நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளமும், நிலச்சரிவும், சகதிக் குழம்பு ஆறு போல அதிசயப் பெருக்கெடுத்து உண்டாக்கியுள்ள உயிர்ச்சேதமும், பொருளிழப்பும் உலகத்தினையே உலுக்கிவிட்டதொரு பெருந்துயரமாகும்.
திபெத்தில் உள்ளது லெண்டே நதி. பெரும் பனிப் பாறைச் சரிவு ஏற்பட்டு அந்நதியின் நீரோட்டமானது தடைபட்டது. அப் பனிப் பாறைச் சிதைந்து, தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த நதியின் நீரோட்டம் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. 26.8.2026 அன்று காலை 9 மணி அளவில் அந்தப் பெரு வெள்ள நீரானது நேபாளத்திலுள்ள போடே கோஷி நதியின் வழியாக திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. நேபாள நாட்டின் ஈசுவா, நுவாகாட், தாடிங், சிட்வான் உள்பட ஏழு மாவட்டங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து பாதிப்படையச் செய்தது. கரைபுரண்டுப் பாய்ந்த வெள்ள நீரினால் ஆறுகளின் நீர்மட்டம் 30 நிமிடங்களுக்குள் 9 மீட்டருக்கு உயர்வடைந்ததை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இவ் வெள்ளப் பெருக்கு அந் நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டது. பாதிப்புகள் பலப்பல!
மலைப்பகுதியின் ஓர் உச்சியிலிருந்து இரு கரைகளையும் மீறிக் கொண்டு, பனிப் பாறைகள், கற்பாறைகளோடு, சகதிக் குழம்பாக வெள்ளநீர் தனக்கு அகப்பட்டதையெல்லாம் ஒன்றாகத் திரட்டிக் கொண்டு, பல அடி உயரத்தில் இருந்து சீறிப் பாய்ந்தது. காட்சி ஊடகங்கள் பலவும் இதனைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டின.
பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றுப் பாலம், ஏராளமான வீடுகள், கடைகள், வாகனங்களை வேகமாக இழுத்துச் சென்றது. நேபாள நாட்டின் 8 நீர் மின் சுரங்க நிலையங்கள், புதிதாக அமைக்கப்பட்ட 5 நீர் மின் சுரங்க நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இவற்றில் 933 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை உயிரோடு மீட்பதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நேபாளத்தின் பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய – சீன நாடுகளின் வல்லுநர்களும் இணைந்து பலரை மீட்க முடிந்தது.
நுவாகாட் மாவட்டத்தை பெத்ராவாடியுடன் சீன எல்லையோடு இணைக்கின்ற 42 கி.மீ. நீளமுள்ள முக்கிய சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இச் சாலை கடுமையான சேதத்திற்கு உள்ளானது. அழிவின் சோகத்திற்குப் பஞ்சமேயில்லாத காட்சிகளே எங்கும்! எங்கும்!!
புதியதொரு ஏரி உருவானது
நேபாளத்தின் கோலா, புரேஷ, சாங்போ நதிகள் ஒன்று கூடும் இடத்தில் புதிய தடுப்பு ஏரி ஒன்றையும் இப் பெருவெள்ளம் உருவாக்கியது. இதிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால் இந்த ஏரிக்குள்ளும் உடைப்பு ஏற்படுமென்ற பேரச்சம் எழுந்தது. ஏரியானது உடைந்து விட்டதென்று வதந்திகளும் மின்னல் வேகத்தில் பரவி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின. அப்படி ஏதும் ஆகவில்லை. எனினும் மக்களின் அச்சம் குறையவில்லை.
நேபாளப் பெருவெள்ளம் இந்தியாவின் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்துப் பாய்ந்து, சேதங்களை ஏற்படுத்தலாமென்று அம் மாநிலங்களில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு எதுவும் ஆகவில்லை. மக்களின் அச்சத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நேபாள அரசு மட்டுமா? இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பலவும் அவசர உதவி எண்களை அறிவித்தன. சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். உயிரிழந்த வர்களது உடல்களை மீட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு விரைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. முதல் நாளன்று (26.8.2026) 10 டன் நிவாரணப் பொருள்களை நேபாளத்திற்கு அனுப்பிய இந்தியா தொடர்ந்தும் நிவாரணப் பொருள்கள், மருத்துவப் பொருள் களை அனுப்பி வைத்தது.
உயிரிழந்தோர், காணாமற் போனோர் பற்றிய தகவல்களை ‘காத்மாண்டு போஸ்ட்’ விரிவாக தெரிவித்து வந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட அன்று, முதல் நாளில் 157 பேர் உயிரிழந்தனர் என்ற கூறப்பட்டது. 133 இந்தியர்கள் உள்பட 750 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாளாக நாளாக இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,367, காணாமற் போயுள்ள நபர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேல் என தற்போது (11.9.2026) தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த “புனித யாத்திரை”ப் பயணிகளும் இதில் அடங்குவர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்தும், திடீர் பேரழிவுகளால் உயிரைப் பறிக்கின்ற இதுபோன்ற இடங்களுக்கு மக்கள் ஏன் படையெடுத்துச் செல்கின்றனர் என்பது குறிப்பாக கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
நேபாளத்திற்குச் செல்வது எதற்காக?
திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக் கோயில் – அதனை யொட்டிய மானசரோவர் ஏரியை ஆன்மிகத் தலமென்று கொண்டாடியும், அங்கு வழிபாடு செய்வதற்கும் “புனிதப் பயணம் – யாத்திரை” என்றுதான் இவர்கள் செல்கின்றனர். நேபாளத்தின் பாகமதி மாகாணத்தில் உள்ள கோசைன் குண்டா ஏரியும் வழிபடத்தக்க சக்திவாய்ந்த ஏரி என்று நம்பிக்கை வைத்துப் போகின்றனர். நுவாகாட்டில் உள்ள சிவன் – பார்வதி கோயிலில் வழிபடுதற்கும் அங்கு குவிகின்றனர்.போதாக் குறைக்கு பக்தர்கள் இந்த ஊர்தான் பார்வதியின் பிறந்த ஊரென்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
இப்படித்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத் திலிருந்து 57 பேர் காலாஷ் -மானசரோவருக்குப் ‘புனித யாத்திரை’ எனச் சென்றனர். 3 வேன்களில் பயணம் செய்துள்ளனர். ஒரு வேனில் பயணம் செய்த 21 பேர் சீற்றமான வெள்ளத்தின் வேகமான சுழற்சியில் சிக்காமல் தப்பி வந்துவிட்டனர். இதர 2 வேன்களில் வந்தவர்கள் நிலைமை என்ன என்பதை பல நாள்களாகியும் அறிய முடியவில்லை. சிக்கியவர்களில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சிவஞானம் – ஒருவர் ஆவார்.
சென்னை குரோம்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து “புனித யாத்திரை” என்று மகிழ்ச்சியோடு சென்றவர்கள் 300க்கும் மேற்பட்ட வர்களில் 220 பேர் பாதுகாப்பாகவும், 84 பேரைத் தேடி வருவதாகவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் (31.8.2026) பொதுப்பணி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தப்பித்து வந்த பெண் கூறுவது என்ன?
‘புனித யாத்திரை’ என்ற பயபக்தியோடும், நம்பிக்கை யோடும் சென்ற பயணி ஒருவர் அலறித் துடித்துக் கொண்டு கூறியது என்ன தெரியுமா? “நாங்கள் கைலாஷ் – மானசரோவருக்கு கடவுளை வழிபட்டு வரலாம் என்று “புனித யாத்திரை”ச் சென்றோம். திடீரெனப் புழுதிப் புயல் எழுந்தது. அதிசயமாகத் தெரிந்தது. அதனைக் கண்ட ஆச்சரியத்தோடு காட்சிப் பதிவு செய்தோம். அப்போது பெரிய அளவில் வெள்ளம் கரைபுரண்டுப் பெருக்கெடுத்தது. வேனின் ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கி ஓடிவிட்டார். அவசர அவசரமாக வேனில் இருந்து நாங்களும் இறங்கி ஓடினோம். அந்தப் பள்ளத்தாக்கிலிருந்து மேலே ஏற முயன்றோம். ஆண்கள் சிரமப்பட்டு எப்படியோ ஏறிவிட்டனர். பெண்களால் ஏற முடியாத நிலை. பாதி எறிய நிலையில் எங்களுடன் வந்த பெண் ஒருவர் தனது சேலையைப் பயன்படுத்தி எங்களை மேலே ஏற்றிக் காப்பாற்றினார்” என்றார்.
எந்தக் கடவுள்களை வழிபடுவதற்குக் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் சென்றாரோ – அவரைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் – எந்த உதவியையும் செய்திருப்பதாக அவர் குறிப்பிடவில்லை. பெண் ஒருவர் தனது சேலையை மேலிருந்து வீசி தங்களைக் காப்பாற்றினார் என்ற உண்மையை ஒப்புக் கொண்டதற்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.
இவ்வாறு இந்துக்கள் “புனித யாத்திரை” என்று கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து அங்கு செல்வதற்குக் காரணம் இருக்கிறது. கைலாய மலையும், மானசரோவர் ஏரியும் இந்துக்களின் முதன்மைக் கடவுள் என்று கூறப்படுகின்ற சிவபெருமானின் வசிப்பிடமாம்! சிவபெருமான் தனது மொத்தக் குடும்பத்தினரோடு அங்குதான் வாழ்கின்றாராம்! இதற்காகவே கைலாயத்தைக் காண வேண்டுமென்று பணம் செலவழித்துப் போட்டிப் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
ஏரியும் கடவுள் அவதாரமானது
பக்தர்கள் ‘புனிதம் மிக்கது’ என்று வழிபட்டு வருகின்ற மானசரோவர் ஏரி பிரம்மாவின் மனதில் உருவாகியபடி உருவான ஏரியாம்! மேலும் இந்த எரி கடவுளால் படைக்கப் பட்டது என்பதல்லாமல், ‘கடவுள் அவதாரம்’ என்று பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். “இங்கு இறந்து போனால் சொர்க்கம் நிச்சயம்” என்கின்ற குருட்டு நம்பிக்கையும் பக்தர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.
சிவன் குதூகலத்தோடு குடும்ப சகிதமாக அங்கு வாழ்ந்து வருவதாக நம்பிச் சென்ற இந்த பக்தர்கள் – கடவுளை நம்பிச் சென்றவர்கள் இத்தகையதொரு அவதிக்கு ஆளாகலாமா? “எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்வில்லையே, இத்தகைய பேரிடர் ஏற்படாமல் தடுத்து நம்மை ஆட்கொண்டு அருள் பாலிக்க வில்லையே” – ஏன் என்று சிந்திப்பார்களா? கடவுள் என்கின்ற ஒன்றோ – கடவுள் சக்தி என்பதோ கிடையாது என்பதை ஒத்துக் கொள்வார்களா? இன்னும் சொல்லப் போனால் இந்தப் பேரிடரில் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களும் முற்றாகப் பிளந்து – நாசமாயின என்பதுதான் உண்மையாகும்.
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பொறுப்பேற்குமா?
உயிர் பறிக்கின்ற ஆபத்தான “புனித யாத்திரை” என்கின்ற இப் பயணத்திற்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பக்தர்களின் பயணத்திற்கு உரிய ஏற்பாடுகளை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் செய்து தருகின்றது என்பது மிகவும் வெட்கக் கேடானதாகும். இந்தப் பயணம் முடிவதற்கு 21 நாள்கள் ஆகும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சகம் பக்தர்களிடம் கடுமையான அணுகுமுறைக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. நிபந்தனைகளை நிறைவு செய்வதிலும், ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்பதிலும் உயர் அதிகாரிகள் செய்கின்ற கெடுபிடிகளுக்கு அளவு இல்லை. பயணிக்கின்ற பக்தர்கள், அவசரக் காலங்களில் ஹெலிகாப்டரில் ஏறி உட்கார்ந்து வெளியேறுவதற்கு ஒப்புக் கொண்டு உறுதிமொழிப் பத்திரம் தர வேண்டுமாம்! இந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து உயிரிழப்புக்கு நேரிட்டால் சீனா உள்ளிட்டப் பிற நாடுகளுக்குரிய பகுதிகளில் அந்த உடலை எரியூட்டல் செய்வதற்கு ஒப்புக்கொள்ளவும் வேண்டுமாம்.
இவ்வளவு மக்கள் உயிரிழப்புக்கு ஆளான பேரிழப்புக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் என்ன பதிலைச் சொல்ல முடியும்? பொறுப்பேற்கத் துணியுமா? ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். காணாமல் போனவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள் என்று எண்ணிக்கை பல்லா யிரத்தைத் தொடுகின்றது. “பக்தி வந்தால் புத்திப் போய்விடும்” என்ற தந்தை பெரியாரின் கூற்றுக்கு ஏற்ப, கடவுள், பக்தி, வழிபாடு, வணங்கினால் நன்மையே நமக்கும் கிட்டும் என்று நம்பிக்கை வைத்து ஆர்வத்தோடு சென்ற பக்தர்கள் கொடூரமான முறையில் உயிரிழந்தது நம்மையும் – ஏன் எவரையும் கூட பெருந்துயர நிலைக்குத் தள்ளி மனதை கலங்கடிக்கத்தான் செய்யும்.
இயற்கையைச் சிதைத்து அழிக்கலாமா?
மலைகளைக் குடைந்து, மலைகளிடையே வெடிகளை வைத்துப் பிளந்து கனிம வளங்களைச் சுரண்டுகின்றனர். பல கி.மீ. தொலைவுக்கு மலையைச் சிதைத்துப் போக்குவரத்துப் பாதைகளை அமைக்கின்றனர். ‘ரிசார்ட்டுகள்’ என்று இயற்கை வளங்களுக்கு இடையே அமைத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றனர். நில அமைப்பை எவ்வாறெல்லாம் சிதைக்கின்றனர் என்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! அரசாங்கம் அமைத்துள்ள அளவையும் மீறி கற்கள், கனிமங்கள், மணலைத் திருடிக் கொள்ளையடிக்கின்றனர்.
இயற்கைப் பேரிடர்கள் இயல்பானவையே! அத்தகைய பேரிடர்கள் ஏற்படாமல் தடுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதென்பது – மனித சமூகம் இயற்கையைப் பேணி வளர்ப்பதில் காட்டுகின்ற அக்கறை மிக்கச் செயல்பாடுகளால் மட்டுமே முடியும்!
