கேள்வி 1: நாட்டின் முதல் அய்.அய்.டி.-யான காரக்பூர் அய்.அய்.டியில், ஆசிரியர் பணி இட ஒதுக்கீட்டில் 424 எஸ்.டி, 236 எஸ்.சி., 118 ஓபிசி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முறையே 2, 20, 46 பேர் மட்டுமே பேராசிரியர்களாக (10% க்கும் குறைவு) உள்ளனரே! இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் அவரவர்களுக்குரிய இடஒதுக்கீடு பராமரிக்கப்படவில்லையே காரணம் என்ன? விடிவுதான் என்ன?
– குடந்தை க.குருசாமி
பதில் 1: தமிழ்நாடு – கருநாடகம் முதலிய இரண்டு மாநிலங்களில் உள்ள சமூகநீதி வேட்கை, மற்ற மாநிலங்களில் இல்லாததொரு குறையாகும். உரிமைக்குப் போராடி வெற்றி பெறக்கூடிய உணர்வாளர்கள் முன்வந்து சமூக அநீதியை ஒழிக்க முன்வர வேண்டும். என்றாலும், நாம் நமது பணியைத் தொடர்கிறோம். ஒன்றிய ஆட்சி மாற்றமும், போதிய விழிப்புணர்வுமும்தான் விடிவைத் தரும்.
- • •
கேள்வி 2: மகளிருக்கு இலவச அரசுப் பேருந்துப் பயணத்தில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், 4, 5 இலக்கங்களில் அதிகபட்ச ஊதியம் பெறும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் நிலையில், சொற்ப ஊதியத்தில் வேலைபார்க்கும் தினக்கூலி ஆண்களும் அதே அரசுப் பேருந்தில் கட்டணம் செலுத்திப் பயணிப்பது மிகப் பெரிய முரண்பாடாக இருக்கிறது எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறதே?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில் 2: நல்ல கேள்வி சித்து. ஆளும் கட்சியினர் சிந்திப்பார்களாக!
- • •
கேள்வி 3: அமெரிக்க நாட்டு இடைத்தேர்தலில், டிரம்புக்கு ஏற்பட்ட பின்னடைவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கண்மணி, கன்னியாகுமரி
பதில் 3: ‘தானடித்த மூப்பாக’ ஒலித்த யதேச்சாதிகாரக் குரலுக்கும், உலகுக்கே தான்தான் பெரியண்ணன் என்ற பீற்றல் அரசியலுக்கும், மக்கள் முதலில் வெற்றியைக் கொடுத்தாலும் பிறகு புரிந்துத் தோல்வியைத் தரத் தயங்க மாட்டார்கள் என்பதே பாடம். இங்கே படிக்க வேண்டியவர்கள் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் உள்ளவர்கள்!
- • •
கேள்வி 4: கோவையில் பெரியார் அறிவுலக நூலகத்தை – அதை உருவாக்கிய மேனாள் முதலமைச்சருடன் பார்வையிட்டபோது தங்கள் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தது?
– க.அன்புமொழி, சென்னை
பதில் 4: “பெரியாருக்குப் பின் திராவிட இயக்கம் இருக்காது” என்று ஆருடம் கணித்தவர்களை நினைத்து, தலைமுறைகளாக தகத்தகாயமாக ஒளிரும் திராவிட ஆட்சியின் சாதனைக் கண்டு, ஊற்றெடுத்த மகிழ்ச்சியைப் எப்படிச் சொல்வேன் தோழா!
- • •
கேள்வி 5: சிறுமிகள் மீது பாலியல் வன்முறையின் உச்சநிலை நாளும் நடப்பது எதைக் காட்டுகிறது?
– வா.அறிவரசு, வேலூர்
பதில் 5: நடைபெறும் ஆட்சியின் அவலத்தைக் காட்டுகிறது.
- • •
கேள்வி 6: கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50க்கு வாங்கும்போது தமிழ்நாடு அரசு ரூ.37க்கு மேல் வாங்குவதற்குக் காரணம் கணக்குத் தெரியாத குற்றமா? ஆளத் தெரியாத கொற்றமா?
– கல.யுவகாளி, நுங்கம்பாக்கம்
பதில் 6: பின்னதே சரியான பதில் – இல்லையா?
- • •
கேள்வி 7: அழுகிய 450 டன் வெங்காயத்தை மக்களுக்குக் கொடுப்பதற்கு த.வெ.க. அரசு கொள்முதல் செய்துள்ளதே, இதற்கு யார் பொறுப்பு? பண விரயம் ஆக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பாரா?
– பெ.பழனி, திருவாரூர்
பதில் 7: மாநிலத்தில் ஓர் ஆட்சி நடக்கிறது. அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் முதலமைச்சர்.
அமைச்சர்களின் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டியதும் முதலமைச்சரே. கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் (Vicarious responsibility) என்பதே கேபினட் அரசாங்க அரசியலில் பாலபாடமாகும்.
- • •
கேள்வி 8: கோவை பெரியார் அறிவுலகம் கண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகம் பாராட்டு விழா நடத்தியது, மீண்டும் தி.மு.க. தோழர்களுக்கு உற்சாகமூட்டியதாக அமையுமா?
– முகிலன், சென்னை–14
பதில் 8: தி.மு.க. தோழர்களுக்கு மட்டுமா? அனைத்துலகப் பெரியாரியத் தோழர்களுக்கும்தான்!
- • •
கேள்வி 9: எல்லா வகையிலும் தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளுகின்ற த.வெ.க. ஆட்சியைப் போன்று சிறந்த ஆட்சி எதுவும் இருக்க முடியாது என்று அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கூறி மார்தட்டிக் கொள்கின்றார்களே – உண்மை நிலையை உணர மாட்டார்களா?
– சி.அன்புச்செல்வன், வி.வி.நகர், சென்னை-99
பதில் 9: அவர்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்த ஆட்சியை அவர்கள் பாராட்டத்தானே செய்வர். “உலகம் எப்படிப் பார்க்கிறது; மக்கள் மன்றம், நீதிமன்றங்கள் எப்படி மதிப்பிடுகிறது” என்பது அல்லவா முக்கியம்?
