இஸ்லாமியர் வீட்டை இடித்ததுதான் தீபாவளிப் பரிசாம்!

- Advertisement -

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அம்மாநிலத்தில், லக்கிம்பூர் என்ற பகுதியில் 40 ஆண்டுகள் பழைமையான இஸ்லாமிய குடும்பத்தின்  வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கும் காணொலி ஒன்றை வெளியிட்டதை  ‘தீபாவளி சிறப்புச் செய்தி’ என்ற அசாம் முதலமைச்சரின் பதிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தலைவர்கள் எந்த ஒரு மத விழா என்றாலும் அனைத்துச் சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவிப்பதுண்டு. ஆனால் அசாம் முதலமைச்சர் ஹேமந்த் விஸ்வ சர்மாவின் பதிவு ஒன்று சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல; நாட்டின் மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தீபாவளி முதல் நாள் நள்ளிரவில் அசாம் முதலமைச்சர் வெளியிட்ட ஒரு பதிவில் இஸ்லாமிய குடும்பம் குடியிருக்கும் 40 ஆண்டு பழைமையான வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கும் காட்சியை பதிவிட்டு, அனைவருக்கும் ‘மகிழ்ச்சியான தீபாவளி செய்தி’ என்று எழுதி இருந்தார்; அதற்குப் பின்னணியில் உற்சாகமான இசை ஒலிக்கிறது.

மேலும் அடுத்த பதிவில்”தீபாவளிக்கு சற்று முன்பு, நாங்கள்  தூய்மைப்பணியை மேற்கொண்டோம்” எனத் தலைப்பிட்டுள்ளார்; அதாவது லக்கிம்பூரில் உள்ள ஒரு இஸ்லாமியர் வீட்டை இடித்ததைத் தான் இப்படி திமிரோடு கூறுகிறார்.

இந்தப் பதிவு அப்பட்டமான இஸ்லாமியர்மீதான வெறுப்பையும், கொடூரத்  தாக்குதலையும் கொண்டாடும் செயல் ஆகும்.

குடும்ப உறுப்பினர்கள் பலர் குழந்தைகளோடு வெளியில் நிற்க மூத்த உறுப்பினர்கள் கண்ணீரோடு தங்கள் வீடு இடிக்கப்படுவதைக் காணும் காட்சி அதில் உள்ளது. ஒரு மாநில முதலமைச்சர் இப்படி அப்பட்டமான மத வெறியோடு இருப்பது அனைவருமே மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா என்று கூறிக்கொண்டு அந்த நாளில் இஸ்லாமியர்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்கவைப்பதுதான் முதலமைச்சரின் நோக்கமா? என்ற கேள்வி எழுகிறது

சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் மாநிலத்தில் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக சர்மா ஏற்ெகனவே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களின் அஸ்திவாரம் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அப்பட்டமாக வரித்துக் கொண்டதாகும்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியே ஆர்.எஸ்.எஸில் இருந்தவர்தானே!

இவர்களின் மேடைப் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்தால், அதில் இரு துருவ அரசியல் அப்பட்டமாகவே தெரியும். குடியுரிமை  திருத்தச் சட்டம் (CAA), பசுப் பாதுகாப்புச் சட்டம், மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவை – இஸ்லாமியர்களைக் குறி வைத்தே ஒன்றிய  பிஜேபி ஆட்சியால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்.

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி சார்பாக வேட்பாளர்களாக இஸ்லாமியர்கள்  அறவே நிறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பை எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில்  பிஜேபி எம்.பி.க்கள் 240 பேர் – இதில் ஒருவர்கூட இஸ்லாமியர் கிடையாது.

மாநிலங்களவையில் 90 பிஜேபி எம்.பி.க்கள், ஆனால் அதிலும் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை.

450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் திட்டமிட்டு உடைத்து நொறுக்கியவர்கள் பிஜேபியினரும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரும்தானே!

அத்தகையவர்கள்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்துள்ளனர் என்றால் ஒரு மாநிலத்தில் (அசாமில்) ஒரு தீபாவளி நாளில் இஸ்லாமியர் வீட்டை புல்டோசர் கொண்டு, பிஜேபியைச் சேர்ந்த முதலமைச்சர் இடித்துத் தூள் தூளாக்கியதைத் தீபாவளி வாழ்த்தாகப் பேசுகிறார் என்றால், ‘இது நாடா – கொடும்புலிகள் வாழும் காடா’ என்பதைச் சிந்திக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *