகப் பட்டப் பகலில் படுகொலை (13.11.1947)  செய்யப்பட்ட நாள் இன்று.

தகவல் :  பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *